0,00 INR

No products in the cart.

நிறைவு தரும் நீர் மேலாண்மை!

-ஜி.எஸ்.எஸ்.

மீபத்தில் மறைந்த ‘பத்ம பூஷண்’ டாக்டர் ஆர். நாகசாமி ஒரு புகழ் பெற்ற இந்தியத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்.  நமது தொன்மைக் காலத்தில் நீர் மேலாண்மை எத்தனை சிறப்புடையதாக இருந்திருக்கிறது என்பதை அவரது உரைகள் அழுத்தமாக எடுத்துச் சொல்கின்றன.  அவற்றிலிருந்து நமது அந்தக்கால நீர் மேலாண்மை தொடர்பான சில சுவையான விவரங்கள் இதோ.

புறநா​னூறு என்பது தமிழகத்தைப் பற்றி மட்டுமல்ல வடக்கில் இமய மலையிலிருந்தே அதன் விவரிப்பு தொடங்குகிறது.  கங்கை என்பதும் நமது பண்பாட்டின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது என்பது புறநா​னூறைப் படிக்கும்போது தெரியவருகிறது.

வள்ளல் குமணனை கங்கையுடன் ஒப்பிடுகிறது ‘நீண்டு ஒலி அழுவம்  குறைபட முகந்துகொண்டு’ என்று தொடங்கும் ஒரு பாடல்.  ‘மன்னா, எனக்கு உதவ யாருமில்லையே என்ற ஏக்கம் தோன்றியபோது, நீ வற்றாத நிரந்தரமாக நீர் தரும் கங்கையைப் போல இருப்பது நினைவுக்கு வந்தது’ என்ற இந்தப் பாடலை பெருஞ்சித்திரனார் எழுதியுள்ளார்.

மாமல்லபுரம்  அருகே நாகன் என்ற வணிகன் 400 காழி நெல்லை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தர்மமாக  அளிக்க வேண்டும் என்கிறது ஒரு கல்வெட்டு. (நெல்லும் அப்போது செல்வத்திற்கு சமமாகப் பார்க்கப்பட்டது).  ஊர் கணத்தார் (இன்றைய கிராமப் பஞ்சாயத்து) செம்பு அல்லது வெண்கலத்தால் ஆன கருவியின் ​மூலம் (இன்றைய தராசு) அதை அளக்க வேண்டும்.  அந்த நெல்லை விற்பதன்​மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு அந்த கிராமத்தின் விவசாயக் குளத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட நோக்கம்.

குளங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.  ஒன்று விவசாயத்துக்கு.  அடுத்தது குளிக்கவும் குடிக்கவும்.  மூன்றாவது கோயில் குளங்கள்.  பதினேழாம் நூற்றாண்டில் பல கோவில்களுக்கு குளங்கள் இருந்திருக்கின்றன.

புதிதாக ஒரு கிராமத்தை நிர்மாணிக்கும் போது அந்த கிராமத்தின் மேற்கு திசையில் பெரிய குளம் அல்லது ஏரி அமைக்கப்பட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.  உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டு இதுதொடர்பாக ஒரு கிராம வரைபடத்தை சித்தரிக்கிறது.

கூரம் செப்பேடு ஒன்று பல்லவ மன்னன் பரமேஸ்வரன் காலத்தில் காஞ்சிக்கு அருகில் கூரம் என்ற கிராமத்தில் பரமேஸ்வர மங்கலம் என்ற பெயரில் புதிதாக ஓர் பகுதி தோற்றுவிக்கப்பட்டது என்கிறது.  அதில் மிகப் பல குளங்கள் உருவாக்கப்பட்டன.

ந்திய வரலாற்றின் மிகப் பெரிய குளங்களில் ஒன்று சுதர்சன ஏரி.  சாம்ராட் அசோகரின் முன்னோரான சந்திரகுப்த மௌரியரின் தளபதி ஒருவர் குஜராத்தில் உள்ள ஜூனாகத் என்ற இடத்தில் இந்தப் பெரும் ஏரியை வெட்டி இருக்கிறார்.  மழைக்காலத்தில் இது ஒரு கடலைப் போல தோற்றமளிக்குமாம்.  அந்தக் குளத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அங்குள்ள மந்திரிகளிடம் ஓர் ஏற்பாடு செய்ய முனைந்தான் அந்த மன்னன்.  ஆனால் அரசாங்கம் இதற்காக ஒதுக்கிய  தொகையைக் கொண்டு அந்த ஏரியைப் பாதுகாக்கவும் அதற்கு ஏற்படக் கூடிய பாதிப்பை சரிசெய்யவும் முடியாது என்றும் கைவிரித்தனர் அந்த மந்திரிகள். உடனே மன்னன் ‘அரசாங்க நிதியிலிருந்துதானே இதற்காக பணம் ஒதுக்க முடியாது, என் சொந்த நிதியை அளிக்கிறேன்’  என்று கூறி நேர்மையான அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.  இந்தக் கல்வெட்டு சமஸ்கிருதத்தில் காணப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிரம்மாண்டமான நீர்நிலை வெட்டப்படுவது வழக்கம்.  மகேந்திர தடாகம்,  பரமேஸ்வர தடாகம், (உத்தரமேரூரில் உள்ள) வைரமேக தடாகம், மதுராந்தகம் ஏரி, (புதுச்சேரி அருகிலுள்ள) திரிபுவன மாதேவி பேரேரி ஆகியவை சில எடுத்துக்காட்டுகள்.

குளங்களை அப்படியே விட்டால் வண்டல் படிந்துவிடும்.  ​காலப்போக்கில் அவை பயனற்றதாகிவிடும். இதைத் தவிர்க்க ‘ஆண்டாண்டு தோறும் ஏரி தோண்டுவிப்போம்’ என்கிறது ஒரு கல்வெட்டு.  ஒரு கிராமத்துக்கு பையனூர் என்று பெயர்.  ‘ இந்த கிராமத்துக்கு பையனூர் என்ற பெயர் நிலைக்கும் வரை இதன் ஏரியை வருடம்தோறும் தோண்ட வேண்டும்’ என்கிறது ஒரு கல்வெட்டு.

ஏரிகளை வற்றச் செய்பவன் (அதாவது அதை சரியாகப் பராமரிக்காதவன்) நரகத்துக்குப் போவான் என்று சாபம் கொடுக்கிறது வேறொரு கல்வெட்டு!

அதுமட்டுமல்ல, கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் வேலை செய்பவனுக்கு என்ன கூலி கொடுக்க வேண்டும் என்பதைக்கூட சில கல்வெட்டுகள் தெளிவாக தெரிவிக்கின்றன.  நீர் இறைப்பானுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு குருணி நெல்லாக ஆறு மாதத்ததுக்கு முப்பது கலம் நெல் அளிக்க வேண்டும் என்கிறது ஒரு செப்பேடு.  அதேபோல கிணறு தோண்டுபவர், குளங்களை புதுப்பிப்பவர் ஆகியோருக்கான கூலிகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

‘தொடர்ந்து ஏரிகளையும் குளங்களையும் சரியாகப் பராமரிப்போம்.  நாங்கள் மட்டுமல்ல எங்கள் அடுத்த தலைமுறைகளும் பராமரிக்கும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் வாக்களிக்க வேண்டும்.  இப்படிப்பட்ட காரியம் செய்பவர்களுக்கு வரி விதிக்கக்கப்படாது என்கிறது ஒரு கல்வெட்டு.

நீர் மேலாண்மையில் நாம் எவ்வளவு தலைசிறந்து விளங்கியிருக்கிறோம். கடந்த காலத்தை எண்ணி பெருமைப்படும் நமக்கு நிகழ்காலத்தை நினைத்தால்தான் ஏக்கப் பெரு​மூச்சு விடத் தோன்றுகிறது இல்லையா?

2 COMMENTS

  1. நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் எவ்வளவு அக்கறையாக இருந்தார்கள் என்பதையும் ஆட்சியாளர்கள் அதைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் படித்து வியந்தோம். வரும் நம் சந்ததிக்கு அவர்கள் வகுத்தப் பாதையில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி பாதுகாத்திட உறுதி கொண்டோம்.

  2. ஒவ்வொரு கல்வெட்டு மூலமும் நீரின் மேலாண்மை பற்றிய பல உண்மைகளை அறிந்து கொண்டோம்.நீர்வளம் செழிக்க
    வேண்டும்.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...