0,00 INR

No products in the cart.

பறக்கும்  பாவைகள்!

எங்களாலும் பறக்க முடியும்.

பகுதி – 12

-ஜி.எஸ்.எஸ்.

சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு புள்ளி விவரம் இது. அமெரிக்க ராணுவத்தில் உள்ள 100 ஹெலிகாப்டர் பைலட்களில் 10 பேர் பெண்கள். ஆனால், அங்கு நடைபெற்ற ஹெலிகாப்டர் வான்விபத்துகளில் நூறில் மூன்றில்தான் பெண்கள் விமான ஓட்டிகளாக இருந்திருக்கிறார்கள் என்கிறது அந்தப் புள்ளி விவரம். அதாவது விபத்தின்றி விமானத்தை ஓட்டுவதில் பெண்கள் முன்னணி வகிக்கிறார்கள் எனலாம்.

கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். 1992இல் அந்தக் குழுவுக்கான விமான பயிற்சி வகுப்புகள் முடிவடைந்தன. நடைபெற்ற தேர்வில் முதலிடத்தைப் பெற்றவர் ஜீனி லெவிட். இது பலருக்கும் வியப்பை அளித்தது. முக்கியமாக அந்தக் குழுவில் இருந்த ஆண் விமான ஓட்டிகளுக்கு மிகுந்த வியப்பை அளித்தது.

தேர்வில் முதல் இரு இடங்களைப் பெறுபவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படும். அதாவது எந்த வகை விமானத்தை ஓட்ட அவர்கள் விரும்புகிறார்கள் என்கிற தேர்வில் சலுகை.

தன் விருப்பமாக ஜீனி லெவிட் வெளியிட்டது  F15 ஸ்ட்ரைக் ஈகிள் என்ற வகை விமானம். உயரதிகாரி திடுக்கிட்டார். ‘இப்பயிற்சியில் நீங்கள் முதலிடத்தைப் பெற்றது உண்மைதான். ஆனால், அதற்காக ஒரு போர் விமான வகையை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அது பெண்களுக்கு ஏற்றது அல்ல. எதிரிகளை நோக்கி வெடிகுண்டுகளை வீசுவதற்கு வடிவமைக்கப்பட்ட விமானம் அது. இதை ஓட்ட சிறப்பான உடல் உறுதியும் மன உறுதியும் தேவைப்படும். வேறு பலவித விமான வகைகள் உள்ளன.  அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்’ என்றார் கண்டிப்பாக. வேறு வழியில்லாமல் ஜீனி லெவிட் வேறொரு விமான வகையைத் தேர்ந்தெடுக்க நேரிட்டது.

ஆனால், அதற்கு அடுத்த வருடமே ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புத் துறையின் செயலாளரான லெஸ் ஆஸ்பின்  ஓ​ர் உத்தரவை வெளியிட்டார்.  இதன்படி போர் விமானங்களை ஓட்டுவதில் பெண்களுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன. உடனடியாக தன் விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார் ஜீனி லெவிட்.

இப்போது அந்த ‘சலுகை’ அவருக்கு அளிக்கப்பட்டது. உலகின் முதல் பெண் போர் விமான ஓட்டியாக அறியப்பட்டார். ‘விளம்பர நோக்கத்தில் நான் போர் விமான வகையை தேர்ந்தெடுக்கவில்லை. எனக்கு போர் விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது அதனால்தான் இந்தத் தேர்வு’ என்றார்.

என்றாலும் பாதுகாப்புத்துறை செயலாளரின் உத்தரவு விமானப் படையில் இருந்த பலருக்கும் ஏற்புடையதாக இல்லை. பெண்கள் போர் விமானங்களைக் கையாள்வது குறித்து நிறைய முணுமுணுப்புகள் உண்டாகின. எனவே தனது பொறுப்பை,  தனது திறமையை ஜீனி லெவிட் மேலும் மேலும் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘நான் போர் விமானத்தை செலுத்தியதை நேரில் பார்த்த அனைவருக்கும் என் திறமை புரிந்தது. அவர்கள் என்னை உடனடியாக அங்கீகரித்தார்கள்.  ஆனால் என்னை அறிந்திராத பலரும் தொடர்ந்து விமர்சனங்களை வீசிக்கொண்டிருந்தார்கள்’ என்கிறார் ஜீனி லெவிட்.

ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய போர்ச் சூழல் மிக்க பகுதிகளில் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போர் விமானத்தை ஓட்டிப் பலரையும் வியக்க வைத்தார் ஜீனி லெவிட். ‘1993ல் நான் போர் விமானத்தை ஓட்டியபோது அத்தகைய திறமை கொண்ட பெண்கள் யாருமே இல்லை. எனவே பயிற்சியாளர்களில் யாருமே பெண்கள் இல்லை. இப்போது அதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. கணிசமான பெண்கள் என் பாதையை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்வைத் தருகிறது’ என்கிறார் ஜீனி.

தவிர, இப்போதெல்லாம் போர் விமானங்கள் ரிமோட் மூலமாகவே தொலைதூரத்திலிருந்து செயல்படுவதால் போர்க்களத்துக்கு மிக அருகில் விமானங்கள் செல்ல வேண்டும் எனும் நிலை மாறி வருகிறது இதன் விளைவாக உடல்வலிமை என்ற அடிப்படையில் பெண் விமான ஓட்டிகளைக் குறைவாக எடை போடுவதும் மாற்றம் கண்டிருக்கிறது.

இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி என்ற முழு நேரப் பணியை முதன்முதலில் பெற்றிருக்கிறார் கேப்டன் அபிலாஷா பரக். இதற்கான தேர்வுகளை அவர் வெற்றிகரமாக முடித்து இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்.   இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர். செப்டம்பர் 2018ல் ராணுவ வான் பாதுகாப்புத் துறையில் சேர்ந்தார்.

ஆக பல போராட்டங்களை சந்தித்து இன்று போர் விமானிகளாகவும் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். மன உறுதியும் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஆர்வமும் இருந்தால் விண்ணில் பறப்பதற்குத் தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள். பரவட்டும் இந்த எண்ணிக்கை.

***************

விமான ஓட்டியாக வே​ண்டுமானால் என்ன செய்ய வேண்டும்

ட்டப் படிப்புக்குப் பிறகு ஏதாவது ‘ஏவியேஷன் அகடமி’யில் சேர வேண்டும்.  எந்த அகாடமியோடு வணிக விமான சர்வீஸ்கள் தொடர்பில் இருந்து, அங்கே பயிற்சி எடுப்பவர்களைப் பணிக்கு அமர்த்த  வாய்ப்பு அதிகமோ அதில் சேர்வது நல்லது.

குறைந்த பட்சம் இவ்வளவு மணி நேரம் விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று அவ்வப்போது விதிகள் இயற்றப்படும். அந்தக் கால அளவுக்குப்  பயிற்சி பெறவேண்டும். இ​தன் ​மூலம் பல்வேறு விமானங்கள் குறித்த புரிதல் உண்டாவதோடு விமானப் பயிற்சி அனுபவமும் உண்டாகும்.

குறிப்பிட்ட ம​ணி நேரத்துக்கான பயிற்சி பெற்ற பிறகுதான் விமான ஓட்டிக்கான உரிமத்துக்காக விண்ணப்பிக்க முடியும். அது மட்டுமல்ல, மருத்துவ சோதனைகளும் செய்து திருப்தி அடைந்த பிறகுதான் உரிமம் வழங்கப்படும்.

உரிமம் கிடைத்த பிறகு விமான சர்வீஸ்களில் பணியில் சேர தனி நுழைவுத் தேர்வுகளும் நேர்முகத் தேர்வும் உண்டு. இதில் தங்கள் நிறுவனத்தின் வரலாறு உ​ள்ளிட்ட தகவல்கள், தங்கள் நிறுவனத்தில் சேர விருப்பப் படுவதற்கான காரணங்கள் போன்றவை கேட்கப்படும்.

தங்களுக்கு எந்த வகையான விமானத்தை ஓட்டுவதற்கு நபர்கள் தேவையோ, அந்த வகை விமானத் தகவல்களை முழுவதுமாக தேர்வு பெற்றவர்களுக்கு அளிப்பார்கள். முதலில் விமானம் ஓட்டுவது போன்ற ​சூழலை உண்டாக்கி அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பார்ப்பார்கள். இவற்றை ஸிமுலேஷன் பயிற்சி என்பார்கள். பின்னர் தட்ப வெப்ப மாறுதல், விமான இன்ஜின் பழுதடைதல், மன இறுக்கத்தைக் கையாளுதல் போன்றவை குறித்த தேர்வு நடைபெறும்.

பிறகு ஒரு சீனியர் விமான ஓட்டியோடு சென்று விமானத்தைக் கையாளுதல் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு அறையுடன் எப்படித் தகவல் தொ​டர்பு கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்தும் நேரடியாக அறிந்து கொள்வார்கள். திருப்திகரமாக அமைந்தவுடன் முக்கிய விமான ஓட்டியாக நிய​மனம் செய்வார்கள்.

****தொடர் நிறைவு பெறுகிறது.****

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...