அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on
'அன்புவட்டத்தில்' நீங்க கேள்வி கேட்க வாய்ப்பு வந்தால் உங்கக் கேள்வி என்னவாக இருக்கும்?

-என். கோமதி, நெல்லை

'சமீப காலமா, நம்ப ஃபேவரிட் பத்திரிகைகளான 'கல்கி', 'மங்கையர் மலர்', 'தீபம்' மூன்றுமே ஆன்லைனில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றனவே… அந்த சந்தோஷ சமாச்சாரத்தை உங்களோட நட்பு ப்ளஸ் உறவுகளிடம் பகிர்ந்துக்கிட்டீங்களா கண்மணீஸ்?

இதுதான் அந்தக் கேள்வி! சொன்னீங்களா? சொல்வீங்களா?

******************

இயக்குநர் ராஜமவுலியின் அடுத்தடுத்த படங்கள் ஆயிரம் கோடி வசூல் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதே?

-சி. கார்த்திகேயன், சாத்தூர்

மாங்க! அவர் ஒரு ஜிம்மிக்ஸ் ஜுவாலை! கைதேர்ந்த கற்பனையாளர்! அதை மெய்சிலிர்க்க செலுலாய்டில் வடிவமைக்கத் தெரிந்த விஷுவல் விஷமக்காரன்!

சமீபத்தில்தான் 'ஆர்.ஆர்.ஆர் படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன். கண் இமைக்க கொஞ்சமாவது டைம் கொடுத்தால்தானே? அப்படியொரு மெஸ்மரிஸம்.

நம்ப சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' சாயல் உள்ள கதை! ராமும் பீமும் நெருப்பும் நீருமாக இணைந்து எப்படி ஆங்கிலேயர்களைப் பந்தாடுகிறார்கள் என்பது அவுட்லைன்! ஆனால் அது சொல்லப்பட்ட விதமும், ஒளிப்பதிவின் தரமும், சண்டைக் காட்சிகளும், கிராஃபிக்ஸ் ஜாலங்களும், இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விடுகிறது… அதுதான் கோடிகளில் வசூல் ரகசியம்!

ஆனால் ஒரு விஷயம்:- "லாஜிக்கா? அப்படின்னா என்ன?"ன்னு மட்டும் கேட்டுடாதிங்க… நக நுனியளவுகூட படத்தில் இல்லை! இட்ஸ் ஆல் ரைட்! ஏதோ ஒரு மேஜிக் இருக்கே!

******************

மனதில் பட்டதை பட்டென்று நேருக்கு நேர் சொல்வதால் வருத்தம் வருகிறதே… என்ன செய்வது அனு மேடம்?

-நா. புவனா நாகராஜன், செம்பனார்கோயில்

சுண்ணாம்பைத் தொண்டையில வெச்சுக்கிட்டு, வாயில மட்டும் வெண்ணெயா பேசுறதைவிட மனசுல பட்டதைப் பேசிடறது ஓரளவு நல்ல சுபாவம்தான்!

  • ஆனா, எப்படிப் பேசினாலும் ஏதாவது ஒரு பட்டம் கிடைச்சுடும்.
  • பாலீஷா, பதவிஸா பேசினா 'ட்ராமாக்வீன்.'
  • வெகுளியா பேசினா, 'லூஸ் டாக்."
  • 'பட்டு பட்டு' பேசினா, 'தேள் கொடுக்கு;."
  • பட்டும் படாமப் பேசினா 'உஷார் பார்ட்டி."
  • பேசாம அமைதியா இருந்தா 'அமுக்கிராங்கிழங்கு.'

பெண்களோட மனசு இருக்கே… அது அன்பு, பாசம், காதல், வெறுப்பு, கோபம், விரக்தி, எதிர்பார்ப்பு… இப்படி எல்லாம் கலந்து அவியல் குவியலா இருக்குற அபத்தமான சங்கதி! ஓவர் எதிர்பார்ப்பு இருக்குற இடத்துல ஏமாற்றம் உண்டானா. அது பேச்சுல வெடுக்குன்னு வந்துடுது! கான்ட் ஹெல்ப்!

ஓவியம்; பிள்ளை
ஓவியம்; பிள்ளை

ஆனா ஒரு விஷயம் அம்மணி! "நம்ப வாய், நம்ப நாக்கு"ன்னு எவ்வளவு வேணும்னாலும் பேசிடலாம்தான். ஆனால் கேட்டது மற்றவரின் காது மட்டுமல்ல; மனசும்தான்! அதனால "'பட்டு'ன்னு பேசிடறது என்னோட சுபாவம்"னு சொல்லாம, கொஞ்சம் நாகரீகப் பூச்சோட பேசினா உறவு இழைகள் அறுபடாமல் இருக்கும்!

******************

மெஷின் மூலம் மஞ்சள் துணிப் பைகள் விநியோகம்?

-வாசுதேவன், பெங்களூரு

த்து ரூபாய் நாணயத்தைப் போட்டால், மஞ்சள் பை வெளியே வருகிறது! நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன். பிளாஸ்டிக் பைகளைப் பெருமளவில் ஒழித்தால்தான், சுற்றுப்புறம் வளம் பெறும். அதற்கு துணிப்பைகள் நிச்சயம் நல்ல மாற்று!

ஆனால் பல ஊர்களில் 'பத்து ரூபாய் நாணயம் செல்லாது' என வியாபாரிகள் வாங்குவதில்லை தெரியுமோ? அது மட்டுமல்ல இந்த 'மீண்டும் மஞ்சப் பை' திட்டத்தில் தரப்படுவது துணிப்பையா? அல்லது மஞ்சள் நிறத்தில் யூஸ் அன்ட் த்ரோ பையா? சரியா தெரியலை…

நம்ப ஏரியாவுல மிஷின் வைச்சாங்கன்னா, ஒரு ட்ரையல் பார்த்துட்டு எழுதறேன் ஸார்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com