0,00 INR

No products in the cart.

மரணத்தையும் ஜெயித்த மனோவலிமை!

-சேலம் சுபா

‘ஆறு மாதம் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்,’ இது மருத்துவரின் அறிவிப்பு. ‘ஆறு மாதம் வரை ஏன் வெய்ட் பண்றே ? எதையாவது சாப்பிட்டு இப்பவே செத்துடு,’ என்று சுற்றத்தாரின் அன்பில்லா வார்த்தைகள் காதுகளில். கேன்சரின் தாக்கத்தால் தாங்க முடியாத வலி உடலில்… இத்தனையும் சுமந்தாலும் தான் பெற்ற பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பெண்ணின் மனதில்.

யார் இவர் ?
பொ
துவாக கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று வேதனையில் வீழ்ந்து விரைவில் மடிவார்கள். அல்லது வீறு கொண்டு எழுந்து தன்னைப் போன்றவர்களுக்கு முன் மாதிரியாய் வாழ்வார்கள். இதில் கேரளா ஒட்டப்பள்ளத்தில் வசிக்கும் புவனேஸ்வரி இரண்டாவது ரகம்.

தன்னைக் களவாட வந்த எமனிடமே துணிச்சலாக வரமுடியாது உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று சொன்னவர். இவரின் போராட்டக் குணத்தைக் காணும் எவரும் ஆச்சரியத்தில் வார்த்தைகளின்றி மலைத்துப் போவதுடன் தன்னம்பிக்கையும் பெறுவார்கள் என்பது உறுதி. சிங்கப் பெண் எனும் சொல் இவருக்கு நிச்சயம் பொருந்தும். முகம் முழுக்க புன்னகையுடன் நம்மை வரவேற்றார்.

இவரை சந்தித்து உரையாடியதிலிருந்து இனி…

என் பிறந்த ஊர் திருச்சி, புகுந்த ஊர் கேரளா. அப்பா  வசதியானவர். நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். திருச்சியில் என்னைப்பார்த்து, பிடித்துப்போய் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று என் கணவர், அவர் அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வந்தார் . நாங்களும் பூர்வீகம் கேரளா என்பதால் எங்கள் பெற்றோர் விருப்பத்துடன் நடந்தது என் திருமணம். கணவர் பெயர் சூரியப்பிரகாஷ் நாராயணன் .பில்டிங் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் பணி செய்கிறார் .

திருமணமாகி இப்போது 27 வருடங்கள் ஆச்சு. திருச்சியில் எங்கள் வாழ்க்கையைத் துவங்கினோம். அழகான பெண் குழந்தைகள் பிறந்தார்கள். ஐந்து வருடங்கள் சுகமான வாழ்க்கை. விதி வலியது இல்லையா? நான் மட்டும் தப்ப முடியுமா என்ன ? ஒரு முறை சமயபுரம் போய் விட்டு வரும் வழியில் கல் தடுக்கி வண்டியிலிருந்து கீழே விழுந்து கன்னத்தில் அடிபட்டது . சாதாரணமாகத் தான் நினைத்தோம் . சில நாட்கள் சென்றதும் கன்னத்தில் சின்னக்கட்டியாக  அழுந்துவதைக் கண்டேன்.

டாக்டரிடம் சென்றபோது அது வெறும் கொழுப்புக்கட்டிதான் என்று மருத்துகள் தந்தனர். ஆனால், நாளாக நாளாக கட்டியின் அளவு பெரிதாக, அலோபதி ஆயுர்வேதா என எல்லா  முறை வைத்தியமும் பார்த்தேன். கட்டியை அகற்றினால் முகம் எப்படி ஆகுமோ? எனும் பயத்தில் இருந்தேன் . ஒரு கட்டத்தில் மருந்துகளின் விளைவால் யூரின் அடங்காமல் வருவது , காது மூக்கு போன்றவைகளில் ரத்தம் வருவது , அடக்கமுடியாத தலைவலி போன்றவைகளால் அவஸ்தைப் பட்டேன் . அதிக மன உளைச்சலில் சொல்லாமலே வீட்டை விட்டு வெளியேறியது உண்டு . தலைவலி வரும்போது என் தலைமுடியை கதவின் இடையில் வைத்து இழுக்க சொல்வேன் . தாங்க முடியாத வலிகள் அவை. அத்தனையையும் என் பெண்களின் நினைவால் தாங்கினேன். நான் உயிரோடு இருக்க வேண்டும் என்று கடவுளிடம் சண்டையிட்டேன். நான் கடவுள் என்று சொல்வது இந்த பிரபஞ்சத்தைத்தான். நாம் நினைக்கும் எண்ணங்கள் பிரபஞ்சம் வழியே நிறைவேறும்.

கடைசியில் கட்டியை அகற்றி சோதனைக்கு அனுப்பியபோதுதான் தெரிந்தது கான்சர் என்று. கன்னத்தில் பட்ட அடியினால் அங்கிருக்கும் எச்சில் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அங்கு கேன்சரை தந்துள்ளது. நீ இன்னும் ஆறு மாசம்தான் உயிரோட இருப்பேன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆறு மாசம் வரைக்கும் எதுக்கு? இப்பவே எதையாவது சாப்பிட்டு செத்துப்போன்னு சொன்னாங்க சிலர். நான் ஒத்துக்கல. நான் 87 வயசு வரைக்கும் வாழ்வேன்னு எதிர்த்து நின்னேன். காரணம் என் குழந்தைகள்.

என் பெரிய பொண்ணு மூணாவது படிக்கிறப்ப எனக்கு கேன்சர் வந்தது. என் அத்தனை வலிகளையும் பொறுத்து, எனக்கும் என் சின்னப் பொண்ணுக்கும் ஒரு தாயாக மாறியவள் என் மூத்த மகள் சங்கவிதான். அப்பவே என் ரெண்டு பொண்ணுகளுக்கும் சமையல் முதல் அனைத்தையும் கற்றுத் தந்தேன். முக்கியமாக பிரச்சனை என்றால் இந்த உலகத்தை சமாளிக்கும் துணிவை வளர்த்தேன். நான் இல்லாமல் என் குழந்தைகள் எவரிடமும் கை ஏந்தி நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

கணவருடன்…

என் கணவர் ரொம்ப இன்னொசென்ட். அவரால சின்னப் பிரச்சனையக் கூட தாங்க முடியாது. எனக்கிருந்த மனோதைரியம் அவருக்கு இல்ல. தப்பு அவருடையது இல்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி. எனக்கு வந்ததோ பணக்கார வியாதி. அவர் என்ன பண்ணுவார் ? ஆனா பாசம் எங்க மேல அதிகம். என்னால அவரும் கஷ்டப்பட்டு, என்னைச் சுற்றி இருப்பவர்களும் வெறுப்பாக என்னைப் பார்ப்பது பிடிக்காமல் வெளியேவந்தேன்.

என் குழந்தைகளை அழைச்சுக்கிட்டு, தனியே தங்கி, பாண்டிச்சேரி ஜிப்மரில் ட்ரீட்மெண்ட் பார்த்தேன். கேன்சர் என்று தெரிந்தபின் மருத்துவர்கள் கீமோதெரபி செய்ய சொன்னார்கள். அதற்கும் மறுத்து விட்டேன். காரணம் அதன் பின்விளைவுகள் பற்றிக் கேள்விபட்டதுதான்.

திருச்சியில் என் தோழி நீ இறப்பது நிஜமோ இல்லையோ நான் சொல்வது போன்ற உணவு முறையை கடைப்பிடி. இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்று சொல்லி எனக்கு தைரியம் தந்து புதிய உணவு முறையை அறிமுகப்படுத்தினாள். நாம் வெளியில் தெரியும் பாதிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். ஆனால் இதற்கு அடிப்படையான நம் உடலின் உள் உறுப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. முக்கியமாக நாம் உண்ணும் உணவை ஏனோதானோவென்று பசிக்கு மட்டுமே சாப்பிடுகிறோம்.

நம் உடலுக்கு என்ன தேவை, எவ்வளவு தேவை என்பதை அறிந்து, அதற்கேற்ற சத்தான உணவை எடுத்துக்கொண்டால் எந்த நோயும் கட்டுப்பாட்டை மீறாமல் காணாமல் போகும். இதற்கு உதாரணம் நானே. 2010ல் இன்னும் ஆறு மாசம்தான் உயிரோடு இருப்பேன் என்றவர்கள் முன், உணவுப் பழக்கம் மூலம் 2012 ல் கேன்சரிலிருந்து குணமாகி நிரூபித்தேன். இதோ இப்போது நானும் உணவுக்கட்டுப்பாடு குறித்த ஆலோசனையை மற்றவர்களுக்கு வழங்கி வரும் பணியைச் செய்து வருகிறேன்.

நான் பட்டப்படிப்பு படித்ததே வேலைக்கு போகணும்னு இல்லை. என் குழந்தைகளுக்கு கல்வியறிவு தரணுமே என்பதற்காகத்தான்.  ஆனால், என் சூழல் என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாம, அழகுக்கலை டெயிலரிங் போன்றவைகளை  செய்தேன். வருமானம் வேணுமே. ஒன்றரை கிலோ கட்டியை அகற்ற நிறைய லட்சங்கள் தேவைப்பட்டது. ஆபரேசனுக்காக என் தந்தை தந்த நிலம், என் கார், நகைகள்,  என எல்லாவற்றையும் விற்றேன்.

இந்த உலகம் நாம் கஷ்டப்படும்போது,  நல்லவர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. மருத்துவத் தேவைக்காக என் முகநூல் தோழமைகள் செய்த பண  உதவியை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது .முகமறியா மனிதநேயம்  மிக்கவர்கள்.

கேன்சரை விட, கட்டியை அகற்ற செய்த ஆபரேசன்கள் தான் மிக கொடுமையானது. பன்னிரண்டு முறை ஆபரேஷன் செய்தார்கள். என் உடலில் இருந்து சதைகள் எடுக்காத இடமே இல்லை. மூக்கு வழியே உணவு உடலெங்கும் ஊசி குத்திய வலிகள். இப்போதும் என் வாயைத் திறந்து என்னால் சாப்பிட முடியாது. சிறிய அளவே உதடுகள் திறக்கும்.

2017ல்  செய்த ஆபரேஷன்தான் கடைசி. இதோ இப்போது வரை எந்த மருந்து மாத்திரைகளும் இல்லை. உணவுகள் மட்டுமே என் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுகிறது . நோய் வந்து விட்டால் பயம் கொள்ளாமல் அதை எதிர்க்கும் வலிமையை அதிகப்படுத்துங்கள். பயமே பாதி நோய்க்கு காரணம். அந்த நேரத்தில் எனக்கு தன்னம்பிக்கை தந்து நான் விரும்பியபடி முகத்தை சீரழிக்காமல் கவனமாக கையாண்டு  என்னைக் காப்பாற்றிய பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அரவிந்த் ராம்குமாருக்கு எனது நன்றிகளை எப்போதும் சொல்வேன் .

முன்பெல்லாம் அந்தக் கட்டியுடனே வெளியே வேலைக்குச் செல்வேன் . பார்ப்பவர்கள் இதெல்லாம் வேலைக்கு வரணுமானு கேலி பண்ணியிருக்காங்க. பரிதாபத்தோட பார்த்துப் பரிகாசம் பண்ணினவங்க முன்னாடி இன்னிக்கு நான் ஜெயிச்சு நின்னுகிட்டிருக்கேன். நான் பணி செய்யும் நிறுவனத்தில் அவார்டுகளை வாங்கியுள்ளேன். சாதனைப் பெண் எனும் பெயரைப் பெற்றுள்ளேன்.

இதோ இப்ப பத்தொன்பது வருஷம் ஆச்சு. என் பெரிய பொண்ணுக்கு வருகிற செப்டம்பர் மாதம் கல்யாணம் செய்யப்போறோம். சின்னவ சந்தியா பேசன் டிசைன் படிச்சுருக்கா. இறந்து போன என் தம்பி மனைவியின் ஸ்தானத்தில் இருந்து தம்பியின் இரண்டு பெண்களுக்கும் ஆதரவாக இருக்கிறேன். எனக்காக  இப்போது நான்கு பெண் சிங்கங்கள் உள்ளனர். அவர்களுக்காக நான் உயிரோடு இருப்பேன்.

வாழ்வில் தொடர்ந்து போராட புவனேஸ்வரி கூறியது…

“சொந்தங்களும் பந்தங்களும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரைதான். யார் என்ன சொன்னாலும் வாழ்வது நீங்கள்தான்.  கவலை என்பது கைகுழந்தையல்ல எல்லா நேரமும் தோளில் சுமக்க. கடவுள் எல்லோரையும் ஏதோ ஒன்றுக்காகவே படைக்கிறார். அதை நிறைவேற்றாமல் உயிரை விடுவது கடவுளுக்கே செய்யும் துரோகம் . ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம், என்றில்லாமல் நம் தடயத்தை இந்த உலகில் விட்டுச் செல்ல வேண்டும்.

என்னைப் போலவே கேன்சரிலும் இன்னும் பலவித நோய்களாலும் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நேரில் சென்று என்னால் ஆன ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தருகிறேன் .இந்த உலகில் அடுத்தவரின்  வலியைப் புரிந்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

இனி நோயினால் சிரமப்படுபர்களைக் கண்டால் சில நிமிடங்கள் அவர்களுக்காக ஒதுக்கி அவர்களுக்கு நம்பிக்கை தரும் சொற்களைப் பேசுங்கள் அது போதும் அவர்கள் மீள,” என்று முடித்தார் புவனா.

மகள்களுடன்…

மகளின் திருமணத்திற்கு நமது வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தோம். அவரிடமிருந்து விடை பெறும்போது அவரின் செல்போனிலிருந்து ஒலித்த வார்த்தைகள் கவனத்திற்கு வந்தது . “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேன்னு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது.” உண்மைதான்!

2 COMMENTS

  1. சொந்தங்களும்,பந்தங்களும் நாம் ஆரோக்கியமாய் இருந்தால்தான் நம்மோடு
    பயணிப்பார்கள்.புவனேஸ்வரியின் மன
    வலிமை பாராட்ட தக்கது.

  2. புவனேஸ்வரியின் வாழ்க்கைப் பயணம் மனதிற்கு வலியை தந்தாலும் ,அவரின் மனோவலிமை தன்னம்பிக்கையை தந்தது. ரியல் “சிங்கப்பெண்”. வாழ்த்துக்கள்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...

ஆட்டிஸம் எனும் விந்தை!

- மஞ்சுளா சுவாமிநாதன் பிரிட்டனை சேர்ந்த Stephen  Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று...

தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!

1
-சேலம் சுபா அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும். நீரில் மிதக்கும் அழகிய வாத்து, மரத்தில் தொங்கும் மாங்காய், கண்களில் காதலுடன்...