முனி!
பேயை
துரத்தும் சாக்கில்
என் மீது
ஆணி அடித்து
துன்புறுத்துகிறார்களே
வருந்துகிறது
முனியாய் நின்ற
அந்த
பனை மரம்!
………………………………………………………
அனுபவம்!
திருமணப் பதிவு
அலுவலகத்தில்
இருக்கக் கூடாத
வாசகம்
“முன் அனுபவம் தேவை.”
………………………………………………………
புதுச் செருப்பு!
திருப்பி அடிக்க
முடியவில்லையே
வெறுப்புடன் அவர்
முறைத்துப் பார்க்கிறார்
காலைக் கடித்த அந்த
புதுச்செருப்பை.
………………………………………………………
அன்பு
அள்ளிக் கொடுத்தால்
கிள்ளியாவது
திரும்ப கிடைக்கிறது
அன்பு.
………………………………………………………
இறுமாப்பு
மணம் வீசுவதில்
நானே உயர்ந்தவள்
இறுமாப்பு கொள்கிறாள்
ஜாதி மல்லி.
………………………………………………………
மது
அருந்துபவரின்
உயிரை
ருசித்து குடிக்கிறது
மது.
………………………………………………………
சகுனம்
கேட்டுச் சென்ற
கடன் கிடைக்காததற்கு
கொடுக்க மறுத்தவரை
விட்டுவிட்டு
கிளம்பும்போது
தும்மல் போட்ட
எதிர்வீட்டுக்காரரை
சபிக்கிறார்
தொட்டதெற்கெல்லாம்
சகுனம் பார்ப்பவர்.
………………………………………………………
குட்டிச் சுவர்
உன்னால்
எனக்கும்
கெட்ட பெயர்
குட்டிச்சுவரை
முறைக்கிறது
கழுதை.
-எஸ். பவானி, திருச்சி
தை 16, மங்கையர் மலரில் பவானி எழுதிய கவிதைகள் எட்டும் வானவீதியில் பவனி வரும் நட்சத்திரமாக ஜொலித்தது, மனதில் இடம் பிடித்தது, பாராட்டுக்கள்.
எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.
கவிதைகள் அனைத்தும் ரசனை மிக்கதாக
இருந்தது.