0,00 INR

No products in the cart.

செல்ஃபி புள்ள!

சிறுகதை : எஸ்.சசிகலா
ஓவியம்: இளையபாரதி

அந்தி சாயும் நேரம் ! இரைக்காக சென்ற பறவைகள் கூட்டம் இருப்பிடத்திற்கு விரைந்தது. மேகங்கள் சற்றே மலையினூடே ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தது.

தள்ளு வண்டியினை மூச்சு வாங்க தள்ளிக்கொண்டே வீட்டிற்கு வந்தடைந்தாள் பொன்னுத்தாயி! வயசு நாற்பதுக்கு மேல். தலைமுடி பாதி நரைத்திருந்தது. ஒல்லியான உருவம். உடலின் தோலில் உள்ள சுருக்கங்கள் அவளின் உழைப்பிற்கு அத்தாட்சி. கண் பார்வை சற்றே மங்கியிருந்தது. புருஷங்காரன் குடிச்சு குடிச்சு மஞ்சள் காமாலை வந்து போயே சேர்ந்துட்டான். காலைல டிபன் , மதியானம் ஜூஸ், சாயங்காலம் பூ வியாபாரம்ன்னு தள்ளு வண்டில அவள் வாழ்க்கை ஓடுது. ஆனால், நாள் முழுக்க அயராது உழைக்கும் பொன்னுத்தாயிக்கு செல்லமாக அவள் வளர்த்த ‘செல்லபுள்ள’ ய நினைச்சாதான் கவலை.

அஞ்சாவது வரைக்கும் தான் படிப்பு. அதுக்கப்புறம் சுத்தமா படிப்பு ஏறல. பொறவு ஒரு நாள் கட்சி ஆபிசு பக்கம் போகவே, கட்சி ஆளுங்க கூப்பிட, போஸ்டர் ஒட்டறது, கட்சி கூட்டம் பேனர் கட்டுறது என எல்லா எடுபிடி வேலையும் செஞ்சுக்கினு கட்சி ஆபிசே கதின்னு சுத்திக் கிட்டு இருக்கும் செல்லபுள்ள.

“தலைவர் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது. தலைவர் னா அதுக்கு அன்பு, பாசம், வெறி, அவ்வளவு ஏன் உசுரு. தலைவர் பத்தி ஏதாவது பேசினா அவ்வளவுதான். என்னையே அடிக்க கை ஓங்குது,” என மனம் புலம்பிக் கொண்டு, வண்டியை ஓரங்கட்டி விட்டு, அந்த குடிசை வீட்டினுள் நுழைந்து சிம்னி விளக்கை ஏற்றி வைத்து வேலையை தொடங்கினாள் பொன்னுத்தாயி.

நேரம் ஆக ஆக பசி வயிற்றைக் கிள்ளியது. இருப்பினும் செல்லபுள்ள வந்த பிறகே சாப்பிடனும்னு வைராக்கியத்தோடு இருந்தாள்.வாசலிலே காத்திருந்தவள் சற்றே அயர்ந்தும் விட்டாள். ராப்பொழுது 12 இருக்கும். காலடி சத்தம் கேட்டு கண் திறக்க எதிரே செல்லபுள்ள.

“வா ராசா, என்னய்யா இம்புட்டு நேரமாகிப் போச்சு? ரெண்டு இட்லியும் , கொஞ்சம் சோறும் வெச்சிருக்கேன்யா. வா சாப்டலாம்,” என அவள் அழைக்க , “எனக்கு இட்லியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்,” என செல்லபுள்ள வெடுக்கென பேசினான். பொன்னுத்தாயி கண்கள் கலங்கியது.

வேகமாக வந்த செல்லபுள்ள அந்த இரும்புப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளை வீசி எறிந்தான். பெட்டியின் வெளியே தலைவர் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். “தலைவரோட நின்னு செல்ஃபி எடுக்க ஒரு சட்டை கூட உருப்படியா இல்லை. நல்ல சட்டையும் , செல்போனும் வாங்கணும். எனக்கு அவசரமா ஐயாயிரம் ரூபா வேணும்…” என்றான்.

“அம்புட்டு பணத்துக்கு நான் எங்கையா போவேன்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. நாளைக்கு சாயங்காலம் எனக்கு அவசரமா வேணும். நீ மட்டும் காசு தரலென்னா நான் அகழியில விழுந்திடுவேன்,” என பயமுறுத்திவிட்டுச் சென்றான் செல்லபுள்ள. பொன்னுத்தாயி க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. சிறிது நேரத்தில் பொழுதும் புலர்ந்தது.

வழக்கம் போல் வீடு பெருக்கி, மொழுகி, வாசல் தெளித்து , கோலம் போட்டு இத்யாதி பணிகளை முடித்துவிட்டு வண்டியை நன்றாக சுத்தம் செய்து சிற்றுண்டிக்கு தேவையான அடுப்பும், பொருட்களும், பாத்திரங்களையும், சரிபார்த்து எடுத்துக் கொண்டாள். பிரதான சாலைக்கு. வழக்கத்தை விட இன்று அதி வேகமாக தள்ளிக் கொண்டு போக, மூச்சும் அதி வேகமாக வாங்கியது.

வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை வைத்து, ஒருபக்க அடுப்பில் இட்லி பானையை வைத்து விட்டு, மறு அடுப்பில் தோசைக் கல்லை போட்டு , எண்ணெய் விட்டு சற்றே வெங்காயத்தைத் தேய்த்து டிபன் கடை ஆரம்பித்தாள். இரவு செல்லபுள்ள சொன்ன வார்த்தைகள் அசரீரியாக ஒலித்துக் கொண்டிருந்தது.

தோசைக் கல்லில் தேய்த்த வெங்காயம் போல் மனம் சுருங்கி போயிருந்தது.

சற்று நேரத்தில் சுட சுட இட்லி, தோசை, பொங்கல் , வடையுடன் தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என காலை நேர சிற்றுண்டி தயார் நிலையில் இருக்க, கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் மிகவும் பிஸி யாக இருந்தது. சொற்ப நோட்டுக்கள் தான் கல்லா பெட்டியில் சேர்ந்தது. பாதி பேர் பசிக்காக கடன். ‘ரெண்டு நாள்ல தரேன், ஒரு வாரத்தில் தரேன்,’ என சிலர் சொல்ல, தான் ஏமாற்ற படுகிறோம் எனத் தெரிந்தும் ஏமாந்தாள். அடுத்த அரை மணியில் தட்டுகள், மாவுப் பாத்திரங்களை கழுவி வண்டியை சுத்தம் செய்து முடிக்கவும் உச்சி வெயில் தலையில் சுருக்கென்று அடிக்கவும் சரியாய் இருந்தது.

பொன்னுத்தாயிக்கு மயக்கம் வருவது போல இருந்தது. சற்றே பாத்திரத்தில் இருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து மடக் மடக் கென குடித்தாள்.

ஒரு சில மணித்துளிகளில்

மதியம் சர்பத் கடை வண்டியின் அருகிலேயே வைத்தாள். அருகில் இருந்த கடையில் இருந்து ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டியை வாங்கிக் கொண்டு , மர ஸ்டாண்டில் வைத்துவிட்டு சர்பத்துக்குத் தேவையான ஜக்கு, தம்ளர்களை அடுக்கி வைத்துவிட்டு எலுமிச்சை பழங்களை ஒன்றன் மீது ஒன்றாக பிரமிடு போல் அடுக்கி வைத்து வெய்யிலில் காத்திருக்க, ஒருசிலர் சர்பத் வாங்கி தாகத்தை தனித்துக் கொண்டார்கள். அந்தி சாயும் வேளையும் வர , பெட்டியில் சொற்ப சில்லரைகளும் , ரூபா நோட்டுக்கள் ஐந்தும் பத்துமாக அடிக்கின்ற வெயிலுக்கு சுருண்டு போயிருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் பூ வியாபாரத்திற்கும் ஆயத்தமானாள். இத்யாதி சாமான்களை வண்டியில் வைத்து விட்டு, ஒரு பெரிய சிமெண்ட் கம்பெனி விளம்பரம் பொருந்திய துணி கவரை கொண்டு மூடிவிட்டு, பூக்களை வாங்க மார்கெட்டிற்குள் நுழைந்தாள் பொன்னுத்தாயி.

வாடிக்கையாய் வாங்கும் பூக்காரரிடம் கூடையில் உதிரிப் பூக்கள் படிக் கணக்கில் வாங்கி, தொடுக்க நார்களையும் வாங்கிக்கொண்டு பக்க வாட்டுள்ள பகுதியில் வேகமாக தொடுக்க ஆரம்பித்தாள். கை கொஞ்சம் பதற்றத்துடன் இருக்க சமாளித்து கொண்டு தொடுத்து முடித்தாள்.

கூடையை எடுத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று “மல்லிமா மல்லி,” என கூவி கூவி விற்றாள். சில்லரை காசுகளை போட்டு வைத்த சுருக்கு பை போல் அவளின் ஒருநாள் வாழ்க்கை நெற்றி சுருக்கங்களோடும், வயிற்றுச் சுருக்கங்களோடும் பயணித்தது. இன்று அவளுக்கு பசிக்கவும் இல்லை.

ஆனால் செல்லபுள்ள சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும் அசரீரி போல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அருகில் உள்ள அடகு கடைக்குச் சென்று சுருக்குப் பையில் பத்திரமாக வைத்திருந்த பழைய அறுந்து போன, பல துண்டுகளாக சிதறிபோன தங்க சங்கிலியை அடமானம் வைத்து சொற்ப பணம்கிட்ட சுருக்கு பையினுள் வைத்து வண்டியை இழுத்துக் கொண்டு வீட்டிற்க்கு திரும்பினாள்.

திக் திக் என அடித்த மனம் இப்போது அமைதியானது. உடல் நலம் சரியில்லாததால் , சற்றே திண்ணையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் வந்த செல்லபுள்ள பணத்தை வாங்கிக்கொண்டு பறந்தான்.

அந்த ஞாயிறன்று ஞாயிறின் தாக்கம் அதிகமாயிருந்தது. பராமரிப்பின்றி பல ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக புதுமணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடைநிலைத் தொண்டன் முதல் வட்டம் , மாவட்டம் , ஒருங்கிணைப்பாளர், செயலாளர் என பல குழுக்கள் ஒன்றாக இணைந்து ஆயத்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

“டேய் செல்லபுள்ள! இங்க வா!” என மாவட்டம் அழைக்க, தனது வேலையை விட்டு ஓடி வந்தவன் , “அண்ணே, மூங்கில் தடுப்பு நல்லா திடமா கட்டியாச்சுண்ணே! ஊர் எல்லையிலிருந்து வழி நெடுக நம்ம கட்சி கொடியும் கட்டியாச்சுண்ணே! தலைவரோட பேனரும் நாலா திசையிலும் பிரம்மாண்டமாய் அமைச்சாச்சு அண்ணே! அப்புறம் மைக் செட் வந்தாச்சுண்ணே! கனெக்சன் கொடுத்திட்டு இருக்காங்க அண்ணே! அப்புறம் மேடையில நீங்க சொன்ன மாதிரி அஞ்சு சேர் போட்டாச்சு அண்ணே! அலங்காரமும் முடிஞ்சாச்சு அண்ணே!” விடியற்காலையில் இருந்து மதியம் வரை தான் செய்த வேலைகளை களைப்போடு இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் மூச்சுவிடாமல் ஒவ்வொன்றாகச் சொல்ல ,

மாவட்டமோ , மெதுவாக இதமான குரலில் , “இத பாரு நம்ம பாபு கிட்டெருந்து சாவி வாங்கி , மைதானத்தின் பிரத்யேக அறையை காட்டி, நல்லா சுத்தம் பண்ணிடு. என்ன புரியுதா? இன்னும் கொஞ்ச நேரத்துல வாட்டர் கேன், பிரியாணி பொட்டலம் வந்ததும் இறக்கி வைக்கணும் புரியுதா.. தலைக்கு 200 ரூபா பேசி கூட்டம் வரவழைச்சிருக்கோம். கூட்டம் முடியரவரைக்கும் யாரும் எழுந்து போகாம பாத்துக்கணும் என்ன புரிஞ்சுதா?” என்றார்.

அடுத்த அரைமணி நேரத்தில் சுத்தம் செய்து முடிக்கவும், வண்டியிலிருந்து பிரியாணியை இறக்கி வைத்து விட்டு சாவியை பாபுவிடம் ஒப்படைக்கவும் சரியாயிருந்தது.

மாவட்டத்தின் அருகில் சென்று “வேலை முடிஞ்சுதுநா….,” என்றான் செல்லபுள்ள.

“சரி நீ போய் கூட்டம் பக்கம் போய் இரு…”

“அப்புறம் … அண்ணே…, என தயங்கினான் செல்லபுள்ள

“ என்ன காசு எதாவது வேணுமா?”

“இல்ல அண்ணே.. அது வந்து …”

“ஓ செல்ஃபி தானே தாராளமா எடுத்துக்கலாம். தலைவர் உள்ளம் உங்களைப் போன்ற தொண்டர்களுக்கு தான்,” என மாவட்டம் கூறக் கேட்ட செல்லபுள்ள எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தான்.

செல்லபுள்ள பத்திரப் படுத்திய தனது புது சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். புதிய செல்போனும் கையில் எடுத்து வைத்திருந்தான் . மணி சரியாக மதியம் 2.50. தலைவர் கார் மைதானத்தில் வலம் வந்தது. தலைவர் தனது இருகரங்களை கூட்டத்தை பார்த்து கை கூப்பினர் . பின் மகளிர் அணி ஆரத்தி எடுக்க, தலைவர் மேடை ஏற, ஒரு பக்கம் தலைவர் வாழ்க கோஷமிட, மறுபக்கம் ஆரவாரம், விசில் சத்தம் கேட்க தலைவர் கைகூப்பி வணங்கி தன் இருக்கையில் அமர்ந்தார்.

செல்லபுள்ள மேடை அருகே வருவதை கவனித்த மாவட்டம், அவனை மக்கள் கூட்டத்தை கண்காணிக்க செய்கை காட்டி திரும்பினார். பிரச்சாரம் அரைமணி நேரம் சூடு பிடித்து முடியும் தருவாயில், வணக்கம் கூறி தலைவர் விடைபெற, பெரிய தலைகள் தலைவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

பின் தலைவர் இறங்க, செல்லபுள்ள செல்ஃபி எடுக்க யத்தனிக்க, கூட்டத்தில் யாரோ செல்லபுள்ள ய கீழே தள்ளிவிட, அவன் மண்தரையோடு ஐக்கியமாக, செல்போனும் கீழே விழுந்து சிதறியது. செல்லபுள்ள கீழே விழுந்தது கூட அறியாது தலைவர் உட்பட அவன் மீது செருப்புடன் கால் தடங்கள் பதிக்க, எழுந்திருக்க முடியாமல் திணறினான்.

சிறிது நேரத்தில் கூட்டம் மைதானத்தின் பிரத்யேக அறையில் அலைமோதியது. சிதறிய செல்ஃபோன் பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்தான். மைதானத்தின் பின் பகுதியில் ஒற்றை மரம் தனியாக நின்று கொண்டிருந்தது. அதன் ஆணிவேர் பகுதியில் அமைதியாய் உட்கார்ந்தான் செல்லபுள்ள. புதிய சட்டை கறை படிந்து இருந்தது. ஆனால் கறை படிந்த மனம் தெளிவு பெற்றது.

ஆம்! ஒருகணம் பொன்னுத்தாயியை நினைத்து மனம் கலங்க , கண்ணீராய் வெளியேறியது. செல்லபுள்ளயின் கால் தடங்கள் பொன்னுத்தாயைக் காண விரைந்தது!

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்: பிள்ளை கதை: ச. மணிவண்ணன்  வாடகை ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். "சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...