பாட்டொன்று கேட்டேன்…

பாட்டொன்று கேட்டேன்…
Published on
இது மங்கையர் மலரின் விவிதபாரதி…
பகுதி -2

ன்று நாம் கேட்க விரும்பும் பாடல் நம்மை இளமைப்பருவத்திற்கே அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டது. இந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு இசைஞானி அவர்களை இசையமைக்க வைத்தாராம். இந்தப் பாடலின் வெற்றியே எப்பொழுது கேட்டாலும் புதிய பாடலாக ஒலிப்பதுதான். (ஆங்கிலம் கலக்காமல் சுத்தமான தமிழில் பாடல்களை கேட்பது மனதை மயிலிறகால் வருடுவது போல்)1977ல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய பாடல். திரு.பாலாஜி தயாரிப்பில் கே விஜயன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த "தீபம்" திரைப்படத்தில் இடம்பெற்ற பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே என்ற பாடல்…

திரு புலமைப்பித்தனின் வரிகளுக்கு இசைஞானி இசையமைக்க கானகந்தர்வன் கே ஜே ஜேசுதாஸ் அவர்களும் ஜானகியம்மாவும்இணைந்து பாடியிருப்பார்கள். இந்தப்படத்தில் சிவாஜிகணேசன் தான் கதாநாயகன் என்றாலும் இந்தப் பாடலுக்கு படத்தில் உயிர் கொடுப்பது விஜயகுமாரும் சுஜாதாவும்.(நடிகர்திலகம் படத்திற்கு இசைஞானி அவர்கள் முதன்முதலாக இசையமைத்தது இந்த  படத்தில்தான்).  (இதற்குப்பிறகு தியாகம் ,நான் வாழவைப்பேன், நல்லதொரு குடும்பம், பட்டாக்கத்தி பைரவன், வெள்ளைரஜா என நிறைய படங்களுக்கு இசைஞானி அவர்கள் இசையமைத்திருந்தது… நாம் அறிந்ததே) ஒரு விமானம் வழக்கமான முறையில் அல்லாமல் ஜிவ்வென்று அப்படியே டேக் ஆஃப் ஆனால் எப்படி இருக்கும் ..அப்படி இருக்கும் இந்த பாடல் தரும் அனுபவம் . கீழே இறங்காமல் உயரத்திலேயே பறந்து அப்படியே பல்லவியில் மீண்டும் இணைவது போல மிகச் சிறப்பாக இசை அமைந்திருக்கும்.

"பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்பது அழைக்குது எனையே… 

அரும்பான காதல் பூவானது 

அனுபவ சுகங்களை தேடுது நினைத்தாலும் நெஞ்சம் தேனானது நெருங்கவும் மயங்கவும் ஓடுது.

 மோகம் வரும் ஒரு வேளையில்

 நாணம் வரும் மறு வேளையில் இரண்டும் போராடுது 

துடிக்கும் இளமை 

தடுக்கும் பெண்மை…"… 

"அரும்பான காதல் தள்ளாடுது அனுபவ சுகங்களை தேடுது..

"காதலின் வேகத்தையும் மோகத்தையும் இதற்கு மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.) பாடலில் மூன்று சரணங்கள்… மூன்றுக்குமே தனித்தனிப் பின்னணி.. இசை… வெளுத்து வாங்குவாரு இசைஞானி. தேக்கடி மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியான தேயிலைத் தோட்டங்களில் பாடல் எடுக்கப்பட்ட விதம் பாடலுக்கு கூடுதல் பலத்தை தரும் "இளமாலை தென்றல் தாலாட்டுது இளமையான கனவுகள் ஆடுது".. ஆஹா என்ன ஒரு அருமையான வரி.

இளையராஜாவின் வித்தியாசமான வேகமான இசை தொடங்கி வயலின், குழல்.. என்று ராகம் இனிமை சொல்ல அழகான இரு குரலின் இனிமை இந்த பாடலை வெற்றி பெற செய்தது. (பாடலில் வயலின், குழல் எல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யும்).

இசையோடு சேர்ந்த இயற்கை என்று சொல்வார்கள் அல்லவா இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள் புரியும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கப்பட்ட பாடல் இது பொற்காலத்தின் கீதம். ஆனால் இன்றும் இளமையோடு இனிமையோடு ஒலிக்கிறது. அழகு இனிமையான குரல் நடிப்பு உள்ள கதாநாயகி சுஜாதா அருமையாய் வாயசைத்திருப்பார் பாடலில்.

உங்களுக்கும் பாடலை கேட்கணும்னு ஆசையா இருக்கா கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க…

என்றென்றும் அன்புடன்,
ஆதிரை வேணுகோபால்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com