0,00 INR

No products in the cart.

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்; தமிழ்

துரோகம்!

-புதுவை சுபா

திகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை கிடக்கு…” புலம்பிக்கொண்டே, அடுப்பில் பாலை ஏற்றினான் சிவா.

“என்னங்க… நேத்து சுட்ட பழைய வடை, வச்ச சாம்பார் எல்லாம் பிரிட்ஜ்ல மீதி இருக்கு?” மனைவி கலாவின் குரல் கேட்டு, நிமிர்ந்தான் சிவா.

“நல்ல வேள… ஞாபகப்படுத்தினே. பழைய வடையை புட்டுப் போட்டு வடைகறியில கலந்துடு. சாம்பாரை சூடு செய்து வை. அதுக்குன்னு சில கஸ்ட்டமர் இருக்காங்க…” சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான்.

மணி 7.00, கீரைகளைக் கூடையில் சுமந்தபடி வந்த பாட்டி ஒருவர், இரண்டு தோசை பார்சல் கட்டச் சொன்னார்.

“ஏன் பாட்டி இவ்வளவு லேட்?” என்றான் சிவா.

“4.00 மணி கருக்கல்ல வயலுக்குப் போய், கீரையைப் பிடுங்கி எடுத்து வரேன் தம்பி…” யதார்த்தமாச் சொன்னார் பாட்டி.

“முதல் நாள் சாயங்காலமே பிடுங்கி எடுத்து வரக்கூடாதா?” அக்கறையாய்க் கேட்டபடி, வடைகறி மற்றும் சூடு பண்ணியிருந்த சாம்பாரைப் பார்சல் செய்து கொண்டிருந்தாள் கலா.

“என்னம்மா செய்யறது. என்னையே நம்பிக் கீரையை வாங்கும் உங்களுக்கெல்லாம், பழசைக் கொடுத்து நம்பிக்கை துரோகம் செய்யலாமா?” யதார்த்தமாய்ச் சொன்ன பாட்டியின் பதிலால், இருவரும் கூனிக் குறுகினர்.

————————————

 பிராயச்சித்தம்

 –பூங்கொடி ஆனந்தன்,
தர்மபுரி
 

“நீங்க பண்றது தப்புங்க. உங்க ஃப்ரென்ட் மகாலிங்கம் ரிட்டயர்ட் ஆனப்ப வந்த பணம் அஞ்சு லட்சத்த உங்கள நம்பி கையெழுத்து கூட வாங்காம கொடுத்தார். அது அவர் பொண்ணு சுதா கல்யாணத்துக்காக வச்சிருந்த பணம். அவர் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டதால அந்த பணத்தை கொடுக்காம ஏமாத்திடலாம்னு சொல்றது ரொம்ப தப்புங்க,” மங்களம் கணவன் கணேசனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“எது தப்பு, எது சரினு எனக்கு தெரியும். நீ எனக்கு பாடம் எடுக்காதே. இந்த காலத்துல நேர்மையா இருந்தா பொழைக்க முடியாது.”

“ஒரு பொண்ணு வாழ்க்கைல விளையாடறீங்க. அது மகா பாவம். இந்தப் பணம் இல்லைனா சுதாவோட கல்யாணமே நடக்காது.”

“பாரு மங்களம், பாவ புண்ணியமெல்லாம் பார்த்தா இந்த காலத்துல பொழைக்க முடியாது. வேலைய பாரு.”

அவர்கள் மெதுவாக பேசிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேசியது உள் அறையில் இருந்த அவர்கள் மகன் சந்தோஷூக்கு தெளிவாக கேட்டது. அவன் அப்பா கணேசனை நினைத்து அவனுக்கு அருவருப்பாகவும்,வெறுப்பாகவும் இருந்தது “சீ..என்ன மனிதர் இவர்?ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க நினைக்கிறாரே?” என்று நினைத்தான். அவர் ஒரு முடிவு எடுத்து விட்டால் மாற்ற முடியாது என்பது அவனுக்கு தெரியும்.

பதினைந்து நாட்கள் போயிருந்தது. அன்று காலை பத்து மணி. கதவு தட்டும் ஓசை கேட்டு கதவை திறந்த கணேசன் அதிர்ந்து போய் நின்றார். அவர் மகன் சந்தோஷ் கல்யாண கோலத்தில் நின்றான். பக்கத்தில் சுதா.

“என்ன அப்படி பார்க்கறீங்க? உங்களால பாழாக இருந்த சுதா வாழ்க்கைய காப்பாத்த விரும்பினேன். சுதாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்ககிட்ட சொல்லி இருந்தா கண்டிப்பா சம்மதிச்சிருக்க மாட்டீங்க. நீங்க பண்ண விஷயம் சுதாவுக்கும், அவ அம்மாவுக்கும் தெரியும். நீங்க செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ண நினைச்சேன். பண்ணிட்டேன். இது கல்யாணம் இல்லை.பிராயச்சித்தம்..”

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மங்களம் மகிழ்ச்சியுடன் ஆரத்தி சுற்ற ஆரம்பித்திருந்தாள்.

————————————

அப்பா அம்மா விளையாட்டு!

-சுசி கிருஷ்ணமூர்த்தி

ணவர் காலையில் சீக்கிரமாகவே எழுந்து வாக்கிங்க் போய் விட்டு வந்து பேப்பர்  படித்துக் கொண்டு இருக்கிறார்.  மனைவி எழுந்து வந்து அவர் எதிரே உட்காருகிறார்.

என்ன இன்னிக்கு ரொம்ப ஸ்மார்டாக டிரெஸ் எல்லாம் பண்ணிண்டு பேப்பர் படிச்சுண்டு இருக்கேள்?  என்ன விஸேஷம்?”

கணவர், (மைண்ட் வாய்ஸ் – என்ன ஸ்மார்ட் அது இதுன்னு சொல்லறா? என்னை அசமஞ்சமா அம்பி மாதிரி டிரெஸ் பண்ணிண்டு இருக்கேள் ன்னு தானே எப்பவும் சொல்லுவா? என்னவோ உள்குத்து மாதிரி இருக்கே) “ஒண்ணும் இல்லை – வாக்கிங்க்  போயிட்டு வந்தேன்.”

மனைவி (நெளிந்துக் கொண்டே), “ என்ன, நாம திரும்ப அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாமா?”

கணவர் அப்படியே திடுக்கிட்டுப் போய் மனைவியைப் பார்க்கிறார். “ என்ன, பைத்தியம் மாதிரி பேசறெ? ராத்திரி தூக்கம் போறலையா?”  என்றுக் கேட்டுக் கொண்டே, எழுந்து பால்கனி பக்கம் போகிறார்.

மனைவி மனதிற்குள் சிரித்துக் கொண்டே, “ நான் என்ன தப்பாக சொல்லிட்டேன்? அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாமா என்று தானே கேட்டேன்? அதுக்கு ஏன் பேயைப் பார்த்த மாதிரி இப்படி மூஞ்சியை வச்சுக்கறீங்க?” என்று கேட்க,

“இப்ப என்ன திடும்னு அப்பா அம்மா விளையாட்டு? இந்த வயசிலே? யாராவது வெளியில் கேட்டா சிரிக்கப் போறா?”

“அன்னிக்கு அந்த குருஜி என்ன சொன்னார்? அறுபது வயசுக்குப் பின்னாலே நாம் எல்லோரும் குழந்தைகள் தான் என்று தானே? சின்ன வயசில் நாம அப்பா அம்மா விளையாட்டு விளையாடினதில்லையா? அதே மாதிரி இப்பவும் விளையாடலாமே என்று தானே சொன்னேன்? ஆனா ஒரு சின்ன சேஞ்ச் – நான் இப்போ அப்பா ரோல் – நீங்க அம்மா ரோல்.

நான் ஆபிஸிலிருந்து இப்ப திரும்பி வந்திருக்கேன். டயர்டா இருக்கு. அதனாலே நீங்க அம்மா மாதிரி சுடச் சுட நல்ல டிகிரி  காப்பி கலந்து தருவேளாம். நான் குடிப்பேனாம்” என்று சொன்னாளே,  பார்க்கலாம்…  கணவர் முகத்தில் பல பல ரியாக்ஷஸ்.

“ ஒரு காப்பி வேணுங்கறதுக்கு இவ்வளவு பில்டப்பா? “ என்று தலையில் அடிச்சுண்டு, காப்பி போடப் போனாராம்.

3 COMMENTS

  1. ஒரு பக்கக் கதைகள் அனைத்தும் அருமை !
    எழுதியவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  2. மூன்று ஒரு பக்க கதைகள் முத்துப் பாே ல்
    அழகாக அறிவுத்திறனாக ஔி தரும் சிறப்பினைத் தந்தது.
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

கவிதை!

2
-செ.கலைவாணி, சேலம்  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே, உருவானாதே இவ்வுன்னத உலகம். உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி, உலகை எந்நாளும்  இயங்கச் செய்பவனே உழைப்பாளி. உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும் உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது. உழைப்போரின் வியர்வைத்துளிகள்  உருவாக்கிய உலகம், உழைப்போரால்...

கோடையை ஜில்லாக்க ஜில் ஜில் ஜூஸ்!

2
வாசகர் ஜமாய்க்கிறாங்க! -ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.   பிஞ்சு வெள்ளரி ஜூஸ் தேவையானவை: பிஞ்சு வெள்ளரிக்காய் – 250 கிராம், பூண்டு – 3 பல், தேன் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன். செய்முறை:...