கோடை காலத்தில் கூந்தலைப் பாதுகாக்க 5 வழிகள்!

கோடை காலத்தில் கூந்தலைப் பாதுகாக்க 5 வழிகள்!
Published on
-மஞ்சுளா 

வெயில் காலம் என்றாலே கூந்தல் பிரச்னைதான் அனைவருக்கும். அதுவும் நம் ஊரில் இருப்பது  போல வெப்பமான வானிலையில்,  கூந்தலை பாதுகாப்பது கடினமே. ஒன்று அதிகமாக உலர்ந்து போய் விடும். இல்லையேல்  எண்ணெய் கசிந்து, வியர்வையுடன் சேர்ந்து பிசு பிசு என ஆகிவிடும். நம்மால் தினமும் தலைக்கு  குளிக்கவும் இயலாது அல்லது முடியை திருத்தவும் இயலாது. ஏனெனில், நம் பாரம்பரிய உடைகளுக்கு  பூச்சூடிய நீள  சடையே அழகாக இருக்கும்.  இப்படியிருக்க முடி அதிகம் கொட்டாமல், அதே சமயம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டே எப்படி  ஆரோக்கியமாக கூந்தலை வைத்திருப்பது?
வாருங்கள் காணலாம்…

தயிர் மாஸ்க்

கோடை காலத்திலும் பொடுகு பிரச்சனை  வரத்தான் செய்கிறது. அதுவும் குறிப்பாக நமது வேர்களில் அதிக வியர்வை அல்லது,  எண்ணெய் கசிந்தால், பொடுகு மற்றும் அரிப்பும்  வர வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரு எளிதான வழி என்னவென்றால் தயிரை உச்சி மண்டையில் மெதுவாக தடவ வேண்டும். அதுவும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலமானது பொடுகை நீக்குவது  மட்டுமல்லாது, நம் உடலுக்கும் குளிர்ச்சி அளிக்கிறது.  இரசாயன ஷாம்பூகளை  பயன்படுத்துவதைக் காட்டிலும், இது போல வாரம் ஒரு முறை செய்து, பிறகு குளித்தால் cool ஆக இருக்கும்.

கற்றாழை மாஸ்க்

சூரியனில் இருந்து வெளிப்படும் UV கதிர்கள், நமது கூந்தலின் ஈரப்பதத்தை எடுத்து விடும். விளைவு உலர்ந்த கூந்தலும், முடி வெடிப்பும் தான் (Split ends). இதற்கு நல்ல தீர்வு கற்றாழை. அதில் உள்ள நீர் சத்தானது கூந்தல் புற்றுயிர் பெற உதவும் . அது மட்டுமல்லாது தலையில் ஏற்படும் சூடு கட்டிகளுக்கும் கற்றாழை ஒரு அருமருந்து. அவ்வப்போது உச்சியிலிருந்து, முடியின் வேர்கள் வரை கற்றாழை கூழை தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் வறண்டு போகாமல் ஊட்டமாக  இருக்கும்.

புதினா மாஸ்க்

புதினா இலைகளால் ஆன கலவை  கூந்தலுக்கு மிகவும் நல்லது. புதினா இலைகளுக்கு  நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகம். வெயில் காலத்தில், நமது தலையில் கசியும் வியர்வையானது பாக்டீரியாக்களை உச்சந்தலையில் உண்டு பண்ணலாம். மாதம் ஒரு முறை இந்த மாஸ்க்க்கை உச்சந்தலையில் தடவ, நம் கூந்தல் மற்றும் அதனுடைய வேர்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டை,  ஆலிவ்  மற்றும் பாதாம் எண்ணெய்

இவை மூன்றுமே நாம் அறிந்த கூந்தல் மருந்துகள் தான். வெயில் காலத்தில் உலர்ந்து போன கூந்தலை சீரமைக்க மாதம் ஒரு முறையாவது இந்த மாஸ்க்கை பயன் படுத்தலாம். முட்டையின் புரத சத்தும், இந்த எண்ணெய்களில்  உள்ள இதர விட்டமின்களும் முடிகொட்டும் பிரச்னைக்கு உகந்தது.

சுத்தமான கூந்தலில், ஒரு முட்டை, தலா ஒரு தேக்கரண்டி  இந்த எண்ணெய்களும் சேர்த்து நன்றாக அடித்து, தலையில் ஒரு 30 நிமிடங்கள் ஊறிய பிறகு, ஒரு மைல்ட்  ஷாம்பூ கொண்டு குளித்தால் கூந்தல் அடர்த்தியாக, பளபளவென மிளிரும்.

மேலும் ஒரு டிப் என்னவென்றால், குளிக்கும் போது சிறிது பன்னீர் சேர்த்து குளித்தால், முட்டையிலிருந்து வரும் சிக்கு வாடை குறையும்.

ஷாம்பூவிற்கு பதில் 

கோடை காலத்தில் நாம் அடிக்கடி தலை குளிக்க நேரும்.  அதனை தவிர்க்க இயலாவிட்டாலும், ஷாம்பூவிற்கு பதில் நாம் ஆப்பிள் சிடார் வினிகர் பயன் படுத்தலாம். ஒரு பங்கு வினிகருடன், இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து, ஷாம்பூவிற்கு பதிலாக பயன்படுத்தினால்,  நம் முடியில் சேர்ந்திருக்கும் எண்ணையை போக்கும், அதே நேரம் கூந்தல் உலர்ந்து போகாமலும் காக்கும்.

அன்பு வாசகீஸ், மேற்கூறிய அனைத்து மாஸ்குகளையும் உங்கள் உடலுக்கும், முடி வாகிற்கும்  ஏற்றதா  என்று பார்த்து பயன்படுத்தவும்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com