0,00 INR

No products in the cart.

கிழக்கு ஐரோப்பா!

பயணம் – 11
– பத்மினி பட்டாபிராமன்


நி
யாண்டர்தால் மனிதர்களின் நாடு ஸ்லோவேனியா
ஒரு குகையில் ஒரு கரடியின் தொடை எலும்பு கிடைத்தது. அதில் வரிசையாக துளையிட்டு புல்லாங்குழல் போல் இருந்தது. கார்பன் டேட்டிங்கில் அது 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குகைகளில் வாழ்ந்த, மனித குலத்தின் முன்னோடிகளான நியாண்டர்தால் மனிதர்கள் இசைக் கருவி போல அதை உபயோகப்படுத்தியிருக்கலாம் என்றனர் ஆராய்ச்சியாளர்கள். 2,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித முன்னோடிகளும் இங்கே வாழ்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எலும்பு இசைக் கருவி கிடைத்த இடம். ஸ்லோவேனியா நாடு.

யூகோஸ்லேவியா (Socialist Federal Republic of Yugoslavia) நாம் அறிந்த ஒரு கம்யூனிச நாடு. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படைகளால் தாக்கப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஏழு நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா.

1991ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி யூகோஸ்லேவியாவிலிருந்து சுதந்திரம் பெற்று ஸ்லோவேனியா குடியரசு. (Republic of Slovenia) என்று ஆயிற்று. ஜூலியன் ஆல்ப்ஸ் மலைத் தொடர் ஒருபுறம் கொண்டு, மத்தியதரைக் கடல் பார்டர் கட்டின தென் கிழக்கு ஐரோப்பிய நாடு ஸ்லோவேனியா. நாட்டின் பாதிப் பகுதிக்கு மேல் (58.3) சதவீதம் காடுகள் நிறைந்தது. பனி மலைகள், சுற்றிலும் இருப்பதால் பனிச் சறுக்கு விளையாட்டு இங்கே மிக பிரபலம். அதற்கான இடங்கள், 50க்கும் மேல் இருப்பதால் உலகின் பனிச் சறுக்கு ஆர்வலர்கள் வந்து குவிகிறார்கள்.

ஸ்லோவேனியாவின் தலைநகரம் ஜுப்லிஜனா (Ljubljana)

5200 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட உலகின் மிகப் பழமையான சக்கரம் இந்த நகரம் அருகே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இங்கு புழக்கத்தில் இருக்கும் கரன்ஸி யூரோ. மக்கள் ஸ்லோவீன் மொழி பேசினாலும் ஆங்கிலமும் பேசுவதால் மொழிப்பிரச்னை இல்லை. திருட்டுக் குற்றங்கள் மிகக் குறைவு என்பதால் பாதுகாப்பான நாடு. தலைநகருக்குள்
சின்ன விசிட் அடித்துவிட்டு நாம் சென்ற இடம், 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ப்லெட் ஏரி. இது, இந்த நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலம்.

நீல நிறத்தில் ப்ளெட் ஏரி (Lake Bled)

ஜூலியன் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களின் பனி உருகி உருவான அழகான ஏரி. அதனால் அடர் நீலத்தில் காட்சி அளிக்கிறது. பூமிக்கடியில் இருக்கும் நீரூற்றுக்கள் ஏரி உறைந்து போகாமல் காக்கின்றன. ஏரிக்கு நடுவே ஒரு குட்டித் தீவு. குட்டித் தீவின் நடுவில் இருக்கும் மேரி மாதா கத்தோலிக்க தேவாலயம், 1600களில் கட்டப்பட்டது. இந்த ஆலய மாதாவை Our Lady of the Lake என்றும் Church of the Assumption of Mary என்றும் அழைத்து வழிபடுகிறார்கள். இதன் 170 அடி உயர டவர், சுற்றி இருக்கும் இயற்கை அழகுக்கு சவால் விடும், கம்பீரத்தோடு கவர்கிறது.

ஏரியின் அழகுக்கு மேலும் எழில் சேர்க்க, கரையில் மரத்தால் செய்யப்பட்ட, துடுப்புகளால் செலுத்தப்படும் ப்ளெட்னா (Pletna) படகுகள் பல வண்ணங்களில் வரிசையாக நிற்கின்றன.

சர்ச் இருக்கும் தீவுக்கு பயணிகளை கூட்டிச் செல்லும் படகுப் போக்குவரத்து
1600ம் ஆண்டுகளிலேயே ஆரம்பித்து விட்டதாம். இந்த வண்ணப் படகுகள், இயந்திர உதவியின்றி கையால் உருவாக்கப் படுவதாகச் சொல்கிறார்கள். படகோட்டி துடுப்பு போட்டுதான் ஓட்டுகிறார். சுமார் 15 நிமிடப் பயணமும் ஒருகவிதை. ஆழமான ஏரிதான் என்றாலும் லேசாக பெய்துகொண்டிருந்த மழையும், குளிரும், சுற்றி அரண் நின்ற மலைகளும், மதி மயக்கத்தைத் தந்தன. இயற்கை அழகும் போதை அல்லவா?

தேவாலயத் தீவில் இறங்குகிறோம். டவரின் உச்சிக்கு செல்ல பரோக் (Baroque) பாணியில் கட்டப்பட்ட கற்களாலான 99 படிகள் உள்ளன. மலைக்காமல் மலைப் படிகளில் ஏறிச் சென்றோம். மேரி மாதாவைப் பார்க்கும் ஆவல்.

இந்த தேவாலயத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. மணமகன், தன் மணப்பெண்ணை, கல்யாண மணியோசை ஒலிக்கும்போது, இந்த படிகளில் தூக்கிப் போய், சர்ச்சுக்குள் சென்று வரம் வேண்டினால், வாழ்க்கை, அதிர்ஷ்டம் மிக்கதாக அமையும் என்று ஒரு நம்பிக்கை இங்கே… புனித யாத்திரைத் தலமாக இந்த தேவாலயம் கொண்டாடப்படுகிறது.

தேவாலயத்தின் மணியை அடிப்பவர்களுக்கு நினைப்பது நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை. மணி ஓசை கேட்டதிலேயே நம் நம்பிக்கை வீணாகாமல், படிகள் ஏறிப் போனதும், சின்னதாக ஒரு கஃபேயில் காஃபி, க்ரீம் கேக் கிடைக்கிறது!

தேவாலயத்தின் உள்ளே மேரி மாதாவின் சிலை உயர்ந்த பீடத்தில் தங்கம் போல் ஜொலிக்கிறது. முன் பக்கம் நடுவில் தொங்கும் கயிற்றின் உச்சியில் மணி. சர்ச்சைச் சுற்றி வரும்போது அருகே மற்றோர் குன்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் பெரிய கோட்டை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

இரண்டாம் ஹென்றி அரசரால் 1004ல் கட்டப்பட்ட கற்கோட்டை, ஏரிக்கு நடுவே எப்படிக் கட்டினார்களோ? மலைத்துப் போகிறோம்! போய்ப் பார்க்க ஆசைப்பட்டாலும் அதற்கான கட்டணம் கோட்டையை விட மலைப்பானதாக இருக்க, பைனாகுலர்ஸ் வழியே பார்த்து ரசிக்கத்தான் முடிந்தது.

சாரா, ட்ராவா, முரா இவையெல்லாம் ஸ்லோவேனியாவின் நதிகள். இவற்றின் கரைகளில் முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. மீண்டும் படகில் ஏரியைக் கடந்து வந்து பார்க் ஹோட்டலுக்குத் திரும்பினோம். அருமையான இந்திய உணவு வகைகளை ஒரு இந்தியன் செஃப் தயாரித்திருந்தார். ப்லெட் ஏரியின் அலைகள் மனதிலும் நினைவுகளாய் அலையடித்தன.

அடுத்த நாள் ஆஸ்ட்ரியா நாட்டின் தலைநகரான வியன்னா நோக்கி எங்கள் பயணம். கோச்சில் கிளம்பும்போது கொட்டும் மழை. கோச்சில் இலவசமாக வைஃபை வசதி கிடைத்ததால் ஸ்மார்ட் ஃபோன் அந்த மழையிலும் சிறப்பாக வேலை செய்தது.

ஐந்து மணி நேரப் பயணத்தில் கூடவே வரும் ஆல்ப்ஸ் மலையின் அழகிய சிகரங்கள், ஏரிகள் இவற்றை சுமார் ஃபோட்டோ எடுக்கவும் உடனே பார்க்கவும் முடிகிறதே. சில வருடங்களுக்கு முன் இந்த வசதி எல்லாம் ஏது?
கேமராவில் படம் எடுத்து ஊர் வந்த பிறகல்லவா ப்ரின்ட் போட வேண்டும்..?

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஆஸ்ட்ரியா

யற்கை அழகில் ஆஸ்ட்ரியாவை விஞ்ச எந்த நாடும் இல்லை. என்பது பல நாடுகளைப் பார்த்த எனது கருத்து. ஐரோப்பிய யூனியனுடன் இணைந்த நாடு. ஆஸ்ட்ரியா, சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் தரும் நாடு. 63 சதவீதம் கழிவுப் பொருட்கள், மறு சுழற்சி செய்யப்படுகின்றன. நாட்டின் பெரும்பாலான மின் உற்பத்தியும் மறு சுழற்சி முறையில்தான் தயாரிக்கப் படுகிறது.

பனிமலையில் படங்கள்

நாட்டின் நிலப்பகுதியில் 62 சதவீதம் ஆஸ்ட்ரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடர்தான். 3000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட 13 சிகரங்களும், 2000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட 34 சிகரங்களும் ஆஸ்ட்ரியாவின் மலைத் தொடரில் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பாயும் நதிகளும், பள்ளத்தாக்குகளும் ,வனங்களும் இயற்கையின் கொடை. ஐரோப்பாவின் மிக உயர்ந்த அருவி, நீண்ட பனிக் குகைகள் இங்கே தான் உள்ளன.

மனித வரலாற்றின் முக்கிய மைல் கல்லாக, ஆஸ்ட்ரியன் ஆல்ப்ஸில்தான் 5200 வருடங்களுக்கு முன் இறந்த ஒரு மனிதனின் உடல் கிடைத்தது. அவன் அணிந்திருந்த உடைகள், பூட்ஸ், பை,அவனது முடி கூட அவ்வளவாக சிதையாமல் பனிக்குள் கண்டெடுக்கப்பட்டது.

பனிச்சறுக்கு விளையாட்டில் உலகிலேயே முக்கிய இடம் வகிக்கும் நாடு. கடந்த 100 வருடங்களாக இங்கே பனிச் சறுக்கு நடைபெற்று வருகிறதாம்.
விண்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இங்கே நடத்தப் பட்டுள்ளன.
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ரசிகரா நீங்கள்?

‘The Living Daylights’, ‘Spectre’, ‘The spy who loved me’, ‘Quantum of solace’ போன்ற பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் பனிச் சறுக்குக் காட்சிகள் ஆஸ்ட்ரியாவில் படமாக்கப்பட்டவை. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஷ்னீகர் பிறந்தது ஆஸ்ட்ரியாவில்தான். பல புகழ் பெற்ற ஓவியர்கள், இசைமேதைகள் பிறந்த நாடும் இதுவே.

வியன்னாவின் ரிங் ரோட்

என்.ஹைச் ஏர்போர்ட் ஹோட்டலில் (NH Vienna Airport) பெட்டிகளை வைத்த பின்னர், வியன்னாவில் முதலில் நாங்கள் சென்ற இடம் ரிங் பொலிவார்ட்.
“இன்னர் டவுன்” எனப்படும் உட்புற, நகர்ப் பகுதிகளைச் சுற்றி வட்டமாக அரண் கட்டினார் போல் உயர்ந்த மரங்கள் நிற்கின்றன. அவ்வளவுதான்…வேறு ஒன்றும் இல்லை.

வியன்னாவின் பெருமை மிகுந்த, பிரம்மாண்டமான அரண்மனைகளைப் பார்க்கப் போகிறோம் என்ற உள்ளூர் கைட், அதில் எத்தனை அறைகள் இருக்கு தெரியுமா என்று புதிர் போட்டார். நூறு இருக்குமா என்ற என் கேள்விக்கு கேலியாகப் பார்த்தார்.
பின்னே எத்தனை அறைகள்தான் இருக்கும்?
(தொடர்ந்து பயணிப்போம்)

 

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 5  -ஆதிரை வேணுகோபால் மங்கையர்மலர் விவிதபாரதியில் நாம் இன்று கேட்க விரும்பும் பாடல்... 80's காதலர்கள் கொண்டாடிய பாடல்! காதல் சோகப்பாடல்! அனுபவம் மிக்க வார்த்தைகள்,  தாள வாத்தியம் இசை, டி.எம்.எஸ்...

பறக்கும்  பாவைகள் – 2

எங்களாலும் பறக்க முடியும்... -ஜி.எஸ்.எஸ். பயணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை...

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1 எங்களாலும் பறக்க முடியும்!  -ஜி.எஸ்.எஸ் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி...  பகுதி - 4 இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் நம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்! சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண் இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் பிகிலோ. (Kathryn Bigelow) என்பவர். உலகம் முழுவதும்...