இரக்கம்,  பரிதாபம், கருணை எனக்கு தேவையில்லை!

இரக்கம்,  பரிதாபம், கருணை எனக்கு தேவையில்லை!

Published on

-ராஜி ரகுநாதன் 

"பார்வை இல்லை என்ற கவலை எனக்கில்லை" என்கிறார் இந்த இளம்பெண் திரிவேணி. இவர் கூறுவது நமக்கு வியப்பை அளிக்கிறது. இவர் மேலும் என்ன கூறுகிறார் பாருங்கள். 

"பார்வைக் குறைப்பாடு உள்ள குழந்தைகளை நார்மல் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்தால் நல்லது என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அதன் மூலம் பிற மாணவர்களுக்கு உதவும் மனப்பான்மை வளரும். தம் குழந்தைகளுக்கும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களைப் பார்த்து பிற மாணவர்கள் இரக்கம் கொள்வர்.

ஆசிரியர்களும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் அதிகம் அளிப்பர். அதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் ஊட்டுமென்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் அது அப்படி அல்ல. ஒரு முறை யாராவது புகழ்ந்தால் மகிழ்ச்சி ஏற்படலாமே தவிர அதுவே தொடரும் போது எங்களுக்குத் தெரிந்து விடும். அந்த சொற்கள் புகழ்பவை அல்ல. இரக்கம், பரிதாபத்தோடு கூடியவை என்று. அது எங்களை இன்னும் நிராசையில் தள்ளுகின்றன," என்கிறார் திரிவேணி.

தெலங்காணா மாநிலம் கம்மம் மாவட்டம் மனிகண்டலப்பாடு என்ற கிராமத்தை சேர்ந்த சுப்பாராவு, பத்மாவதி தம்பதிகளின் இரண்டாவது மகள் திரிவேணி. சுப்பாராவு வீடுகளுக்கு பெயின்ட் படிப்பவராக பணி புரிகிறார். தாயார் இல்லத்தரசி. இவர்களின் மூத்த மகள் நார்மலாக உள்ளார். ஆனால் திரிவேணிக்கு பிறக்கும் போதே கண்ணில் பிரச்னை இருந்தது. பார்வை மங்கலாக இருக்கும். தெளிவான பார்வை கிடைக்க பெற்றோர் செய்த மருத்துவம் எதுவும் பலனளிக்கவில்லை.

உரிய வயதில் பள்ளிக்கு அனுப்பினர் பெற்றோர். அங்கு கரும்பலகை கண்ணுக்குத் தெரியவில்லை. சிரமப்பட்டாள் சிறுமி. அந்தப் பள்ளியில் தேர்வின் போது கரும்பலகையில்தான் கேள்விகளை எழுதினர். அதைப் படித்து பதிலெழுத மிகவும் கஷ்டமாக இருந்தது திரிவேணிக்கு. ஆசிரியர் இரக்கப்பட்டு அதிகப்படி நேரம் கொடுத்தாலும் அனைவரையும் விடத் தான் வேறுபட்டிருப்பது திரிவேணிக்கு வருத்தமளித்தது. தெரிந்தவர் ஒருவர் ஊனமுற்றோருக்காக தனிப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும் இருப்பதாக சுப்பாராவிடம் எடுத்துக் கூறிய பின், பார்வையற்றோர் கல்லூரி ஹாஸ்டலில் திரிவேணியை கொண்டு சேர்த்தனர். அங்கு சென்ற பின்தான் திரிவேணிக்கு 'அப்பாடா!' என்று உயிர் வந்தாற்போலிருந்தது.

இரக்கம், பரிதாபம், கருணை எதுவும் தேவையில்லாத ஒரு இடத்தில் தன்னைப் போன்றவர்களோடு சேர்ந்து படிப்பதும் விளையாடுவதும் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளித்தது. தன்னால் பிறருக்கு எந்த உதவியும் இல்லை என்று சோர்ந்து போயிருந்த திரிவேணிக்கு புத்தகத்தை கண்ணருகில் வைத்து ஓரளவு படிக்க முடியும். அதன் மூலம் சுத்தமாகக் கண் தெரியாத மாணவர்களுக்குப் படித்துக் காட்டி உதவ முடிந்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. முழுவதும் பார்வையில்லாத மாணவர்களுக்கு சிறு தீபமாக உதவுவதை தன் லட்சியமாகக் கொண்டார். அங்கே உற்சாகத்தோடு சக மாணவிகளோடு விளையாடவும் நிம்மதியாக உண்ணவும் உறங்கவும் அவளால் முடிந்தது. ஸ்க்ரைப் தேர்வு மூலம் பதிலளிப்பது மகிழ்ச்சியளித்தது. சுற்றியிருந்தவர்களிடம் வெளிப்படும் கருணை, இரக்கம் போன்ற உணரச்சிகளில் இருந்து விலகி தன் காலில் தான் நிற்கவேண்டும் என்ற உந்துதலோடு கஷ்டப்பட்டு படித்து கல்லூரியில் நல்ல பெயர் வாங்கினார் திரிவேணி. பின்னர் ஸ்பெஷல் டீச்சர் ட்ரைனிங் கோர்ஸ் சேர்ந்து படித்தார்.

அப்போது ஒரு காட்சி அவர் கண்ணில் பட்டது. சுத்தமாக கண் தெரியாத நான்கு மாணவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சாலையைத் தாண்டி கல்லூரிக்கு வந்து செல்வதைப் பார்த்து வியந்தார். பார்வையில்லை என்ற கவலையே இன்றி மகிழ்ச்சியாக அவர்கள் பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைக் கண்ட திரிவேணி, அவர்களையே தன் முன்மாதிரியாகக் கொண்டு தனியாக தன் வேலைகளைச் செய்து கொள்ளப் பழகினார்.

ஆட்டோவில் செல்வது, பிறர் யாரையாவது கெஞ்சி கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது போன்றவற்றை அன்றோடு விட்டார். தன்னம்பிக் கையோடு தனியாக நடந்து முன்னேற வேண்டும் என்று தீர்மானித்தார். தில்ஷுக்நகர் அரசு ஹாஸ்டலில் சேர்ந்தார். 107வது நம்பர் பஸ் ஏறி சிகந்திராபாதில் இறங்கி 38 ம் நம்பர் பஸ் பிடித்து மாரெட்பல்லியில் உள்ள ' Training Centre for Teachers of Visually Handicapped'  க்கு தனியாகச் சென்று வரத் துணிந்தார். பார்வை மங்கலாகத் தெரிவதால் சிரமப்பட்டாரே தவிர, உறுதியும்   தன்னம்பிக்கையும் வெற்றியின் மேல் கொண்ட வெறியும் திரிவேணியை வழி நடத்தின.

ந்த நேரத்தில் Guiding Lights  Foundation தலைவர் பவானி ஷங்கர் இவர் படித்த கல்லூரிக்கு வருகை தந்தார். பாரவையற்றவரான திரு. பவானிசங்கரின்  தலைமையில் பார்வையற்றோருக்கு அந்த அமைப்பு செய்யும் சேவைகள் அறிந்து அவற்றின் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கினர். அதன் மூலம் அவரிடம் தலைமைப் பண்புகள் வளர்ந்தன. அவர்களோடு சேர்ந்து வீதி வீதியாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினார். அதற்கு முன் திரிவேணிக்கு பலர் முன் பேசுவதற்கு கூச்சமும் பாடுவதற்கு தயக்கமும் இருந்தது. ஆனால் கல்லூரியில் நல்ல பேச்சாளராக மலர்ந்தார். சிறிய சிறிய கவிதைகள் எழுதினர். அவை ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றன.

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே 'கோட்டி உமன்ஸ்' கல்லூரியில்  MA ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து தேர்வில் வென்றார். வீட்டு உணவும் அலைச்சலற்ற அமைதியான கல்வியும் அவரை மிகவும் ஆசுவாசப்படுத்தின. தெலுங்கு இலக்கியத்தில் முனைவர் பட்டத்திற்காக முதல் செமஸ்டர் முடித்துள்ளார். கவிதை எழுவதிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். இவருடைய கவிதைகள் உதயம் தினப் பத்திரிகையிலும் கவிதோதயம் குரூப்பிலும் வெளிவந்துள்ளன. PhD நிறைவு செய்து கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டுமென்ற அவருடைய ஆசையும், மென்மேலும் பார்வையற்றோருக்கு  சேவை புரிய வேண்டும் என்ற லட்சியமும் நிறைவேற வேண்டும் வாழ்த்தி விடைபெற்றோம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com