0,00 INR

No products in the cart.

பிறந்த நாடா? புகுந்த நாடா?

விளையாட்டு அரசியல்

ஜி.எஸ்.எஸ்.

சமீபத்தில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் ஓர் இளம்பெண் ‘பிக் ஏர் ஸ்கீயிங்’ (Big air skiing) என்ற பனிச்சறுக்கு விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். சீன மக்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. கணிசமான அமெரிக்கர்களின் மனங்கள் கொதித்திருக்க வாய்ப்பு உண்டு. காரணம் அந்தப் பெண் அமெரிக்காவின் சார்பில் ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனாவின் பிரதிநிதியாகக் கட்சி மாறிவிட்டார்.
‘எய்லின் கூ’ (Eileen Koo) என்ற அந்தப் பதினெட்டு வயது சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் பிறந்தவர். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பனிச் சறுக்கு விளையாட்டில் முத்திரையைப் பதித்தவர். இரு வருடங்களுக்கு முன் இத்தாலி நாட்டு மலைப் பகுதியில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் கலந்து கொண்டு உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றவர். அப்போது அவரது பெயருக்கு அருகில் அமெரிக்கக் கொடிதான் இடம்பெற்றிருந்தது.

அவரது குழுவினர் அந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது எய்லின் கூ தன் அம்மாவுடன் சீனாவுக்கு பயணம் செய்தார். அமெரிக்கத் தந்தைக்கும் சீனத் தாய்க்கும் பிறந்த எய்லின் கூ அப்போது சீனாவுக்குச் சென்றது யாருக்குமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவ்வப்போது அவர் தன் தாயுடன் சீனாவுக்குச் சென்று வருவது வழக்கம்தான். ஆனால் அந்த முறை வழக்கத்துக்கு மாறாக ஒன்று நடைபெற்றது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ‘நான் சீனாவின் சார்பாக ஒலிம்பிக்ஸில் போட்டியிடப் போகிறேன். சீனாவுக்கு இப்போது புத்துணர்ச்சி தேவைப்படுகிறது’ என்றார்.

இதுபற்றி அப்படி ஒரு திட்டம் இருப்பதாக அவர் யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை என்பதால் அமெரிக்க விளையாட்டுக் களத்தில் பேரதிர்ச்சி உண்டானது. அதற்கு முன்னால் சில சமயங்களில் ‘அமெரிக்காவில் இருக்கும்போது நான் அமெரிக்கப் பெண். சீனாவில் இருக்கும்போது நான் சீனப் பெண்’ என்று கூறியதுண்டு.
‘பிறந்தது எங்கள் நாட்டில். வளர்ந்தது எங்கள் நாட்டில். விளையாட்டுப் பயிற்சியை முழுவதுமாக எடுத்துக்கொண்டது எங்கள் நாட்டில். இதற்காக பல வசதிகளை இங்குதான் செய்து கொடுத்தார்கள். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்துவிட்டார் கூ’ என்று அமெரிக்க பனிச்சறுக்கு அமைப்புகள் வட்டாரங்கள் புலம்பின. அதுமட்டுமல்ல எய்லின் கூ விளம்பர மாடலாகவும் எக்கச்சக்கமாக அமெரிக்காவில் சம்பாதித்து வருகிறார். எனினும் சமீப குளிர்கால ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை சீனாவுக்கு காணிக்கையாக்கி இருக்கிறாார் கூ.
ஆனால் விவரம் அறிந்தவர்கள் அமெரிக்கா மட்டும் இப்படி சுயநலமாக நடந்து கொண்டதில்லையா என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

கைலி ஹம்ப்ரீஸ்

கனடாவைச் சேர்ந்த ‘கைலி ஹம்ப்ரீஸ்’ (Kaillie Humphries) என்பவர் அந்த நாட்டில் தனக்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக கூறி அமெரிக்கக் குடிமகள் ஆனார். பாப்ஸ்லே (bobsleigh) என்ற விளையாட்டுப் பிரிவில் இவர் ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்றவர்.

தான் பிறந்த நாட்டின் பிரதிநிதியாகத்தான் ஒருவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியும் என்று விதி எதுவும் கிடையாது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது அவர் எந்த நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொள்கிறாரோ அந்த நாட்டின் குடிமகனா(ளா)க இருக்க வேண்டும் (அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்த எய்லின் கூவைப் பொறுத்தவரையில் அதிசயமாக சீனாவும் அவரைத் தனது குடிமகளாக முன்னமேயே அங்கீகரித்திருந்தது).

கஸ் கென்வொர்த்தி

அமெரிக்க அப்பாவுக்கும் பிரிட்டிஷ் அம்மாவுக்கும் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த பனிச்சறுக்கு சாம்பியனான ‘கஸ் கென்வொர்த்தி’ (Gus Kenworthy) என்பவர் 2014 குளிர்கால ஒலிம்பிக்ஸில் அமெரிக்காவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஆனால் இம்முறை பிரிட்டனின் சார்பாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்!
பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா செக் நாட்டில் பிறந்தவர். 1981 அமெரிக்கக் குடிமகள் ஆனார். ‘என் பிறந்த நாட்டை நான் நேசிக்கிறேன். அதில் ஜனநாயகம் தழைத்து இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி. என்றாலும் என் வீடு என்பது அமெரிக்காதான். 1975லிருந்து நான் இங்குதான் வசிக்கிறேன். இனியும் வசிப்பதாக இருக்கிறேன்’ என்றார்.

ஸ்டெபி கிராப்

மேற்கு ஜெர்மனியில் பிறந்த ஸ்டெபி கிராப், அந்த நாட்டின் பிரதிநிதியாகதான் ஒலிம்பிக்ஸில் பங்கு பெற்றார். பின்னர் மற்றொரு பிரபல டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி என்ற அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டபின் அமெரிக்கக் குடிமகள் ஆனார்.

உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தத்தான் ஒலிம்பிக்ஸ் உருவானது என்பார்கள். அதற்கு வேறொரு அர்த்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் மேலே குறிப்பிட்ட விளையாட்டு வீராங்கனைகள்! அதுதான் நம் கணியன் பூங்குன்றனார் அன்றே கூறிவிட்டாரே – யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...