ஓவியக் காதலன்!

ஓவியக் காதலன்!
Published on

கட்டுரை, படங்கள் :
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

சில்வெஸ்டர் பீட்டர்
சில்வெஸ்டர் பீட்டர்

ர் விட்டு ஊர் வந்து குடியேறுகிறது அந்தப் பத்து வயது சிறுவனின் குடும்பம். ஆறாம் வகுப்பில் சேர்க்க முயற்சிக்கிறார் அப்பா. பள்ளிக்குச் செல்ல மறுத்து விடுகிறான் சிறுவன். அந்த பால்ய வயதிலேயே, "பள்ளியின் வகுப்பறைகள் கசக்கிறது. துள்ளி வரும் உணர்வுகளை ஓவியமாய்த் தீட்டிடவே எனது உள்ளம் விரும்புகிறது" எனப் பெற்றோரிடம் தெரிவிக்கிறான். பையனின் இயல்புக்கே பெற்றோர்களும் விட்டு விடுகின்றனர். அந்த ஓவியக் காதலனின் பெயர் சில்வெஸ்டர் பீட்டர். அவருக்கு இப்போது வயது ஐம்பத்தி எட்டு.

திருநெல்வேலி, காவல் கிணறு கிராமம் பூர்விகம். ஐந்தாம் வகுப்பு வரை அங்கு படிப்பு. அவ்வளவுதான் பள்ளிக்கல்வி. சிவகாசிக்கு குடியேற்றம். சிறு வயதில் சிலேட்டில் மாதா கோயில் ஓவியம் வரைந்ததுதான், முதல் ஓவியம்.

சிவகாசியில் நான்கைந்து ஆண்டுகள் எதைப் பார்த்தாலும் வீட்டில் வந்து ஓவியமாக வரைவதுதான் அவனுக்குப் பிடித்தமான ஒன்றாகிப்போனது. நெருங்கிய உறவினர் ஒருவர், ''நீ பாம்பேக்கு வந்து விடு" எனக் கூப்பிட, ரயிலேறி விட்டார் அந்த ஓவியக் காதலன்.


தினாறு வயதில் பாம்பேயில்
(இப்போது மும்பை) விளம்பரக் கம்பெனிக்கு டிசைன் வரைந்து தருவதில் தொடங்கியது ஓவிய வாழ்க்கை. அப்போது பாம்பேயில் 'BOLD INDIA' (1985) செய்திப் பத்திரிக்கை வெளியாகிக்கொண்டிருந்தது. பத்திரிகையின் பெயர் மட்டும் தான் ஆங்கிலத்தில். அதற்குக் கீழே செய்திகள், தகவல்கள், கட்டுரைகள், கதைகள் எல்லாமே தமிழில். அந்தப் பத்திரிகையில் முழு நேர ஓவியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. 1986ல் உறவினர் பெண் ஞானரூபியை திருமணம் செய்து கொள்கிறார். ஓவிய வாழ்க்கையுடன் இல்லற வாழ்க்கையிலும் இணைந்தே பயணிக்கிறார். அடுத்த ஒரு ஆண்டு கழித்து குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விடுகிறார். (இப்போது சிவகாசி அருகே, திருத்தங்கலில் வசிக்கிறார்.)

த்தாண்டுகள் வரை சிவகாசி ஆப்செட் அச்சகங்களுக்கு டிசைன் செய்து தந்து கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, 'தாஸ் க்ராபிக்ஸ்' எனும் பெயரில் ஓவியப் பள்ளியினை நடத்தி வருகிறார். "என் வாழ்வின் மிக மிக அர்த்தம் நிறைந்த நாட்கள் இவைதான்" என்கிறார் சில்வெஸ்டர் பீட்டர்.

''ஒரு ஓவியன் அதிகம் பேசக் கூடாது; அவன் வரைந்த ஓவியங்களே பேச வேண்டும்பேசப்பட வேண்டும்" எனும் இவர், "முதன்முதலில் லைன் ட்ராயிங்தான் வரைந்தேன். கதைகளுக்கு ஒளியும் நிழலும் கலந்த வாஷ் ட்ராயிங் வரைந்தேன். கருப்பு நிறம், வண்ண வண்ண ஓவியங்களில் பல வகையான ஓவிய முறைகள் உள்ளன. அத்தனை ஓவிய முறைகளிலும் வரைந்தும், என் ஓவியக் காதல் இன்னமும் தீரவில்லை. அதன் மீதான வெளிப்பாடாக இருபத்தைந்து ஆண்டுகளாகப் பலருக்கும் ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் எனது ஓவியப் பள்ளியில் பயின்று ஓவியர்களாக அடையாளம் பெற்றுச் சென்றுள்ளனர்.

துவாரகையில் கோகுலத்தில் பாலகன் கிருஷ்ணன் தரையில் தவழ்ந்து சென்று, ஒரு பசுவின் நுனி வாலைப் பிடித்து இழுப்பதுபோல ஒரு ஓவியம் வரைந்துள்ளேன். அதுவே எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்" என்று கூறும் சில்வெஸ்டர் பீட்டரின் மானசீக குருநாதர் ஓவியர் சில்பி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com