0,00 INR

No products in the cart.

  சிஸேரியனுக்கு ஒரு செக்!

ஜி.எஸ்.எஸ்.

ரு அறுவை சிகிச்சையைத் தடுக்க முடியும் என்றால் அதைத் தவிர்ப்பதுதானே இயல்பு, புத்திசாலித்தனம்.   ஆனால் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது சிசேரியன் அறுவை சிகிச்சை.

‘டாக்டர், என் பெண் பிரசவ வலியை தாங்க மாட்டா.  அவளுக்கு சிசேரியன் ஆபரேஷன் பண்ணி பிரசவத்தை முடிச்சிடுங்க’ என்று வேண்டுகோள் விடுக்கும் பெண்ணின் தாய்கள் அதிகரித்து வருகிறார்கள்.   ‘சிசேரியன் ஆபரேஷன்னா நிறைய பணம் பண்ணலாமே.  அதனாலேதான் டாக்டர்களெல்லாம் இயற்கையாக குழந்தை பெறக்கூடியவங்களுக்குக் கூட சிசேரியன் ஆபரேஷன் செய்கிறார்கள்’ என்று கருதுபவர்களும் மிக அதிகம்.

சிசேரியன் முறையில் தேவையில்லாமல் பிரசவம் மேற்கொள்வதைத் தடுக்க டாக்டர்கள், அரசு ஆகியோரைத் தவிர வேறொரு பிரிவினரும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஜோதிடர்கள்.  தெலங்கானாவில் ஏற்பட்டிருக்கிறது இந்த வினோதக் கூட்டணி.

உலகில் நடைபெறும் பிரசவங்களில் 30 சதவிகிதம் சிசேரியன் பிரசவங்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். சிசேரியன் முறையில் குழந்தை பெறுதல் என்பது சகஜமாகி கொண்டிருந்தாலும் அது ஒரு பெரும் அறுவைசிகிச்சை தான்.

சிசேரியன் அறுவை சிகிச்சை என்பது ஒருபோதும் முதல் தேர்வாக இருக்கக் கூடாது.  சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பே இல்லை எனும் நிலையில்தான் இதைச் செய்ய வேண்டும்.  குழந்தை திரும்பியிருக்கிறது.  அதன் தொப்புள் கொடியில் குறைபாடு. அம்மாவுக்கு மிக அதிக ரத்த அழுத்தம், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் போன்ற மருத்துவக் காரணங்கள் இருக்கும் போதுதான் சிசேரியன் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். முறையான மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டும்தான் இந்த வகை பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.  ஆனால் உரிய மருத்துவ காரணம் இல்லாத போதும் சிசேரியன் செய்வதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை.  அது பெரும்பாலும் சாத்தியமும் இல்லை.

ஆக மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதுதான் இப்போது அதிகம் எனத் தோன்றுகிறது.  இதில் இரு தரப்புக்கும் பங்கு உண்டு. ‘பணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.  அதிக வலி இல்லாமல் பிரசவம் நடக்க வேண்டும்’ என நினைக்கும் தாய்மார்கள்.  ‘நம் மருத்துவமனையில் நடக்கும் பிரசவங்களில் பெரும்பாலானவை சிசேரியன் ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு லாபம்’ என்று கூறி மருத்துவர்களை கட்டாயப்படுத்தும் மருத்துவமனை நிர்வாகம்.  ‘நடுராத்திரியில் வலி ஏற்பட்டால் கூட நாம் ஓடிவந்து பிரசவம் பார்க்க வேண்டியதில்லை. ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறைகளில் மருத்துவமனைக்கு வந்து சேர வேண்டிய அவசியம் இல்லை.  வசதியான நேரத்தில் பிரசவத்தை வைத்துக் கொள்ளலாம்’ என எண்ணுகிற சில மகளிர் நல மருத்துவர்கள். பிறகெப்படி சிசேரியன் வகை குழந்தைப்  பிறப்புகள் அதிகமாகாமல் இருக்கும்?

அமெரிக்கா போன்ற நாடுகளில் சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற முக்கிய காரணம் கருவாய்ப்பை விரிந்து கொடுக்காத நிலை ஏற்படுவது தான்.  அல்லது பிறப்புக் குழாய் வழியாக குழந்தை கீழிறங்காததும் ஒரு காரணம். ஆனால் நம் நாட்டில் மிக விந்தையான மற்றொரு காரணமும் இருக்கிறது.

குழந்தை நல்ல நாளில் நல்ல நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்ற தவிப்பு பெற்றோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உண்டு.  ‘ டாக்டர் குறித்த நாளைப் பார்த்தால் அஷ்டமி அல்லது நவமியன்று குழந்தை பிறந்து விடுமே’!  ‘மூல நட்சத்திரத்தில் பிறந்து விடுமோ’ என்றெல்லாம் யோசிக்கும் குடும்பத்தினர் குழந்தை நல்ல வேளையில் பிறப்பது என்பது இறைவன் கையில் இல்லை, நம் கையில்தான் என்ற முடிவுக்கு வருகிறார்கள்!

ஜோதிடரை அணுகி பிரசவம் என்று நடைபெறும் என்று டாக்டர் குறித்து கொடுத்தாரோ அதற்கு முந்தைய சில நாட்களில் எது சிறந்த நாள், அன்று எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை யெல்லாம் எழுதிக் கொண்டுவந்து டாக்டரிடம் கொடுக்கிறார்கள்.  ‘டாக்டர் எங்கள் வம்சத்தின் வாரிசு வரும் புதன்கிழமை காலை 9.57க்கு பிறக்கும்படி ஆபரேஷன் பண்ணுங்க’ என்று கூறுகிறார்கள்.

டாக்டர்களும் ஒத்துழைக்கிறார்கள். அதன்படி பிறந்தவுடன் ‘என்  பேரக் குழந்தை அற்புதமான நேரத்திலே பிறந்திருக்கு. குழந்தையின் வருங்காலம் அமோகமா இருக்கும்’ என்று கொண்டாடுகிறார்கள்.

ஆனால் இந்த காரணங்களுக்காகவெல்லாம் சிசேரியன் முறையை பயன்படுத்துவது முட்டாள்தனம். காரணம் இந்த வகை அறுவை சிகிச்சை பலவித பக்க விளைவுகளை கொண்டது. இயற்கையான பிரசவத்தில் தாய் குணமடைய சில நாட்கள் போதும். ஆனால் சிசேரியன் பிரசவம் நடைபெற்ற தாய் குணமடைய ஆறு ஏழு வாரங்கள் ஆகும்.  சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு அவளுக்கு ரத்த வெளியேற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உண்டு.  குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும்.

எனவேதான் தாய் சேய் இருவரின் நலனிலும் அக்கறை கொண்டு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதை குறைக்க வேண்டும் என்று உண்மையான நல விரும்பிகள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள கரீம் நகர் என்ற மாவட்டத்தின் கலெக்டர் இயல்பான பிரசவத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.  இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்களோடு ஜோதிடர்கள் மற்றும் புரோகிதர்களையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.  பிரசவம் தொடர்பான நடைமுறைகள் அலசப்பட்டன.

இறுதியில் ஜோதிடர்களும் புரோகிதர்களும் “இனி அறுவைசிகிச்சை வழியாக பிரசவத்துக்கு நல்ல நேரம் குறித்துத் தரமாட்டோம்” என்று கலெக்டரிடம் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.   ஆனால் இவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் மருத்துவர்களும் கூட இந்த விஷயத்தில் முழுமையாக மனம் வைத்தாலொழிய பிரச்சினை தீராது என்றே தோன்றுகிறது.

———————————————————————————

சிசேரியன் முறை பிரசவம் பற்றிய சில தகவல்கள்.
 • இது ஒரு பெரும் அறுவை சிகிச்சை
 • முதல் குழந்தையை சிசேரியன் முறையில் பெற்றுக் கொண்டால் இரண்டாவது பிரசவமும் சிசேரியன்தான் என்று கூறப்படுகிறது அப்படி ஒன்றும் கட்டாயமில்லை.
 • மயக்க மருந்து அளித்து உண்டாகும் பிரசவம் என்பதால் குழந்தை பிறந்த உடனே அதைத் தாயால் பார்க்க முடியாது.
 • இந்த வகை அறுவை சிகிச்சையின் போது கருப்பையை நீக்கிவிடக்கூடிய ரிஸ்க் (ஓரளவுதான் என்றாலும்) இருக்கிறது.
 • பிரசவத்தின்போது வலி இருக்காது தான் (காரணம் மயக்க மருந்து). ஆனால் மயக்க மருந்தின் வீரியம் நீங்கி விட்டபிறகு கட்டாயம் வலியிருக்கும்.  சில வகை வலி நிவாரணிகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
 • பிரசவம் நிகழ்ந்த சில மாதங்களுக்கு அதிக எடையைத் தூக்கக் கூடாது. என்றாலும்’ சிசேரியன் செஞ்சுகிட்டா அதுக்கப்புறம் ஆயுளுக்கும் எடை தூக்க கூடாது’ என்பது சரியல்ல.
 • சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்க முடியாதோ என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு. கொடுக்கலாம்.
 • ஜூலியஸ் சீஸர் இந்த முறையில் பிறந்ததால்தான் அதற்கு சிஸேரியன் என்று பெயர் என்று சிலர் கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

2 COMMENTS

 1. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பதை எளிமையாக கருதாமல் ,இயற்கை யான சுகப்பிரசவமே சிறந்தது என்பதை புரிந்து கொண்டோம்.

 2. ஒரு ஆன்மீக குரு சொன்னது,,ஒரு குழந்தையின் விதி . கரு முட்டை இனணயும் பொழுதே எழுதப்படுகிறது . எப்படி ? நிலத்தில் விதைத்த விதையெல்லாம் விளைவதில்லை, விதியுள்ள விதைமட்டுமே (அதற்கும் விதி உண்டு) .விளைகின்றன..அதே போல எத்தனையோ கருமுட்டைகள் உருவாகின்றன . விதியுள்ள முட்டை மட்டுமே குழந்தையாகிறது .அங்கேயே தலையெழுத்து எழுதியாகிவிட்டது . அந்த ஜாதகம் இறைவனுக்கு மட்டுமே தெரியும் .பிறகு இங்கே எப்படி?
  ஜாதகத்தில் எல்லாம் பலிக்காதது காரணம் அது தான் . சிலது பலித்தது என்றால் குருட்டாம் போக்குல பலிக்கறது .,அது ஒரு அவுட்லைன் . அவ்வளவு தான் அவுட்டானாலும் ஆகலாம் .பாஸானாலும் ஆகலாம் . நாள், நட்சத்திரம் பார்த்து குழந்தை எடுப்பதெல்லாம் நம் மனதிருப்திக்குத்தான்

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...