spot_img
0,00 INR

No products in the cart.

ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள்!

– ஒரு குழந்தை மருத்துவரின் கண்ணோட்டம்

குழந்தைகள் நல மருத்துவர் நா.கங்கா

மாலி நாட்டைச் சேர்ந்த ஹலீமா என்ற பெண்மணி ஒரே நேரத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறார். கருவுற்றிருந்தபோது அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏழு குழந்தைகளை சுமந்துகொண்டு இருப்பதாகக் கூறி, அதிசயித்துப்போனார்கள். ஆனால், நிஜத்தில் மேலும் இரண்டு கருக்களை அவர் சுமந்து கொண்டிருந்தார் என்பது பிறகே தெரிந்தது. ஒன்பது குழந்தைகளில் நால்வர் ஆண்கள், ஐந்து பெண் குழந்தைகள்.

பிரசவத்திற்கான மருத்துவச் செலவு சுமார் பத்து கோடி ரூபாய். இதில் பெரும் பங்கை மாலி அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ‘ஒவ்வொரு குழந்தையாக வெளிவந்துக் கொண்டிருந்தபோது, உங்கள் மனதில் ஏதாவது எண்ணம் ஓடியதா?’ என்று ஹலீமாவைப் பின்னர் கேட்டபோது, ‘இந்தக் குழந்தைகளையெல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் என்ற எண்ணம்தான் என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது’ என்று பதில் கூறி இருக்கிறார்.

மாலி பெண்மணி அளவுக்கு, ‘சாதனை’ படைக்காவிட்டாலும் இரட்டை (மற்றும் அதைவிட அதிக) குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவிக்கும் பெற்றோர் (முக்கியமாக தாய்) சந்திக்கும் பிரச்னைகள் பல.
இப்படிப்பட்ட தாய்மார்கள் தங்களை சில விஷயங்களில் தயார் செய்துகொண்டால், குழந்தைகளை வளர்க்கும்போது உண்டாகும் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம். இவர்கள் தங்களை மனதளவில் எப்படித் தயார் செய்துகொள்வது என்பது குறித்து, குழந்தைகள் நல மருத்துவர் நா.கங்கா தரும் விளக்கம் இதோ…

மருத்துவர் நா.கங்கா

ஒன்பது குழந்தைகள் கருவில் இருந்தால் அதற்கு Nonuplets என்று பெயர். முகம் தெரியாத அந்த மாலி பெண்மணிக்கு ஒரு தாயாக, மருத்துவராக எனது வீர வணக்கம்.

வானமே எல்லையாக வளர்ந்துவரும் செயற்கை முறை கருத்தரித்தல் முறைகள் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், அந்த நாணயத்தின் மறுபக்கமாக, அதிகமான பெண்மணிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். எனவே, குழந்தைகளையும் தாயையும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மருத்துவர்களுக்கு ஏற்படுகிறது.
இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டுள்ள மொத்த செலவில் பாதித் தொகையை மாலி அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பது மிக நல்ல செயல். ஆனால், மக்கட்தொகை நிறைந்த இந்தியாவில் இது சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

ருவுற்ற காலத்தில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை, அதாவது குறைந்தபட்சம் மூன்று முறைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கட்டாயமாகச் செய்யப்படவேண்டும் என்றும், மருத்துவரிடம் ஐந்து முறை நேரில் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு இருக்கிறது. சிக்கல்கள் அதிகமான தாய் என்றால், இன்னும் கூடுதலாகக்கூட ஸ்கேன் செய்யப்பட வேண்டும். எனவே, முதல் சோதனையிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கரு என்பது நிறையப் பெண்களுக்குத் தெரிந்துவிடும். அந்த நொடியிலிருந்து அந்தப் பெண்மணி High risk pregnancy என்ற வகைமைக்குள் வந்துவிடுகிறாள். வேறு எந்த நோயும் இல்லாதபோதும் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் இருக்கும்போது தாய்மார்கள் கூடுதலாக கவனிக்கப்படவேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை என்று தெரிந்த அந்த நொடி முதல் பெற்றோருக்கு, முக்கியமாகத் தாய்க்கு பயம், கவலை, படபடப்பு, மன அழுத்தம் எல்லாம் அதிகமாகும். இதனை சரிசெய்யாவிட்டால் ஹார்மோன்களின் சுழற்சி மாறுபட்டு தாய்க்கும் குழந்தைகளுக்கும் நோய்கள் ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்லும் பெண்ணானால் நீண்ட விடுப்புக்கான வழிமுறைகள், வேலையை விடுதல், எந்த ஊரில் பிரசவம் நடக்கப்போகிறது, அரசு மருத்துவமனையா? தனியார் மருத்துவமனையா? தனியார் என்றால் பண செலவுக்கு என்ன செய்யலாம்? உதவிக்கு யார் இருக்கிறார்கள் என்பது போன்ற பல விஷயங்களைக் கணவர், குடும்பத்தினர், மருத்துவர், ஆலோசகர், ஆகியோரிடம் மனம் விட்டு பல முறை பேசி எல்லோரும் ஒன்றுகூடி திடமான முடிவுகள் எடுக்க வேண்டும். மூத்த குழந்தைகள் இருந்தால் இந்த காலகட்டத்தில் அவர்களை எப்படி கவனிப்பது என்பதும் இந்தத் திட்டமிடுதலில் அடங்கும்.

கருவுற்ற பெண்கள் ஒருபோதும் தனியாக இருக்கக் கூடாது. அவளுக்குப் போதுமான அளவு தினசரி ஓய்வு கிடைக்க வேண்டும். ஆண், பெண் வித்தியாசமின்றி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கருவுற்ற பெண் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஆகும் வாய்ப்புகள் அதிகம் என்ற சூழலில் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வின் அளவை அதிகரிக்கலாம்.

தாயின் உணவில் கட்டாயம் சிறப்பு கவனம் தேவை. ஒரு குழந்தையை சுமக்கும் தாய்க்கு தினமும் சுமார் 2,500 கலோரியும் 70 கிராம் புரதமும் தேவை. அதிகக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு இதைப்போல் 2 – 3 மடங்கு உணவு தேவை. மருத்துவப் புள்ளிவிவரத்தின்படி அதிகபட்சமாக நான்கு குழந்தைகளைச் சுமக்கும் கருவுற்ற தாய்க்கு தினமும் 4,500 – 5,000கலோரிகள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிடித்த உணவுகளை சுத்தமான முறையில் சமைத்து அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். அதிகமாக இரும்புச்சத்து, வைட்டமின்கள், கால்சியம் போன்றவையும் தேவை. அம்மாவின் உணவிலிருந்துதான் கருவிலுள்ள குழந்தைக்குத் தேவையான அன்றாட உணவும், வளர்ச்சிக்கான சத்துக்களும் கிடைக்கின்றன.
ஒரு குழந்தையை சுமக்கும் தாய் ஒன்பது மாத முடிவில் சுமார் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்பது கணக்கு. அதிகக் குழந்தைகளை சுமக்கும் தாய்க்கு 20 – 25 கிலோ எடைகூட அதிகரிக்கலாம். மருத்துவரின் அறிவுரைப்படி சத்து மாத்திரைகளும் தேவைப்படலாம். நன்றாகச் சாப்பிடும்போது எடை அதிகரிப்பது இயல்பு. ஒரு குழந்தைக்கே 10 கிலோ வரை எடை அதிகரிக்கலாம் எனும்போது, கூடுதலான குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு பேறுகாலத்தின் முதல் 20 வாரங்களில், வாரத்துக்கு அரை கிலோ வரை எடை அதிகரிக்கலாம். அதன் பிறகு வாரத்துக்கு 1.25 கிலோ என்ற ரீதியில் பிரசவம் வரை எடை அதிகரிக்கும். இதை நினைத்து பயப்படத் தேவையில்லை. உண்மையில் இந்த எடை அதிகரிப்பு நல்லதுதான். கூடுதலாக உணவு உண்ணவேண்டியிருப்பதால் இது நடக்கிறது. சாப்பிடும்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இந்த எடை அதிகரிப்பு குழந்தைக்கு உதவுகிறது. குழந்தை, பனிக்குட நீர், நஞ்சு, உணவு ஆற்றல் எல்லாமாகச் சேர்ந்து பேறுகாலத்தில் எடையைக் கூட்டுகின்றன.

தாய், 24 X 7 மன அமைதியுடன் இருக்க வேண்டும். நன்றாகத் தூங்க வேண்டும். இதற்காக வழிபாடு, தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைத் தகுந்த ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். பாட்டு கேட்பதும், பாடுவதும் நல்லது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகியவற்றைக் குறைப்பதும் நல்லது. மருத்துவ ஆலோசனைக்குச் செல்லும்போது கணவர் மற்றும் மனதுக்கு இதமான ஒரு பெண் உறவினர் அல்லது நண்பரை அழைத்துச் செல்ல வேண்டும். தன் மனதில் எழும் சந்தேகங்களை எல்லாம் கேட்க வேண்டும். மருத்துவர் தரும் அறிவுரைகளை சரியாகக் கடைபிடிக்க உடன் வருபவர்கள் உதவுவார்கள்.    எந்தெந்த அறிகுறிகள் தாய்க்கோ குழந்தைக்கோ ஆபத்து என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு அறிகுறியையும் அலட்சியப்படுத்தக் கூடாது. முக்கியமாக, அடிவயிற்று வலி, பிறப்பு உறுப்பிலிருந்து நீர் அல்லது ரத்தப் போக்கு, மூச்சுத் திணறல் போன்றவை உடனடியாக கவனிக்கப்படவேண்டும். தயவு செய்து நீங்களே கூகுள் டாக்டர் ஆகிவிட வேண்டாம்.

கருவில் குழந்தைக்கு உள்ள சிக்கல்களைக் கண்டுபிடிக்க பல யுத்திகள் இப்போது இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட கருவை சுமக்கும் பெண் இதற்கான சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், கருவில் உள்ள ஏதாவது ஒரு குழந்தைக்கு பிறவிக் குறைபாடோ, முரண் கரு பிரச்னையோ இருப்பின், அதனை விரைவிலேயே கண்டுபிடித்து, அந்தக் கருவை மட்டும் கலைத்து விடலாம்.
கருப்பைக்குள் பல குழந்தைகள் இருந்தால், அங்கு டவுன் பஸ் நெருக்கடியைப் போன்ற சூழல் நிலவும். எனவே, குறைப்பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குறைப்பிரசவத்தைத் தவிர்க்கவும் தள்ளிப்போடவும் பல சிகிச்சை முறைகள் உள்ளன. இவை பெரிய ஊர்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். தனியார் மருத்துவமனைகள் எனில் செலவும் அதிகம்தான். ஒரே கருப்பைக்குள் பல குழந்தைகள் இருக்கும்போது, மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்த குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகம். மூளை வளர்ச்சி குறைபாடுகள், கண் / காது / பேச்சுத்திறன் குறைபாடு போன்றவையும் ஏற்படக்கூடும்.

தாய்க்கு நெகடிவ் வகை ரத்தமும் கருவில் உள்ள குழந்தைகளுக்கு பாசிடிவ் வகை ரத்தமும் இருந்தால் சிக்கல்கள் இன்னும் அதிகம். இப்படிப்பட்ட தாய்க்கு சிசேரியன் பிரசவம் அறிவுறுத்தப்படும். அதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளின் எடை, குறைமாதம் மற்ற மருத்துவ சிக்கல்கள் போன்ற பிரச்னைகளைப் பொறுத்து சிசுக்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் சூழலும் ஏற்படலாம். நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தால் தாய்க்கு மன அழுத்தம் அதிகமாகும். தந்தைக்கு மணிபர்ஸின் எடையும் குறையும். இதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

மாலியில் உள்ள தாய், எப்படி ஒன்பது குழந்தைகளுக்குப் பாலூட்டுவாள்? இது சாத்தியமா? முடியும் என்கிறது அறிவியல். தாய்ப்பால் ஊறிவரும் தாய்க்குப் போதுமான சத்துணவு தரப்பட வேண்டும். ஒரு குழந்தைக்கு தினமும் எட்டு முறையாவது தாய்ப்பால் தர வேண்டும் என்று வைத்துக்கொண்டால் 24 மணி நேரத்தில் 72 முறை பாலூட்டுவதா? மிகவும் சிரமம்தான். தாய்க்கு முழுவதுமாக ஒரு மணி நேரம்கூட ஓய்வு கிடைக்காது. முடிந்தால் மாற்றுத்தாய் பாலூட்ட ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

வெளிநாடுகளில் எல்லாவற்றுக்கும் ஆதரவு தரக்கூடிய நட்புக் குழுக்கள் இருக்கின்றன. அதுபோன்ற குழுக்களோ அமைப்புகளோ உங்கள் ஊரில் இருக்கின்றனவா என்று விசாரித்து வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக, ஆனால் மிக அவசியமாக, தாயை பயமுறுத்தாத, அனுபவம் உள்ள ஒரு பெண்மணியை ஆதரவாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான அனுபவமுள்ள உள நல ஆலோசகர்கள் உங்கள் ஊரில் இருக்கும்பட்சத்தில் அவர்களின் உதவியையும் பெறலாம்.

இத்தனையையும் மீறி அந்தக் குழந்தைகளைப் பார்த்தாலே மனதில் உண்டாகும் உற்சாகமும், ஆனந்தமும்தான் அன்னைக்குக் கிடைக்கும் போனஸ் என்பதே உண்மை!

2 COMMENTS

  1. கருவுற்ற பெண்களுக்கான ஆலோசனைகளை டாக்டர் கங்கா அவர்கள் மிக விளக்கமாக, தெளிவாக புரியும்படி அறிவுறுத்தியுள்ளார். பாராட்டுக்கள் பல.

மருத்துவர் என். கங்கா
மருத்துவர். நா.கங்கா - ''முதல்முறையாகத் தனது பொன்னியின் செல்வன் தொடரை அமரர் கல்கி வெளியிட்டது முதலே நான் கல்கி குழும இதழ்களின் வாசகியாகவும் ரசிகையாகவும் இருந்துவருகிறேன். எனது முதல் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை 1994ல் மங்கையர் மலரில் வெளியானது'' என்று கூறும் நா. கங்கா,. மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவத் துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றிய ஒர் இலக்கிய ஒப்பீட்டாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மருத்துவ அறிவியலைப் போலவே ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். வாசிப்பும் எழுத்தும் இவருக்கு விருப்பமான பொழுதுபோக்குகள்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

தன்னம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

ஊனம் ஒரு தடையல்ல... - ராஜி ரகுநாதன் “ஜன்னலருகில் நின்று சுதந்திரமாக ஆகாய வீதியில் பறக்கும் பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பறவைக்கு எத்தனை சிறிய கால்கள்! இதற்கு அத்தனை உயரம் பறக்கும் சக்தியை கடவுள் எப்படிக்...

செல்ல விலங்குகளை வளர்த்தால்…

0
- ஜி.எஸ்.எஸ். சமாதான உடன்படிக்கைக்கு புறாவை ஒரு அடையாளமாகச் சொல்வார்கள். ஆனால், ஆலன் பிட்க்ளே என்ற 70 வயது முதியவர் புறாக்களை வளர்த்து, அதன் காரணமாகவே அண்டை வீட்டுக்காரரின் கடும் அதிருப்தியைச் சம்பாதித்து நீதிமன்றத்தின்...

கல்லாதது கடலளவு!

மினி தொடர்-1 - நாராயணி சுப்ரமணியன் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் சுவாரஸ்யமானவை. அதிலும், மாணவர்களும் பெரியவர்களும் கேட்கும் கேள்விகள், பல சமயங்களில் ஒரேமாதிரியான ஆர்வத்துடன் வெளிப்படும். கடலுக்கு முன்னால் எல்லோரும் குழந்தைகளாகிவிடுகிறார்கள் என்றுகூட இதைப்...

விண்வெளி வீராங்கனைகள்; பிரத்யேக சவால்கள்!

0
- ஜி.எஸ்.எஸ். ‘ஒரே ஒரு சிறகைக் கொண்டு ஒரு பறவையால் பறக்க முடியாது. அதுபோல, மனித இனத்தின் விண்வெளிப்பயணம் பெண்களின் உரிய பங்களிப்பு இல்லாமல் நிகழ்ந்து விடாது’ - இப்படிக் கூறியவர், வாலண்டினா தெரஸ்கோவா....

நாலு நாளு பொங்கலுக்கு நல்லதா நாலு பாட்டு!

1
- ஆர்.மீனலதா, மும்பை   ஓவியம் : பிள்ளை ‘தை - தை! தா - தை! தை - தை!’ பாடி, ஆடிக் கொண்டிருந்தாள் ஆண்டாளு. “ஆண்டாளு...! ஆண்டாளு!” வள்ளி குரல் கேட்டு வெளியே வந்த ஆண்டாளு,...