சத்துமிகு சீத்தாப்பழம்!

சத்துமிகு சீத்தாப்பழம்!
Published on

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

.எஸ்.கோவிந்தராஜன்

l நாம் சாப்பிடும் சீத்தாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாது உப்புகள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.

l இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழமானது, இதயம் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. இனி, சீத்தாப்பழத்தின் மருத்துவ நன்மைகள் குறித்துக் காண்போம்.

l சீத்தாப்பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால், இதய வால்வுகளில் உள்ள கொழுப்பைக் கரைத்து இதயநோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

l சோர்வாக உள்ள குழந்தைகளுக்கு, சீத்தாப்பழத்தை தினமும் கொடுத்து வந்தால், அவர்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

l சீத்தாப்பழத்தில் உள்ள தாமிரச்சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மை சீராகும்.

l கர்ப்பிணிப் பெண்கள் சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறுவதுடன், வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலையும் மேம்படும்.

l சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகளைத் தடுப்பதோடு, புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கலாம்.

lசீத்தாப்பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

l சீத்தா மரத்தின் பட்டைகள் நீரிழிவு நோயை குணமாக்குகிறது. இதன் இலைகள் நோய்த்தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.

l சீத்தாப்பழம் உடலுக்கு அதிகக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும் போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் பிறகு சாப்பிடலாம்.

l காச நோய் பிரச்னை உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காசநோயைக் கட்டுப்படுத்தலாம்.

சோர்வு நீக்கும் சுண்டைக்காய்!

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்தக் காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும், உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

l சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இதை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால், ரத்தம் சுத்தமடையும். மேலும், உடல் சோர்வும் நீங்கும்.

l பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம் பெறும்.

l சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

l முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச் சளியை சரிசெய்யும்.

l சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.

l சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்துப் பொன்னிறமாக வறுத்து, சிறிது உப்பு சேர்த்து பொடி செய்து, ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பசி, மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் பிரச்னைகள் குணமாகும்.

l சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும், வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

l சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

l நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பதன் மூலம், நுண்புழுவால் உண்டாகும் நோய்கள் குணமாவதோடு, அஜீரணக் கோளாறுகளும் நீங்கும்.

l சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்யலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com