0,00 INR

No products in the cart.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை காப்பாற்றிய ஓர் மன்னிப்பு!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்

ரசனின் ஓர் மன்னிப்பு அவனது சாம்ராஜ்யத்தையே காப்பாற்றியது. அவனது சாம்ராஜ்யம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றிலேயே, அந்த மன்னனின் மன்னிப்பு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால், அது மிகையாகாது.

என்ன பீடிகை போடுகிறீர்கள். தெளிவாக சொல்லுங்கள் என்று நீங்கள் வினவுவது என் காதில் கேட்கிறது.

அந்த அரசன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் மார்த்தாண்ட வர்மன். அவர் மன்னித்தவர் யுஸ்டேஷியஸ் பெனடிக்ட் டிலெனாய் என்ற டச்சு தளபதி. அந்த மன்னிப்பு மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கொளச்சல் யுத்தம் (Battle of Colachel)

1741ம் ஆண்டு, டச்சு கிழக்கிந்திய கம்பெனி, கேரளாவின் நறுமணப் பொருட்கள் விற்பனையில் ஏகபோக உரிமை கொள்ள முயற்சித்தது. கேரளாவின் நறுமணப் பொருட்களுக்கு, ஐரோப்பாவில் மவுசு அதிகம். ஆனால், இத்தகைய ஏகபோக உரிமைக்கு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் மார்த்தாண்ட வர்மன் பெரும் இடைஞ்சலாக இருந்தார். அவர் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடிபணியவில்லை. எனவே, திருவிதாங்கூர் சமஸ்தானத்தை வெற்றிக் கொள்ள, டிலெனாய் என்ற டச்சு தளபதியின் கீழ் ஒரு படை கொளச்சல் துறைமுகத்தை முற்றுகையிட்டது.

இந்த முற்றுகையில், மார்த்தாண்ட வர்மன், பல்வேறு தந்திரங்களை கையாண்டார். அருகிலிருந்த மீனவர்கள் துணையுடன், பனைமரத்தை பீரங்கி போல வடிவமைத்து, அதனை மலைமேல் நிறுத்தி வைத்தார். மீனவர்கள் துடுப்புடன் கடலில் நிற்பது தூரத்தில் இருந்து பார்க்க பெரிய துப்பாக்கியுடன் நிற்பதைப் போல் அமைத்தார். அரிசி வைக்கப்பட்டிருந்த டச்சு கப்பல் தீப்பிடிக்க செய்தார். ‘போரில் படைகள் வயிற்றில் நடக்கின்றன,’ என்று நெப்போலியன் சொன்னதுபோல், உணவு இல்லாதபடியாலும், திருவிதாங்கூர் படைகளில் துணிச்சலான போர்முறையாலும், டிலெனாய் சரணடைந்தார். அவர் சிறைபிடிக்கப்பட்டு, உதயகிரி கோட்டையில் வைக்கப்பட்டார். டிலெனாயினை மார்த்தாண்ட வர்மன் நினைத்திருந்தால், கொன்றிருக்க முடியும். ஆனால், அவர் டிலெனாயின் வீரத்தையும், அவரது ஆயுதம் தயாரிக்கும் திறன் போன்றவற்றை அறிந்திருந்தார். அவரை மன்னித்து, ஒரு சிறிய படையை, கட்டுக்கோப்பு மற்றும் ஐரோப்பிய யுத்த தந்திர பாணியில் தயார் செய்யுமாறு பணித்தார். டிலெனாய் மிகவும் திறம்பட அந்தப் படையை தயார்படுத்தவே, மன்னர் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அவரை திருவிதாங்கூர் படையின் தளபதியாக நியமித்தார்.

டிலெனாய் பின்வரும் மாற்றங்களை திருவிதாங்கூர் ராணுவத்திற்கு கொண்டு வந்தார்.

  • 50,000 பேர் கொண்ட படையை, தரைப்படை, குதிரைப்படை, பீரங்கிப் படை, வரிசைப்படுத்தப்படாத படை என்று பிரித்தார். அந்தப் படையை ஐரோப்பிய பாணியில் தயார் செய்தார்.
  • வெடி மருந்து, துப்பாக்கிகள் போன்றவற்றை படையில் புதிதாக அறிமுகப்படுத்தினார்.
  • ராணுவ தளவாடங்களையும், பாதுகாப்பு கோட்டைகளையும் சீரமைத்தார். புதிதாக உருவாக்கினார்.
  • டிலெனாய் திறமையான ராணுவ நிர்வாகி. அவர் திவான் ராமைய்யன் தளவாய், மார்த்தாண்ட வர்மன் அவர்களின் துணையுடன், வடக்கே கொச்சின் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விரிவாக்கினார். காயம்குளம், கொட்டரக்காரா,பந்தளம், அம்பளப்புழா, எடப்பள்ளி, தெக்கும்கூர், வடக்கும்கூர் சிற்றரசுகள் திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டன.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்காக டிலெனாய் கட்டிய கோட்டைகள்:

நெடும்கோட்டை (திருவிதாங்கூர் சுவர்): வடக்கே ஹைதர்அலி பெரிய அளவில் மைசூர் சாம்ராஜ்யத்தை விரிவு செய்தபோது, வடக்கு சாம்ராஜ்யங்கள் திருவிதாங்கூரை தாக்க முற்பட்டால், அதனைத் தடுக்க, சீனப் பெருஞ்சுவர் போல, 42 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடும்கோட்டை சுவர் கட்டப்பட்டது. அது அரபிக் கடலிலிருந்து , மேற்குத் தொடர்ச்சி மலை ஆனைமலைக் குன்றுகள் வரை நீண்டது.1762ல் கட்டத்தொடங்கிய சுவர் 1775ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இருபது அடி அகலமும், பன்னிரெண்டு அடி உயரமும் கொண்டு கருங்கற்கலால் ஆன சுவர் அது. 16 அடி அகலமும், 20 அடி ஆழமும் உடைய அகழி அதைச் சுற்றி கட்டப்பட்டது. அந்த அகழியில் முட் செடிகள், கூரிய முனையுடைய மூங்கில் ஈட்டிகள், விஷப்பாம்புகள் என அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோட்டைக் காவலுடன், வீரர்கள் பதுங்கிக் கொள்ள பதுங்குமிடங்களுடன், வெடிபொருள் சேமிப்பு கிடங்குகள், வீரர்கள் கண்காணிப்பு மையங்கள் என்று பல்வேறு அம்சங்களுடன் கோட்டை கட்டப்பட்டது.

1777ம் ஆண்டு டிலெனாய் மறையும் வரை, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எந்த ஒரு சண்டையிலும், டிலெனாய் அவர்களின் திட்டப்படி திருவிதாங்கூர் படை வெற்றி வாகை சூடியது. அவரது மறைவுக்குப் பின்னர், திப்புசுல்தான், தனது தந்தை ஹைதர்அலியால் பிடிக்க முடியாத, திருவிதாங்கூர் சமஸ்தானத்தை பிடிக்க, 20000 படை வீரர்களுடன், 1789 டிசம்பர் 28ம் நாள் வந்தார். இத்தகைய நெடும்கோட்டை காரணமாக, சிறிய படையான திருவிதாங்கூர் படை, எவரும் நடுங்கும் மைசூர் படையை விரட்டியது. சிறிய பாதையை கோட்டைச்சுவரில் ஏற்படுத்தி, அங்கு நுழைய முயன்றபோது, இருமருங்கிலும் இருந்து பீரங்கி தாக்குதலில், சேமல் பக் போன்ற பெரிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் திப்புசுல்தானின்   கால் உடைந்து. அவரது வீரர்கள் அவரைத் தூக்கிச் சென்றனர். திப்புசுல்தானின் இந்த கால் பாதிப்பு, அவரது இறுதி காலம் வரை இருந்தது. திப்பு சுல்தானின் படை புறமுதுகிட்டு ஓடியது. திப்பு சுல்தான், இந்த சுவர் வெறுக்கத்தக்க சுவர் என்று கூறி, அதனை உடைக்கும் வரை நான் கூடாரத்தை விட்டு விலகமாட்டேன் என்றார். ஒரே இரவில், 2000 வீரர்களை திப்புசுல்தான் இழக்க, இந்த கோட்டையின் ரகசிய அறைகள் உதவின. 1790ல் திப்புசுல்தானின் பீரங்கி தாக்குதலை ஒன்றரை மாதங்கள் தாக்குபிடித்து, சிறிய அளவில் கோட்டை சுவரில் பிளவு ஏற்பட, திப்புசுல்தான் உள்புகுந்து, திருவிதாங்கூரை நோக்கி செல்ல முயன்றார். அப்போது, கோபத்தில் இந்த சுவரை, தனது படைவீரர்களைக் கொண்டு அழித்தார். பின்னர், பெரியார் ஆறு அருகே படைகள் முகாமிட்டபோது, ஆற்றின் மேல் கட்டப்பட்ட, விவசாயிக்களுக்கான அணை, திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் உடைக்கப்பட்டு, திப்பு சுல்தானின் வெடிபொருட்கள் சேதமாயின. மேலும், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, காட்டுவெள்ளம் ஏற்பட்டு, திப்புசுல்தான் பின்வாங்க நேர்ந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானம் மிகப்பெரிய மைசூர் படையை வெற்றி கொள்ள, இந்த நெடும்கோட்டை உதவியது. டிலெனாயின் அற்புதமான வடிவமைப்பு, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படுகிறது.

பத்மநாபபுரம் கோட்டை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரண்மனையாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனையை காப்பதற்காக, கருங்கல்லால் டிலெனாய் கோட்டை கட்டினார். 187 ஏக்கர் பரப்பளவை உடைய கோட்டை, கிட்டத்தட்ட 24 அடி உயரமும், 35 அடி அகலமும் கொண்ட பலமான சுவர்களைக் கொண்டு விளங்கியது.

உதயகிரி கோட்டை: 18 அடி உயரமும் 15 அடி தடிமனும் உடைய கருங்கற்களால் ஆன கோட்டையை டிலெனாய் எழுப்பினார். ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் இடமாகவும், இது விளங்கியது. இங்கிருந்து ஆரல்வாய்மொழி வரை, டிலெனாய் சுரங்கப்பாதையில் சென்று வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தார். டிலெனாய் கிருத்துவர் என்பதால், அவருக்கு இங்கே அரசரே ஒரு தேவாலயத்தை கட்டிக் கொடுத்தார். இங்குதான் டிலெனாய் தங்கி வந்தார். இந்தக் கோட்டை புலியூர்குறிச்சி என்ற இடத்தில் கட்டப்பட்டது. இதனை மக்கள் தில்லனாய் கோட்டை என்று அழைத்தனர்.

பீரங்கி தொழிற்சாலை: பீரங்கி குண்டுகள் தயாரிப்பதற்காக தனியாக ஒரு தொழிற்சாலையை டிலெனாய் நிறுவினார். இங்கு இரும்பில் பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்பட்டன. 30 கிலோ முதல் 1800 கிலோ வரையிலான பீரங்கி குண்டுகள் இங்கு தயாரிக்கப்பட்டன.

வட்டக்கோட்டை: பாண்டியர் காலத்து கடற்கரை மண் கோட்டையான வட்டக்கோட்டையை, டிலெனாய் கருங்கற்களால் மீண்டும் எழுப்பினார். இது கடல்வழி தாக்குதல்களிலிருந்து பெரும் பாதுகாப்பை அளித்தது. கோட்டையின் ஓரங்கள் வட்ட வடிவில் இருப்பதால், வட்டக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. பீரங்கிகளை மேல்தளத்திற்கு கொண்டு செல்ல, சாய்வுப் பாதைகள் அமைக்கப்பட்டு, பெரிய தாக்குதலை தாங்கும் அளவிற்கு அருமையாக கட்டமைக்கப்பட்டது.

வெடிபொருட்கள் தொழிற்சாலை: பத்மநாபபுரம் அரண்மனைக்கு அருகிலிருந்த இந்த தொழிற்சாலையில் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் தயாரிக்கப்பட்டன.

1777ம் ஆண்டு, டிலெனாய் இறந்தபோது, அவரது வேண்டுகோளுக்கு இணங்க, அவரது உடல், உதயகிரி கோட்டையில், தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. அவரது கல்லறையில், லத்தீன் மற்றும் தமிழ் வாசகங்கள் இடம்பெற்றன.பின்னர், அவரது மனைவி மற்றும் மகனின் உடல்களும் அவரது சமாதி அருகே புதைக்கப்பட்டன.

அவரது கல்லறை வாசகம் பின்வருமாறு:

பயணியே நில்லுங்கள். இங்கு திருவிதாங்கூர் ராணுவத்தின் தளபதியும், திருவிதாங்கூர் அரசருக்கு அவரது ராணுவத்தின் பலத்தாலும் மற்றும் எதிரிகளின் பயத்தினாலும், காயங்குளம் முதல் கொச்சின் வரையிலான சிற்றரசுகளை அடக்கி, கிட்டத்தட்ட முப்பத்தி ஏழு ஆண்டுகள் விசுவாசமாக சேவை புரிந்த, யுஸ்டேஷியஸ் பெனடிக்ட் டிலெனாய் உறங்குகிறார். அவர் 62 ஆண்டுகள் 5 மாதங்கள் வாழ்ந்தார். 1777 ஜூன் முதல்நாள் உயிர் நீத்தார். அவர் அமைதியில் துயில் கொள்வாராக.

தனது எதிரி என்றாலும், அவரை மன்னித்து, அவரின் திறமைகளை, தனது சமஸ்தானத்திற்கு உதவ அளிக்குமாறு வேண்டிய மார்த்தாண்ட வர்மனுக்கு, டிலெனாய் சிறந்த நண்பராக ஆனார். அவரை திருவிதாங்கூர் சமஸ்தான மக்கள் ‘வலிய காப்தான்‘ அதாவது தலைசிறந்த தளபதி என்று அன்புடன் அழைத்தனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்து, பின்னர், சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை காப்பாற்றியது, மார்த்தாண்ட வர்மனின் மன்னிப்பு என்றால் அது மிகையாகாது.

பகைவரையும் நேசித்து, அவர்களை மன்னித்து, அவர்களுடன் நட்புடன் இருந்தால், அது எவ்வளவு நன்மை விளைக்கும் என்பதை டிலெனாய் மற்றும் மார்த்தாண்ட வர்மனின் நட்பு நமக்கு சொல்கிறது.

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
வெங்கடராமன் ராமசுப்ரமணியன் மென்பொருள் துறையில் மூத்த கட்டமைப்பு நிபுணராக வேலை செய்து வருகிறார். மின்னணுவியல் பொறியியலில் இளங்கலையும், வணிக மேலாண்மையில் முதுகலையும் மற்றும் மனித மேம்பாட்டிற்கான யோகாவில் முதுகலையும் பயின்றவர். தனிமனித நிதி ஆர்வலர். கதைகள், தனிமனித நிதியில் கட்டுரைகள், எழுதியுள்ளார். தமிழார்வம் காரணமாக நிரல் மொழியில் டுவிட்டரில் திருக்குறளை பதிவிட்டுள்ளார்(https://twitter.com/thirukuralfull). பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். உலகளாவிய தமிழ் கோராவில் தொடர் பங்களிப்பு காரணமாக சான்றாண்மை விருது பெற்ற நான்காவது நபர் இவர்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...