உதவி மறுக்கும் உஷாராணி!

உதவி மறுக்கும் உஷாராணி!
Published on

சங்கடம் தருபவர்களை சமாளிப்பது எப்படி? – 4

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம்: சுதர்ஸன்

ஷாராணி தன்னுடைய தோழிகளுடன் எப்போது ஹோட்டலுக்குப் போனாலும் தனது கைப்பையை தயார் நிலையில் வைத்துக்கொள்வாள். மற்றவர்கள் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இவள், தான் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டு விடுவாள். பில் வந்ததும் அதைப் பறித்துக்கொண்டு தானே பணத்தைச் செலுத்தினால்தான் அவளுக்கு நிம்மதி.

"எனக்கு ஊட்டி பீன்ஸ் ரொம்பப் பிடிக்கும். எங்க ஏரியாவில் அது கிடைக்கவில்லை'' என்று ஒருமுறை கேஷுவலாக உஷாராணி கூறியதைக் கேட்டு, அடுத்த முறை அவள் வீட்டுக்குப் போகும்போது ஒரு கிலோ ஊட்டி பீன்ஸ் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அவரது உறவினரான சித்ரா.

இதைக் கண்டு முகம் சிறுத்துப்போகிறது உஷாராணிக்கு. 'உன்னை யாரு இதை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னா? இப்படி எல்லாம் நீ வாங்கிட்டு வருவேன்னு தெரிந்திருந்தால் நான் உன்கிட்டே வாயைத் திறந்திருக்கவே மாட்டேன். ஊட்டி பீன்ஸ் பிடிக்கும்தான். அதற்காக அது இல்லேன்னா நான் செத்தா போயிடுவேன்? முதல்ல இதை உன் வீட்டுக்கு எடுத்துட்டுப் போ' என்று உஷாராணி படபடக்க, சித்ரா அதிர்ச்சி அடைகிறாள். இத்தனைக்கும் இந்த இருவருக்குமிடையே எந்தவித கடந்தகால கருத்து வேறுபாடுகளும் கிடையாது.

பொதுவாக, சித்ரா போன்றவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? 'ஏதோ பேச்சோடு பேச்சாக சொன்னதை நினைவு வச்சிக்கிட்டு, இதை வாங்கிட்டு வந்திருக்கியே, உனக்கு என் மேல ரொம்ப பாசம்' என்று ஒரு நெகிழ்வை உஷா ராணியிடம் அவர் எதிர்பார்த்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம், 'எதற்காக இதெல்லாம்?' என்ற செல்லமான கோபத்துடன் அவள் அந்த ஊட்டி பீன்ஸை வாங்கிக்கொண்டு இருந்தால்கூட அது இயல்பாக இருந்திருக்கக்கூடும். ஆனால், உஷாராணியின் போக்கு சித்ராவை மனம் குன்றச் செய்து விடுகிறது. உஷாராணி அப்படித்தான் யாரிடமும் எந்தவிதமான உதவியையும் பெறவே மாட்டாள்.

ருமுறை ஓலா வண்டியில் தன் வீட்டுக்கு வந்தபோது 102 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அவளிடம் சில்லறைக் காசு இல்லாமல்போனது. 'நூறு ரூபாய் கொடுங்க போதும்' என்று ஓட்டுநர் கூறியதும், உஷாராணியின் முகம் சிவந்தது. 'எனக்கு எதுக்கு உங்க பணம்?' என்றபடி ஓட்டுனரைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். சுமார் பத்து நிமிடங்கள் தேடி ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தைக் கண்டுபிடித்து வாசலுக்கு வந்தபோது, அந்த ஓட்டுநர் கிளம்பிச் சென்றிருந்தார். அந்த இரண்டு ரூபாய்க்காக அவர் அடுத்த வாடிக்கையாளரை இழக்க முடியுமா?

ரு முறை உஷாராணியின் வலது கையில் கடும் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக அவளால் தன் தலையை வாரிக்கொள்ள முடியவில்லை. அப்போது வீட்டுக்கு வந்திருந்த அவளது தூரத்து உறவுக்காரப் பெண், 'நான் வேணா உன் தலையை வாரி விடட்டுமா?' என்று கேட்க, உஷாராணியின் முகம் சிறுத்துப்போனது. 'நான் உன்னைக் கேட்டேனா?' என்றாள். அப்படிக் கூறிய கையோடு, வீட்டிலிருந்து கிளம்பி மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருந்த ஓர் அழகு நிலையத்துக்குச் சென்று அங்குள்ள சேவையைப் பயன்படுத்திக் கொண்டாள். அந்த அழகு நிலையப் பெண்மணி அதிசயித்துப்போனாள். அவள் வாழ்நாளிலேயே தலைவாரிக் கொள்வதற்காக மட்டுமே அழகு நிலையத்துக்கு வந்து அதற்காக குறைந்தபட்ச கட்டணமான அறுநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போனது உஷாராணி மட்டும்தான்.

'யாருடைய உதவியும் எனக்குத் தேவையில்லை என்று தீவிரமாகக் கருதுவது உயரிய பண்புதானே' என்று உங்களில் சிலர் பாராட்டலாம். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள பிரபல மனவியல் மருத்துவரான லாரன்ஸ் பைண்டர் என்பவர் உஷாராணி போன்றவர்கள் தன்னைச் சுற்றி ஒரு கசப்புத் திரையை படர விட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று கருதுகிறார். பிறர் நமக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறுதான். ஆனால், எப்போதும் மற்றவர்களுக்கு நானே வாரி வழங்குவேன். அவர்களிடமிருந்து எந்த உதவியையும் பெற மாட்டேன் என்னும் கண்ணோட்டம் சரியில்லை.

உஷாராணி போன்றவர்கள் இதுபோன்ற குணங்களைக் கொள்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் மனவியல் மருத்துவர்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, 'ஒருவரிடமிருந்து தான் எதையாவது ஏற்றுக்கொண்டால் பதிலுக்குத் தானும் எதையாவது செய்ய வேண்டும்' என்று அவர் எதிர்பார்ப்பார் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது.

குறிப்பிட்ட சிலரிடம் நாம் எச்சரிக்கையுடன் பழகுவதும் அவர்கள் அளிக்கும் உதவியை ஏற்காமல் இருப்பதும் சரியானதுதான். ஆனால், நமக்கு நெருங்கிய அத்தனை பேரிடமும் இப்படி, 'உங்கள் உதவியையோ சலுகையையோ நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்' என்கிற மனநிலையை வளர்த்துக்கொள்வது சரியல்ல. அப்படி வளர்த்துக்கொண்டால் தனக்கு உதவி செய்பவர்கள் மனப்பூர்வமாக அதை செய்கிறார்களா அல்லது பலனை எதிர்பார்த்து செய்கிறார்களா என்பதைப் பகுத்தறியும் பக்குவம் அவர்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்டவர்களின் மனதை மாற்றவும் உங்கள் உதவியை அவர் ஓரளவாவது ஏற்றுக்கொள்ளவும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

தனிமையில் உதவுங்கள். பலர் நடுவில் உதவும்போது எதிராளியின் தயக்கம் பல மடங்காகும்.

நீங்கள் உதவுவது எந்த விதத்திலும் உங்கள் வள்ளல் தனத்தையோ தலைக்கனத்தையுயோ வெளிப்படுத்துவதாக இருக்கக் கூடாது. மரியாதையுடன் தன்மையான விதத்தில் உதவுங்கள்.

ஓவியம்: சுதர்ஸன்
ஓவியம்: சுதர்ஸன்

நீங்கள் செய்யும் உதவியைக்கூட அவர்கள் செய்யும் உதவி போல தோற்றமளிக்கச் செய்யலாம். 'நீங்க படிக்கணும்னு ஆசைப்பட்ட புத்தகத்தை உங்களுக்காக வாங்கி இருக்கேன். நானும் வேற ஒரு புத்தகத்தைப் படிக்கணும்னு ஆசைப்பட்டுக்கிட்டே இருக்கேன். அது கிடைக்க மாட்டேங்குது. உங்க கண்ணுல எப்பவாவது பட்டா அதை வாங்கிக் கொடுங்க. அவசரம் இல்லை' என்பதுபோல் கூறலாம்.

நீங்கள் அவர்களிடம் இருந்து ஏதாவது உதவி பெறும்போது அது உங்களுக்கு ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். 'இப்படி ஒருவருக்கொருவர் உதவுவது இயல்பானது. சிறப்பானது' என்பதை உரிய வாக்கியங்களில் தெரியப்படுத்துங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com