0,00 INR

No products in the cart.

ஓ.டி.பி.

சிங்கப் பெண் காவலர்கள்
குற்றம் – வழக்கு – விசாரணை – 6
– பெ.மாடசாமி
ஓவியம் : தமிழ்

‘கொரோனா’விற்கு முன்பு பள்ளிச் செல்லும் குழந்தைகளிடம் கைப்பேசியை கொடுக்காதீர்கள் என்று சொன்ன உலகம் இன்று கைப்பேசியில் வகுப்பறைகள் நடத்திக் கொண்டிருக்கிறது. ‘கைக்குள் உலகம்’ என்பது மாறி ‘கைக்குழந்தையிடம் உலகம்’ என்ற நிலை உருவாகிவிட்டது.

தள்ளுவண்டி, சுண்டல்காரர் ஒட்டியிருக்கிற ‘கூகுள் பே’ பணமில்லா பரிவர்த்தனையைப் படம் பிடித்து காட்டுகிறது இன்றைய உலகம்.
சோஷியல் மீடியா என்ற நிலையில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் யு ட்யூப் போன்றவை உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கின்றன. ஒவ்வொன்றையும் கோடான கோடி பேர் பின்தொடர்வதாகக் காண்கிறோம்.

– பெ.மாடசாமி (முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர்)

முன்பெல்லாம் குற்றவாளிகளை Modus Operandi கொண்டு வகைப்படுத்தினர். அதன் பிறகு ஒயிட் காலர் குற்றவாளிகள் உருவானார்கள். இவர்களுள் குற்றவாளி யார் என்பது தெரிந்தது, தேடினார்கள்.

ஆனால், இன்றைக்கு ஒரு கணினி அல்லது ஒரு கைப்பேசி பற்றிய அறிவு கொஞ்சம் இருந்தாலே உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் குற்றச் செயலில் ஈடுபட முடியும் என்கிற நிலை. நம்முடைய செயல்பாடு எந்த அளவிற்கு கணினியோடு இணைந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் கணினி குற்றங்களால் ஏதோ ஒரு வகையில் மாட்டிக்கொண்டு பாதிப்புள்ளாவதற்கு
வாய்ப்புகள் அதிகமே.

மனிதனுடைய ஆசை, பேராசை, தேவை, அச்சம், அவசரம், பொறாமை ஆகியவைகள்தான் கணினி குற்றவாளிகளுக்கு மூலதனமாகும். இவை அனைத்துமே உலகளவில் எல்லா மனிதர்களிடமும் இருப்பதால்தான் பல அறிவாளிகள்கூட நொடியில் ஏமாந்து போகிறார்கள்.

ன்றைக்கும் ‘சைபர் க்ரைம்’ என்றால் தொலைந்துபோன கைப்பேசியை கண்டுபிடிக்கும் பிரிவு என்று எண்ணிக் கொண்டிருக்கிற 75 சதவிகிதம் பொதுமக்கள் மத்தியில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ‘அதிமுக வின் வெப்சைட்டை’ முடக்கிய வரலாறு உண்டு என்பதும், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கர்நாடகா மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்குமான சீருடை தைத்து கொடுக்கிற 200 கோடிக்கான ஆர்டரை பெற்று தருவதாக ஏமாற்றி கமிஷனாக 20 கோடியை அந்நிறுவனம் பறிகொடுத்ததும் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருவதாக பல கோடிகளை ஏமாற்றிய சுகேஷ், சந்திரசேகர் போன்ற நபர்கள் இருப்பதையும், விதவையாக இருக்கும் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையையே மூலதனமாகக் கொண்டு ஏமாற்றும் கும்பலும் தனக்கேற்ற துணையைத் தேடும் ஆண், பெண்களை குறி வைத்து பல லட்சங்களைக் கரக்கும் நைஜீரிய கும்பலும், இன்டர்வியூ நடத்தி வேலைக்கான உத்தரவினை வாங்கித் தருவதற்கு வைப்புத்தொகை என்ற பெயரில் ஏப்பமிடும் நபர்கள் பற்றியும், பெண்களை ஏமாற்றி படம் எடுத்து மிரட்டும் கும்பல் பற்றியும், வங்கி கணக்கில் ஏடிஎம் சேவையில் ஏமாற்றி OTP மூலம் பணம் பறிக்கிற கும்பல்கள் பற்றியும் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஓவியம் : தமிழ்

தொலைக்காட்சியில் கலகலப்பு, கண்ணியம் என்கிற வகையில் பிரபலமான பெண்மணி ருத்ரஸ்ரீ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வர நிருபர்கள் அவரை சூழ்ந்து கொள்ள சிரிப்பையே பதிலாக்கி நகர்ந்து விடுகிறார். ஆணையரிடம் கொடுத்த புகார் மனு சைபர் பிரிவில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் (பெயர் சொல்ல விரும்பாத உதவி ஆய்வாளர்) வந்து சேர்கிறது.

‘சிறகை விரிக்க நினைப்பவர்களே பறக்க முடியும். பறக்க முடிந்தவர்களே சிறக்க முடியும்’ என்பதற்கு ருத்ரஸ்ரீ ஒரு எடுத்துக்காட்டு.

அவருடைய புகாரானது திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய வளர்ச்சி பொறுக்காது, தன்னுடைய வேலையை மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னையை ஏற்படுத்தி திருமணத்திற்கே தடை ஏற்படுத்துகிற வகையில் தவறான, பொய்யான பதிவுகளைத் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமில் பதிவு செய்து தனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுமாகும்.

அவர் மீது கொண்ட நம்பிக்கை நல்லெண்ணம் காரணமாக மாப்பிள்ளை வீட்டாருக்கு செய்தி எட்டியபோது அவர்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. எனினும், மனஉளைச்சல் காரணமாக அதனை அவ்வளவு எளிதாக அவரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய வலியை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் புகார் அளிக்க முன்வந்துள்ளார்.

பெண் உதவி ஆய்வாளர் அவருடைய மனநிலையை புரிந்துக்கொண்டு அவரை தைரியப்படுத்துகிற வகையில் சில ஆலோசனைகளை வழங்கினார். இன்ஸ்ட்ராகிராமில் பதிவு செய்தவரின் Profile போலியானது என்று தெரிந்தது. பிரபலங்களின் சோசியல் மீடியாக்களை பலர் பின்தொடர்வது போல் ருத்ரஸ்ரீயின் இன்ஸ்டராகிராமை தொடர்பவர்களில் சிலர் வரவழைக்கப்பட்டதில், அவர்கள் தீவிர ரசிகர்கள் என்பது மட்டுமே தெரிந்தது.

இது சம்பந்தமாக பெண் உதவி ஆய்வாளர் சைபர் கிரைமில் தனக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை கொண்டு இதனை எப்படி கையாள்வது என்று தொடர்ந்து 2 நாட்களாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். இன்ஸ்ட்ராகிராம் பதிவு சம்பந்தமாக சட்டப்படி நடவடிக்கை தொடர ஆதாரப்பூர்வமான சாட்சியம் அமெரிக்காவிலிருந்து வரவேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. அதே நேரத்தில் உடனடியாக தினமும் வருகிற பதிவுகளை நிறுத்தி ருத்ரஸ்ரீயை மனஉளைச்சலிலிருந்து விடுவிக்க வேண்டும்.

ஒருவர் Profile ஆரம்பிக்கும்போது mail ID கொடுக்கப்பட வேண்டும். பலர் தங்கள் மெயில் I.D.யில் தங்கள் பெயரைக் குறிப்பிடுவதுண்டு. அதைப் பார்க்கும்போது, அந்த பெயரையோ அல்லது அதில் பாதியையோ Profileலில் பார்க்க வாய்ப்புண்டு. இதன் அடிப்படையில் சிலர் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் ஒவ்வொன்றாக கழிக்க மிஞ்சியது ஒருவருடைய பெயர். அவரும் ஒரு பிரபலம். அவர்தான்
இதைச் செய்கிறார் என்பதை உடனடியாகச் சொன்னால் அவர் மறுத்துவிட்டால் அதன்பின்பு எதுவும் செய்ய இயலாது.

‘ஒரு கதவு மூடியிருந்தால் மற்றொரு கதவு திறந்திருக்கும்’ என்பார்கள். அந்த வகையில் இரண்டு நாள் சிந்தித்து திறந்திருக்கும் கதவைக் கண்டுபிடித்தார் ஆய்வாளர்.

அப்படி கண்டுபிடித்ததற்கான விடைதான் OTP. ஆனால் அந்த OTP நாம் யாரை சந்தேகப்படுகிறோமோ அவருடைய செல்போனில்தான் வரும். இந்த துருப்புச் சீட்டை கையில் எடுத்தார் உதவி ஆய்வாளர்.

சந்தேகப்பட்ட நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். உதவி ஆய்வாளரின் அலுவலகத்திற்கு வந்த அவர் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவில்லை. பெண் உதவி ஆய்வாளர் இரண்டு நாட்களாக மூளையை பிசைந்து கண்டுபிடித்திருந்த தொழில் நுட்ப அஸ்திரத்தை தன்னுடைய கம்ப்யூட்டர் வாயிலாக தூக்கிப் போட்டார். அடுத்த நொடி அதற்கான விடை விசாரணைக்கு வந்த பிரபலத்தின் கையிலிருந்த கைப்பேசியில் மெசேஜ் வந்ததற்கான ஒலியாகக் கேட்டது. சற்றும் தாமதிக்காது “உங்க போனை கொஞ்சம் கொடுங்கள் மேடம்” என்று கேட்டதும் அவரும் கொடுக்க, அவருடைய கைப்பேசியில் வந்திருந்த OTP பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல அதிர்ந்து போனார் வந்தவர். காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

இனி செய்வதில்லை என ஒதுங்கிக்கொண்டார். ஒருவரின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது பொறாமையால் ஏற்பட்ட நிகழ்வுதான் இது.
ருத்ரஸ்ரீயின் திருமணம் அவர் எண்ணியபடி குறித்த நாளில் சிறப்பாக நடந்தது. OTP மூலம் தடையை தகர்த்ததெரிந்த காவல்துறையினர் திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.

சைபர் குற்றங்களைத் தடுப்பது பற்றி நன்கு அறிந்தவர்கள் சேர்ந்து ஆரம்பித்த ஒரு அமைப்புதான் ‘சைபர் சொசைட்டி ஆப் இந்தியா.’ பள்ளி மற்றும் கல்லூரி வாயிலாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்படி அமைப்பு முன் வந்துள்ளது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
ஒவ்வொரு காக்கிச்சட்டைக்காரருக்கும் ‘சைபர் குற்றத் தடுப்பு’ பற்றி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழக காவல் துறையின் சைபர் குற்றங்கள் 100% சைபராக மாறும் என்பது உறுதி.
(அடுத்தது…)

(உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது)

பெ. மாடசாமி
பெ. மாடசாமி நெல்லையில் சிங்கம்பட்டி சொந்த ஊர். 34 ஆண்டுகள் தமிழக காவல் துறைப் பணி. மனைவி பகவதி. “காக்கியின் கதிர் வீச்சு”, காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், “வீடு தேடி வரும் ஆபத்து, பெண்கள் பாதுகாப்பு”. ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்”. “ மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள்”... இவை படைப்புகள்.பள்ளி கல்லூரி நாட்களில் தமிழில் மேடைப் பேச்சு அனுபவம். ‘வாழும் வரை தமிழுக்காக வாழ்வது’ இவரது பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...