0,00 INR

No products in the cart.

வாயு சஞ்சாரி

கதை: லேzy
ஓவியம்: சேகர்

ந்த பரதேசிக்கு 40 வயது இருக்கும். காவி வேட்டி, காவி மேல் துண்டு, கையில் ஒரு கோல், தோள் பை ஒன்று. அவன் வலது காலில் பாதத்திற்கு மேலே ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. கையில் இருந்த கோலினை ஊன்றி, தன் வலது காலை நொண்டியவாரு நடந்து வந்தான். மேற்கு மாம்பலத்தில் ரயில் பாதையை ஒட்டிய ஒரு அமைதியான தெரு அது. எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்த காலம். 1958 அல்லது 1959 சரியாக தெரியவில்லை.

அப்படி நடந்து வந்த பரதேசி ஒரு வீட்டுத் திண்ணையில் “அப்பாடா” என்று சொல்லியவண்ணம் உட்கார்ந்தான். கட்டுப் போடப்பட்டிருந்த காலை அவனே வருடி விட்டுக் கொண்டான். லேசான வலி இருந்திருக்க வேண்டும். சற்று நேரத்திற்கு பிறகு, தன் தோள் பையினை சுருட்டி தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கலானான்.

எவ்வளவு நேரம் தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. தெரிந்துகொள்ள அவசியமும் இல்லை. வீடு, வாசல், மனைவி, மக்கள், பணம் என்று இருப்பவன்தானே இத்தனை மணிக்கு படுக்க வேண்டும், சரியாக இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ஆண்டிக்கு ஏது பொறுப்பும் கடமையும்.

அவன் எழுந்திருந்தபொழுது நன்றாக இருட்டி விட்டிருந்தது. அந்த வீடு ஒரு பெருமாள் கோயிலுக்கு சொந்தமான வீடுகளில் ஒன்று. அதில் கோயில் பட்டர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். மாலை கோயிலிருந்து பட்டர் திரும்பி வந்தபொழுது பரதேசி திண்ணையில் படுத்து உறங்குவதைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டினுள் சென்றார். இரவு அவர் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்ட பிறகு, ஒரு வாழை இலையில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, வாச திண்ணையில் இருக்கும் பரதேசியிடம் அதை வைத்து, “இந்தாப்பா சாப்பிடு” என்றார்.

“ரொம்ப நன்றி சாமி. இந்த காலை வைத்துக்கொண்டு எங்கே போய் சாப்பிடறது என்று நினைச்சேன், தெய்வமா நீங்க கொண்டு வந்து வைக்கிறீங்க” என்று கூறிக்கொண்டே இலையில் இருந்த உணவை அள்ளி அள்ளி சாப்பிட்டான் அவன். பசிக்கு தெரியுமா ருசி?

“குடிக்க தண்ணீர் இருக்காப்பா?” என்று கேட்டார் பட்டர். இந்த உலகத்தில் தர்மம் இன்னும் சாகவில்லை. அவர் பாட்டுக்கு சாப்பாட்டை வைத்துவிட்டு உள்ளே போய் விட்டிருக்கலாம். ஆனால், உணவு வழங்கும்பொழுது குடிக்க தண்ணீரும் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியது பாருங்கள். பரதேசி சாப்பிட்டு முடித்தான். உள்ளே சென்ற பட்டர் ஒரு குவளையில் தண்ணீர் மொண்டு வந்து வைத்தார்.

“உன் பெயர் என்னப்பா? நீ எந்த ஊரு” என்று கேட்டார்.

“யாருக்கு சாமி தெரியும்? நினனவு தெரிஞ்சபொழுது, மதுரையில் ஒரு ஆஸ்ரமத்தில் வளர்ந்து வந்ததுதான் ஞாபகம். நீ அனாதடா என்று சொல்லி சொல்லி சோறு போடுவாங்க. அப்புறம் படிப்பு சொல்லிக் குடுக்க பாத்தாங்க. எனக்கு இந்த படிப்பு கிடிப்பெல்லாம் மண்டையில ஏறலீங்க. எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும்பொழுது அந்த பக்கம் ஒரு சாமி வந்தாரு. டக்குனு அவரோட கிளம்பிட்டேன். அவர் நல்ல மனுஷன். ஆனா பிறவி ஊமை. அவரோட சேர்ந்துகிட்டு ஊரு ஊரா சுத்தி வந்தேன். எந்த ஊருல கோயில் திருவிழானாலும் போயிடுவோம். நம்ம ஊருல சாப்பாட்டிற்கு பஞ்சம் இல்லீங்க. அப்புறம் அந்த சாமி ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடிதான், ‘நான் வடக்கே போறேன்’னு கிளம்பிட்டாரு. நான் இந்த பக்கமே தங்கிடேனுங்க” என்று சொல்லி முடித்தான் பரதேசி.

“இப்படி ஆண்டியா சுற்றி வருவதற்கு பதிலா ஒரே இடத்துல இருந்து ஏதாவது வேலை கீலை செஞ்சு பிழைக்கலாமே” என்றார் பட்டர்.

“பழகி போச்சு சாமி. தவிர இந்த பூமிக்கு என்னை மாதிரி ஆசாமிகளும் தேவை. எல்லாமே வேலை செஞ்சி பிழச்சா, அப்புறம் யாருக்கு தர்மம் பண்ணி புண்ணியம் தேடுவீங்க?” என்று சொல்லி சிரித்தான் பரதேசி.

“நல்லதாத்தான் பேசற. சரி கால்ல என்ன கட்டு?” என்று கேட்டார் பட்டர்.

“திருவண்ணாமலை தீபத்திற்கு போனேனுங்க. அங்க ஒரு நா ராத்திரி கோயில் வாசலில இருட்டுல படுத்துக் கிடந்த நாய் வாலை மெரிச்சுட்டேன். அது பயந்து போயி, லபக்குனு என் காலை கடிச்சு போட்டுச்சுங்க. பாவம் அது நல்ல நாய்தானுங்க, பயத்துல அப்படி செஞ்சுடிச்சு. மக்கா நா காலையில ஒரு சாமி சொல்லிச்சு, ‘டேய் இப்படியே விடாதடா, பக்கத்தில ஒரு ஆஸ்ரமம் இருக்கு. அங்க நம்ம மாதிரி பரதேசிகளுக்கு இலவசமா வைத்தியம் பாக்கிறாங்க. போய் உன் காலை அங்கே காட்டு’ என்று. சரின்னு நானும் அந்த ஆஸ்ரமத்துக்கு போய் தினம் தினம் கட்டு மாத்திரை மருந்துனு தடபுடலா வைத்தியம் பண்ணிகிட்டு வந்தேன். இதுல வேடிக்கை பாருங்க சாமி, தினமும் நான் கோயில்கிட்ட வரப்போல்லாம் அந்த நாய் வாலை ஆட்டிகிட்டு என்னை சுத்தி சுத்தி வந்து என் கையால இரண்டு பிஸ்கோத்து வாங்கி தின்னுபுடும்” என்று சொல்லி சிரித்தான்.

“அடுத்து எந்த வீட்டுக்கு போகப் போற” என்றார் பட்டர்.

“யாருக்கு சாமி தெரியும்?” என்று சொல்லி சற்று நேரம் மெளனமாக இருந்தான்.

“சாமி, என்னை பொறுத்தவரைக்கும் இந்த வானம்தான் கூரை, இந்த பூமிதான் வீடு. இங்க நாம எல்லாமே கொஞ்ச நாளைக்கு வாடகைக்கு இருந்துப்புட்டு போறவங்கத்தான். என்ன நான் சொல்றது. அது இந்த நாட்டுக்கே ராஜாவானாலும் சரி இல்லை என்னை போல ஆண்டிப் பரதேசியானாலும் சரி… கோடி ரூபா பணம் இருந்தா என்ன, பத்து வீடு இருந்தா என்ன? எல்லாத்தையும் ஒரு நா இல்லை ஒரு நா யாருக்காவது கொடுத்துப்புட்டு தானே சாமி போகணும்” என்றான் பரதேசி வேதாந்தியைப் போல.

“அது சரிப்பா, என் காசு, என் சொத்து, என் புள்ள அனுபவிப்பான். அப்புறம் அவன் புள்ள அனுபவிப்பான். அந்த திருப்திதானே எனக்கு பெரிசு”” என்றார் பட்டர்.

“இந்த ஜென்மத்துல உனக்கு உன் புள்ளைய அடையாளம் தெரியுது கொடுக்குற, சரி. போன ஜன்மத்துல யாருக்கு என்ன கொடுத்து வந்த, என்னத்த வாங்கிகிட்டு வந்த? தெரியாது. எல்லாம் மனசுதான் சாமி. நினைப்புதான். இந்த நினைவு மட்டும் தட்டி போச்சுன்னா, புள்ளை யாரு, பென்சாதி யாரு, அண்ணன், தம்பி யாருன்னு தெரியவா போது? அப்போ ஒண்ணும் இருக்காது சாமி. எல்லாம் சூன்னியமா போய்விடும்” என்று தன் விரலால் சூன்னியம் வரைந்தபடி சிரித்தான்.

சற்று நேரம் இருவரும் மெளனமாக உட்கார்ந்திருந்தனர்.பட்டருக்கு தூக்கம் கண்ணைச் சொக்கியது. “சரிப்பா, நான் போய் படுக்கிறேன்” என்று வாசல் கதவை தாளிட்டுக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

ரவு சுமார் இரண்டு மணி வாக்கில் ரயில் ஒன்று சைதாப்பேட்டையிலிருந்து எழும்பூர் நோக்கி பெரும் சப்தமிட்டுக்கொண்டு வந்து நின்றது. அது போட்ட சப்தத்தில் நல்ல தூக்கத்தில் இருந்த பட்டருக்கு தூக்கம் கலைந்தது.

‘நடு ஜாமத்தில் இவ்வளவு சப்தம் போட்டுக்கொண்டு வந்து நிற்கின்றதே, இது கண்டிப்பா கூட்ஸ் வண்டியாகத்தான் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டார். சுமார் 15 நிமிடத்திற்கு அந்த கரி இஞ்சின் ஜிஷ் புஷ் என்று சப்தமிட்டுக் கொண்டிருந்தது. “இதற்கு இன்னும் சிக்னல் விழுந்திருக்காது போல” என்று பாதி தூக்கத்தில் முனகினார். ஒருவழியாக அந்த ரயில் புறப்பட்டது. கடக் புடக் என்று அது மெதுவாக மாம்பலத்திலிருந்து கோடம்பாக்கத்தை நோக்கி சென்றது. அது வெகுதூரம் சென்ற பிறகும் “ஊ”வென்று அதன் கரி இன்சின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. பட்டர் மீண்டும் நன்றாக தூங்கத் தொடங்கினார்.

காலை 5.30 மணிக்கு பால்காரன் பசுவோடும் கன்று குட்டியோடும் வீட்டு வாசலில் பால் கறந்தபடி “அம்மா, ஐயா வந்து பால் வாங்கிட்டு போங்க” என்று குரல் கொடுக்க, பட்டருக்கு முழிப்பு வந்தது. அரை தூக்கத்தில் பால் பாத்திரத்தோடு இந்த வாச கதவை திறந்தபொழுதுதான் திண்ணை காலியாக இருந்ததைப் பார்த்தார்.

“ஏன்டா கோபாலா, இங்க திண்ணையில ஒரு பரதேசி சாமி படுத்துக்கிடந்ததே பார்த்தியா?” என்றார்.

“அப்படி யாரும் இல்லையே சாமி. நான் 3.30 மணிக்கு இந்த பக்கமா மாடு ஒட்டிக்கிட்டு போனபோதுகூட திண்ணை காலியாகத்தான் இருந்துச்சு” என்றான்.

இரவு கூட்ஸ் ரயில் வந்து நின்றது அவருக்கு நினைவுக்கு வந்தது. ஒருவேளை பரதேசி அவனுடைய ஊமை குருவை தேடிக்கொண்டு வடக்கே போயிட்டிருப்பானோ? என்ற சந்தேகமும் கூடவே வந்தது. தெற்கிலிருந்து வடக்கை நோக்கி காற்று வீசிக்கொண்டிருந்தது.

லேZY
‘லேzy’ என்ற புனைப்பெயரில் தனக்கே உரிய, இயல்பான பாணியில், கதை – கட்டுரைகளை எழுதி வருகிறார் ஹரி. தினசரி தான் சந்திக்கும், பழகும் மனிதர்களையே தன் கதைகளுக்கான கதாபாத்திரங்களாக மையப்படுத்தி எழுதுவது இவர் சிறப்பு. அதனாலேயே, அக்கதாபாத்திரங்களின் வயதையொத்த வாசகருக்கு, ஏதோ ஒரு வகையில் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் அனுபவம் கிடைக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...