0,00 INR

No products in the cart.

தனியாக வைகுண்டம் சென்ற தம்புரா!

-ரேவதி  பாலு

ம் பாரத பூமியில் எண்ணற்ற மகான்களும், சித்தர் பெருமக்களும் அவதரித்து நாட்டு மக்கள் நல்வழியில் சென்று அவர்கள் வாழ்வு மேம்பட உதவியுள்ளனர்.  மராட்டிய மாநிலத்தில் பண்டரிபுர பண்டரிநாதனின் பக்தர்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர்  வாழ்ந்து விட்டலனின் புகழை மராத்தி ‘அபங்’  பாடல்களாக இயற்றிப் பாடி மராட்டிய இலக்கியத்திற்கும் வளம் சேர்த்துள்ளனர்.

‘அபங்’ என்றால் பங்கம் இல்லாதது, குற்றம் இல்லாதது என்று பொருள்.  இந்த பாடல்கள் மிக எளிமையானவை. இதைப் பாட பெரிய சங்கீத பயிற்சி, ஞானம் எல்லாம் தேவையில்லை.  இந்தப் பாடல்கள் பெரும்பாலும் ஸ்ரீ பாண்டுரங்கனின் புகழைப் பாடுவதாகவே அமைந்துள்ளன.  மராத்திய மாநிலத்தில் எளிய தொழிலாளிகள் கூட விரைவில் கற்றுக் கொண்டு விரும்பிப் பாடும் வண்ணம் அமைந்துள்ள அபங்கப் பாடல்களை இயற்றியவர்களில் துக்காராம் மஹராஜ் மிக முக்கியமானவர். இவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவரின் குரு ஸ்ரீ நாமதேவராவர். இவர் சுமார் 4000 அபங்கங்களை எழுதியுள்ளதாக ‘பக்த லீலாம்ருதம்’ குறிப்பிடுகிறது.

துக்காராம் மராட்டிய மாநிலத்தில்  தேஹூ என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் அங்கே  ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்.  எப்போதும் நாமஸ்மரணை, பாண்டுரங்க பஜன் என்றே வாழ்ந்த அவர், யாராவது அடியவர்கள் விட்டலன் நாமத்தை சொன்னால் அவர்களுக்கு சாமான்களை இலவசமாகவே கொடுத்து விடுவர். இதைத் தெரிந்து கொண்ட அக்கம் பக்க ஊர் ஜனங்கள் தந்திரமாக அவரிடம் பாண்டுரங்கன் நாமத்தை சொல்லி இலவசமாக பொருட்களை வாங்கிச் சென்று விடுவர்.  அவர் மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் மாறவேயில்லை. எனவே மிக வறுமை நிலையிலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

சத்ரபதி சிவாஜியின் குருவான ஸ்ரீ ராமதாஸர், சிவாஜிக்கு சாதுக்களை தரிசிக்க மிகுந்த  ஆவல் என்று தெரிந்ததால், “உன் மராட்டிய மாநிலத்திலேயே துக்காராம் என்னும் சாது இருக்கிறார்.  இவர் பாண்டுரங்கனின் பரமபக்தர்.  முதலில் அவரைப் போய் தரிசித்து வணங்கு!” என்கிறார். தன் மாநிலத்திலேயே ஒரு மகான் இருக்கிறாரா என்று அதிசயப்பட்ட சிவாஜி  உடனே  தன் படை வீரர்கள், ஒற்றர்கள் எல்லோரையும் அனுப்பி துக்காராம் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முயல்கிறார்.  அவர் புனேவிற்கருகில் உள்ள தேஹூ என்னும் கிராமத்தில் இருக்கிறார் என்றும், மிகவும் வறிய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் இவருக்கு தகவல் சொன்னார்கள். இதைக் கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்திய சத்ரபதி சிவாஜி மிகவும் பக்தியோடு இவரை கௌரவிக்க நினைத்து ஏராளமான பொன், பொருட்கள், ஆடை ஆபரணங்கள் தானியங்களை இவருக்குப் பரிசாக அனுப்புகிறார்.   தனக்கு படி அளப்பவன் விட்டலன் ஒருவனே என்று அவற்றைத் தொட மறுத்து விடுகிறார்  துக்காராம்.  அவர் ஒரு ஞானி என்று உணர்ந்து சிவாஜி நேரில் வந்து இவரை வணங்கிச் செல்கிறார்.

துக்காராம் ஏராளமான ‘அபங்’ பாடல்களை மராத்தியில் எழுதினார்.   இதைக் கற்றுக் கொண்டு பண்டரீபுர விட்டலனின் அடியவர்கள் இந்தப் பாடல்களைப் பாடிப் பரப்ப, அதனால் இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.  இவர் காலத்தில் வாழ்ந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த சிலர் இவருக்குப் பெயரும் புகழும் சேர்வதை விரும்பாமல் இவர் எழுதிய பாடல்கள் பொய்யானவை, குறையுள்ளவை, முழுமையானவையல்ல என்று கிராம அதிகாரியிடம் முறையிட்டு துக்காராம் கைகளாலேயே பனையோலையில் எழுதப்பட்ட அந்த அபங்கப் பாடல்களை மொத்தமாகக் கட்டி இந்திராயணி நதியில் வீசியெறிய செய்கின்றனர்.  பாண்டுரங்கனின் புகழைப் பாடியவாறே அந்த நதிக்கரையிலேயே வருத்தத்துடன் உட்கார்ந்திருந்த  துக்காராம் முன் ஸ்ரீ பாண்டுரங்கனே தோன்றி, “வருத்தப்படாதே! உன் பாடல்கள் பன்னிரெண்டு நாட்களில் திரும்ப கிடைத்து விடும்!” என்கிறார்.  அதே போல பன்னிரெண்டாம் நாள் அந்தப் பனையோலையில் எழுதப்பட்ட பாடல் கட்டு துக்காராம் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகேயே கரை ஒதுங்குகிறது.  பன்னிரெண்டு நாட்கள் தண்ணீரிலேயே மூழ்கி இருந்தும் ஒரு சேதமும் இல்லாமல் பாடல்கள் முழுமையாகக் கிடைத்ததால் அவர் மகிமையை உணர்ந்து கொண்டனர் ஊர் மக்கள்.

பூத உடலுடன் வைகுண்டத்திற்கு சென்றவர்கள் என்று நாம் கேள்விப்படுவது குருவாயூரப்பனின் அத்யந்த பக்தரான ஸ்ரீ பூந்தானம்.  அவர் வீட்டு வாசலுக்கே விஷ்ணு லோகத்திலிருந்து புஷ்பக விமானம் வர அவர் ஏறிச் சென்றதை நேரே பார்த்தவர்கள் இருந்தார்கள்.  அதைப் போல ஸ்ரீ துக்காராமிற்கும் ஒரு நாள் கனவில் விட்டலன் தோன்றி அவர் வசிக்கும் தேஹூ கிராமத்தின் இந்திராயணி நதிக்கரையில் அவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல ஏகாதசி அன்று தன்னுடைய கருட வாகனம் வரும் என்று கூறுகிறார்.  துக்காராம் அவர் மனைவியிடம் தன் கனவைப் பற்றிச் சொல்ல அவள்   “கருட வாகனமாவது நம் இந்திராயணி நதிக்கரைக்கு வருவதாவது” என்று அதை நம்ப மறுக்கிறாள்.

 

ஏகாதசியும் வந்தது. துக்காராமின் கனவைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் இந்திராயணி நதிக்கரையில் கூடினர்.  அங்கே பரந்தாமனின் ‘கருட வாகனம்’ வந்தது. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீ துக்காராம் பாண்டுரங்கனின் புகழைப் பாடிக் கொண்டே அதில் ஏறிக் கொள்ள கருட வாகனம் விரைந்து வானில் சென்று வைகுண்டத்தை அடைந்தது.  அவருடன் இணைபிரியாது இருந்த தம்புராவை விட்டு விட்டு அவர் மட்டும் இரு கைகளையும் கூப்பி பண்டரிநாதனை வணங்கிக் கொண்டே கருட வாகனத்தில் ஏறி விட்டாரே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த தம்புரா தனியாகக் கீழிருந்து கிளம்பி வானில் உயரே சென்று மறைந்ததை பார்த்த  ஊர் மக்கள் அந்த தம்புராவும் துக்காராமுடன்   சேர்ந்து வைகுண்டம் செல்வதை உணர்ந்து அங்கேயே தரையில் வீழ்ந்து அந்த மகானை, ஸ்ரீ துக்காராம் மஹாராஜை வணங்கினார்கள்.

இப்பேர்ப்பட்ட மகான்கள் நம் நாட்டில் வாழ்ந்தது நாம் செய்த பெரும் பாக்கியந்தான்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...