துனிசியாவில் துணிகரமான திருப்புமுனை!

துனிசியாவில் துணிகரமான திருப்புமுனை!
Published on

ஜி.எஸ்.எஸ்.
ப்ரிக்காவின் வடக்கு எல்லைக்குள் இருக்கிறது துனிசியா. அட்லஸ் மலைத்தொடர், சஹாரா பாலைவனம் ஆகியவற்றின் பகுதிகள் இந்த நாட்டிலும் இருக்கின்றன.

அறுபத்து மூன்று வயதான நஜிலா பெளடன், துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக இருக்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அவர் அந்தப் பதவியை ஏற்றிருக்கிறார். அந்த நாட்டின் ஜனாதிபதி சயீது சமீபத்தில் எடுத்த அவசர முடிவுகளில் இது முக்கியமானது. 'இது துனிசியாவுக்கும், முக்கியமாக துனிசியப் பெண்களுக்கும் மிக முக்கியமான நிகழ்வு' என்று அறிவித்தார்.

நஜிலா புவியியல் துறையியல் வல்லுனர். நில நடுக்கம் தொடர்பான கல்வியில் தனிச் சிறப்புப் பெற்றவர். இதற்கு முன்பு உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.

புதிய பிரதமர் நஜிலா அமைச்சரவையை உருவாக்கினார். அதில் 24 அமைச்சர்கள். அவர்களில் பத்து பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகளில் ஒன்றான துனிசியாவில் இப்படி ஒரு துணிகரமான திருப்புமுனை நடந்திருக்கிறது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் உலகப் பொருளாதார ஆண், பெண் குறியீடு என்ற அளவுகோலில் 25 வருடங்களுக்கு முன்பு 90வது இடத்திலிருந்த துனிசியா, இன்று 124ஆவது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்பதை துனிசியா கடந்த சில வருடங்களாகவே அடிக்கோடிட்டு வருகிறது. பெற்றோரின் சொத்துகளில் பெண்களுக்கும் பங்கு உண்டு எனும் சட்டத்தை கொண்டுள்ளது இந்த நாடு. அதுமட்டுமல்ல; 'துனிசியாவில் இருவேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தை இரண்டு நாட்டின் குடிமைத் தன்மையையும் தக்கவைத்துக் கொள்ளலாம்' என்கிறது. அம்மாவின் குடும்பப் பெயரை தனது பெயருடன் சேர்த்து வைத்துக்கொள்ளவும் முழு அனுமதி உண்டு.

அதற்கு முன் பிரதமராக இருந்தவரை ராஜினாமா செய்யவைத்து, நஜிலாவைப் பிரதமர் ஆக்கியிருக்கிறார் ஜனாதிபதி. பழைய பாராளுமன்றத்தைக் கலைத்தது, நீதிமன்ற அதிகாரங்களைத் தன்வசம் எடுத்துக்கொண்டது என்று அவர் மேற்கொண்ட அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிர்பாராதவை. அவற்றை ஜனநாயகமானவை என்று கூறிவிட முடியாதுதான். எதிர்க்கட்சிகள் இவற்றைக் கடுமையாக விமர்சித்தாலும், பெரும்பாலான துனிசிய மக்கள் இந்த மாறுதலை வரவேற்கின்றனர். காரணம், அந்த நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இதற்குப் புதிய பிரதமர் போதிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறார்கள். ஒரு பெண்ணின் தலைமையில் துனிசியா முன்னேறும் என்பது நிரூபிக்கப்படும்போது, பெண்களின் தன்னம்பிக்கையும், பெண்கள் மீது பிறர் கொண்டுள்ள நம்பிக்கையும் மேலும் உயரும்.

பெட்டிச் செய்தி: ……………………………………………………………………………………………………………………….

துனிசியா குறித்த வேறு சில சுவாரஸ்யங்கள்!

lமெக்கா, மெதினா, ஜெருசலேம் ஆகியவற்றுக்குப் பிறகு முஸ்லிம்கள் மிக முக்கியமாகக் கருதும் புனிதத் தலமான கைரோவன் துனிசியாவில் உள்ளது. இது யுனெஸ்கோவால் இனம்காணப்பட்ட உலகின் தொன்மையான பகுதிகளில் ஒன்று.

lஇதன் மத்மதா என்ற பகுதியில் மக்கள் நிலத்துக்கடியில் வீடுகள் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்.

lஉலகின் மிகப்பெரிய திறந்தவெளி அரங்கங்களில் (ஆம்ஃபிதியேட்டர்களில்) ஒன்று துனிசியாவில் உள்ளது. ரோம் நாட்டில் இருப்பதைப் போலவே இது தோற்றமளிக்கிறது.

l1957லிருந்து இதுவரை வெறும் ஐந்து ஜனாதிபதிகளைத்தான் துனிசியா கண்டிருக்கிறது.

…………………………………………………………………………………………………………………………………………………………

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com