உபாயமாகும் சிவாய மந்திரம்!

உபாயமாகும் சிவாய மந்திரம்!
Published on

மகா சிவராத்திரி

– எம்.கோதண்டபாணி

ண்ட சராசரங்களையும் தமது கண்ணசைவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அம்மையப்பனாம் சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் பலவிருந்தாலும் அவற்றில் மிகவும் முக்கியமானது மகாசிவராத்திரி விரதமாகும். இந்த விரதம் நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐவகையாக விளங்கினாலும், அவற்றில் உன்னதமானதாகக் கருதப்படுவது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அனுசரிக்கப்படும் மகாசிவராத்திரி விரத தினம்தான். இம்மையில் சுகமும் மறுமையில் பிறவாப் பேறும் தரும் மகத்துவமிக்கது மகாசிவராத்திரி வழிபாடு.

யுக முடிவில் ஏற்பட்ட பிரளயத்தில் உலக உயிர்கள் அனைத்தும் சிவத்தில் ஒடுங்க, அனைத்துயிர்க்கும் தாயாக விளங்கும் அன்னை பரமேஸ்வரி, அன்று இரவு முழுவதும் பலவித அர்ச்சனைகள் செய்து சிவபெருமானிடம் மீண்டும் உலக சிருஷ்டிக்காக வேண்டி பூஜித்தாள்.

ஈசனிடம் அம்பிகை வைத்த வேண்டுதலே மீண்டும் உலக சிருஷ்டிக்கான வழியை வகுத்துத் தந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்னை சிவகாமி, ஈசனை வழிபட்டதாலேயே அந்த இரவுப் பொழுது சிவபெருமானின் பெயராலேயே, 'மகாசிவராத்திரி' என வழங்கலாயிற்று.

அன்றைய இரவுப் பொழுதில் அம்பிகை இறைவனை பூஜித்து பல்வேறு பேறுகள் பெற்றதைப்போல், 'மகாசிவராத்திரி இரவில் நான்கு யாமமும் கண்விழித்து யார் ஒருவர் சிவபெருமானை பூஜித்தாலும் அவர்களின் வேண்டுதலை பூரணமாக நிறைவேற்றித் தந்து, இறுதியில் மோட்சப் பதவி எனும் சொர்க்கத்தையும் அவர்களுக்குத் தந்தருள வேண்டும்' என்ற வேண்டுதலையும் அம்பிகை சிவபெருமானிடம் வைத்தார். அதனை ஏற்று, அவ்வாறே தந்தருளுவதாக அன்னை பார்வதிக்கு, ஈசன் உவப்பாய் வாக்குறுதி தந்த பெருமைமிகு நல் இரவு சிவராத்திரி தினமாகும்!

மிருகங்களை வேட்டையாடிக் கொன்று புசிக்கும் வேடன் ஒருவனை கொடிய புலி ஒன்று துரத்தி வர, உயிர் பிழைக்க எண்ணி மரம் ஒன்றின் மீது ஏறினான் வேடன். அவனைக் கொன்று புசிப்பதே இன்று தமக்கான வேலை என உறுதியோடு மரத்தின் அடியில் காத்திருந்த புலியிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள இரவுப் பொழுதைத் தூங்காமல் கழிக்க எண்ணிய வேடன், தாம் அறியாமலேயே அம்மரத்தின் இலைகளைப் பறித்து கீழே போட்டு, பசியோடு அந்த இரவைக் கழித்தான்.

பொழுது புலர்ந்ததும் தம்மைத் துரத்தி வந்த புலி அங்கு இல்லாததைக் கண்டு மகிழ்ந்த வேடன், தாம் ஏறி அமர்ந்திருந்தது ஒரு வில்வ மரம் என்பதையும், தாம் பறித்துப் போட்ட வில்வ தளங்கள் அம்மரத்தின் கீழே இருந்த ஒரு சிவலிங்கத்துக்கு அர்ச்சனையாகி இருந்ததையும் அறிந்தான். ஆனால், தாம் மரத்தின் மீது உறங்காமல் கழித்தது ஒரு மகாசிவராத்திரி பொழுது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு பூஜைக்கான பலனை தெரிந்து செய்து இறைவனின் அருளைப் பெறுவதை விட, அந்த பூஜையைக் குறித்த எந்த விவரமும் தெரியாமல் இறைவனை பூஜிப்பது என்பது பல மடங்கு தெய்வக் கடாட்சத்தைப் பெற்றுத் தரும் அல்லவா? அப்படித்தான் நிகழ்ந்து வேடன் செய்த சிவ பூஜைக்கான புண்ணியப் பலனும்!

அறியாமல் செய்த அர்ச்சனை என்றாலும், அந்த வேடன் செய்த சிவ பூஜையால் உளம் மகிழ்ந்தார் ஈசன். உயிர்க்கொலைகள் பல புரிந்து பாவக் கணக்கின் பல பக்கங்களை சம்பாதித்து இருந்த அந்த வேடனுக்கும், அவனது வாழ்வின் இறுதியில் மோட்சப் பதவியை அருளினார் சிவபெருமான்.

'தம்மைவிட உயர்ந்தவர் யாருமில்லை' என செருக்குற்ற நான்முகனுக்கும் திருமாலுக்கும், 'அனைவரையும் விட உயர்ந்தவர் தாமே' என்று உணர்த்த லிங்கோத்பவராக விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்தது ஒரு மகாசிவராத்திரி தினத்தில்தான்.

இது தவிர, வேடன் கண்ணப்பனின் கண்ணினைப் பெற்று, அவனது சிவ பக்தியை உலகுக்கு உணர்த்த திருவிளையாடல் புரிந்தது, அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றது, பகீரதன் தனது முன்னோர்கள் மோட்ச கதி பெற கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தது, தனது பக்தன் மார்கண்டேயனுக்காக சிவபெருமான் காலனை தமது காலால் உதைத்தது என சிவராத்திரி தினத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஈசனின் திருவிளையாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!

பாபங்களைப் போக்கி, புண்ணியத்தைப் பெருக்கும் இந்த விரதத்தை மேற்கொள்வோர் மகாசிவராத்திரி தினத்துக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி சிவ நாமம் ஜபித்துத் தயாராக வேண்டும். மகாசிவராத்திரியன்று அதிகாலை நீராடி, ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அன்று முழுவதும் சிவ சிந்தனையுடன் பொழுதைக் கழிக்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து நான்கு யாமங்களிலும் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை, பூஜை, அர்ச்சனை ஆகியவற்றில் கலந்து கொண்டு, பெருமானின் அருளைப் பெற வேண்டும்!

'கோயில் கூட்ட நெரிசலில் சுவாமியை தரிசிக்க முடியவில்லையே' என கவலைப்பட வேண்டாம். சிவாலயத்தில் எங்காவது ஓர் இடத்தில் அமர்ந்து இரவு முழுவதும் ஈசனை மனதில் நினைத்து சிவ மந்திரத்தை உச்சரித்தபடியே வழிபட்டால் கூட சிவராத்திரி விரதத்தை முழுமையாக அனுசரித்த பலனைப் பெறலாம்.

மேலும், வயது மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஆலயத்துக்குச் சென்று வழிபட இயலாதவர்கள் வீட்டிலேயே அமர்ந்து சிவ மந்திரத்தை ஜபித்து, இந்த விரதப் பலனை முழுமையாகப் பெறலாம். மறுநாள் காலை நீராடி, சிவனடியார்களோடு சேர்ந்து உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.

இங்கங்கு என்றில்லாமல் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஈசன், உண்மையான பக்தியைத் தவிர, யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. வருடத்தின் அனைத்து சிவராத்திரி விரதத்தையும் அனுசரித்த பலனை மகாசிவராத்திரி ஓர் இரவு வழிபாடு பூரணமாகத் தந்தருளுகிறது. இத்தினத்தில் ஈசனை மன நிறைவோடு பூஜிக்கும் அன்பர்களுக்கு அருள உளம் நிறைந்த பூரிப்போடு இறைவன் பூமிக்கு வருவதாகவும், இன்று இரவு முழுவதும் சிவபெருமானை தியானித்து வணங்கினால் சகல சம்பத்துகளையும் பெறலாம் எனவும் ஞான நூல்கள் தெரிவிக்கின்றன!

காசிவராத்திரி விரத வழிபாட்டால் அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்கள் அனைத்தும் தொலைகின்றன. ருண, ரோகங்களை நீக்கி, வேண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றும் மகத்தான விரத வழிபாடாக இது திகழ்கிறது. இன்றைய தினத்தில், 'சிவாய நம' என சிந்தித்திருந்தால் 'அபாயம்' ஒருநாளும் நெருங்காது. மாறாக வாழ்வில், 'உபாயம்' ஏற்படும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். மகாசிவராத்திரி பூஜையில் (1.3.2022) சிவ சிந்தனையைப் பெருக்கி, வாழ்வில் வளமும் நலமும் பெற்று உய்வோம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com