0,00 INR

No products in the cart.

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

-சுசீலா மாணிக்கம்

ஓவியம்: பத்மவாசன்

பாகம் – 9

டவுளை தரிசித்து – வான்சிறப்புக் கண்டு – நீத்தார் பெருமை பேசி –  அறன் வலியுறுத்தி – இல்வாழ்க்கை சிறப்பித்து – மக்கட்பேறில் மகிழ்ந்து – அன்புடமையில் கரைந்து… இப்போது நாம் முதற்பாவலரின் உத்தர வேதத்தின் ஒன்பதாம் அதிகாரம் ‘விருந்தோம்பல்’ வந்துவிட்டோம்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
இனிய முகத்தோடு தக்க விருத்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனமகிழ்ந்து குடியிருப்பாள்.

ஆம், பண்டைக்காலம் முதலே விருந்தோம்பல் எனும் உயர் பண்பு தமிழர்களின் மிகச்சிறந்த அடையாளங்களுள் ஒன்று. விருந்தோம்பலின் எஞ்சிய மிச்சமாய் கிராமங்களில் குறிப்பாக திருவிழாக் காலங்களில் இன்றும் போற்றப்பட்டு வரும் விருந்து  உபசரிப்புக்கு அடிமையாகாதோர் யார்?  வருடத்திற்கு ஒரு திருவிழா கண்டு,  அதன் பசுமை நினைவுகளிலேயே மூழ்கி  வரவிருக்கும் அடுத்த வருட திருவிழாவுக்காக காத்திருப்போர் நம்மில் எத்தனை பேர்?!

இன்னும்…

“சங்கமெல்லாம் வேணாம், எனக்கு சாப்பாடுதான் முக்கியம்” எனும் அணியாக இருந்தாலும் சரி,

“தினமும் அறுசுவை உணவை ஒரு பிடி பிடித்து விடுவேன் அது மட்டும் தவறவே தவறாது” சங்கமாக இருந்தாலும் சரி,  விருந்துக்கு போறதுன்னு முடிவானா மூணு நாள் சாப்பிடாத சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்தாலும் சரி, இன்றும் கிராமங்களில் உயிர்ப்புடன் இருக்கும் விருந்தோம்பலை உணவுடன் சேர்த்து ரசித்து ருசிப்பவராக இருந்தாலும் சரி … அல்லது மேற்சொன்ன அனைத்து சங்கத்திலும் என்னைப்போல பல ஜென்ம உறுப்பினராக இருந்தாலும் சரி என்னோட கைகோர்த்துக்கோங்க… எழுத்தோவியமாம் பொன்னியின் செல்வன் விருந்தோம்பலில் நாமும் கலந்து கொள்வோம்.

(முதலில் சேந்தன் அமுதன் இல்லம்…ஆடி திருநாள் – வீரநாராயண ஏரி – விண்ணகர கோயில் – கடம்பூர் மாளிகை -குடந்தை ஜோதிடர் – திருவையாறு – தஞ்சாவூர் எனச் செல்லும் நம் கதாநாயகன், கதை நாயகன்  கதாநாயகியின் மனங்கவர் கள்வன் வந்தியத்தேவன் தான் செல்லும் வழியில் ஆழ்வார்கடியான், பழுவேட்டரையர்கள், குந்தவை, வானதி, வேளக்கார படை, நந்தினி என பலரையும் சந்தித்தும் சிந்தித்தும் குதிரையில் பயணம் மேற்கொண்டுள்ளான். அடுத்ததாய் சந்தித்த சேந்தன் அமுதனின் விருந்தாளியாய் அவன் இல்லம் செல்கிறான். வாய் பேச இயலாத தன் தாயாரிடம் வந்தியதேவனை அறிமுகப்படுத்துகிறான் சேந்தன் அமுதன்)

அமுதன் சில சமிக்ஞைகள் செய்ததும் அந்த மூதாட்டி வந்திருப்பவன் அயல் தேசத்திலிருந்து வந்த விருந்தாளி என்று தெரிந்துகொண்டாள். முகபாவத்தினாலேயே தன்னுடைய பரிவையும் வரவேற்பையும் தெரிவித்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் இலைபோட்டு அந்த அம்மாள் உணவு பரிமாறினாள். முதலில் இடியாப்பமும் இனிப்பான தேங்காய்ப் பாலும் வந்தன. அந்தமாதிரி இனிய பலகாரத்தை வந்தியத்தேவன்  தன் வாழ்நாளில் அருந்தியதில்லை. பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான். பிறகு புளிக்கறியும், சோளமாப் பணியாரமும் வந்தன. அவற்றையும் ஒரு கை பார்த்தான். அப்படியும் அவன் பசி அடங்கவில்லை; கடைசியாக, காற்படி அரிசிச்சோறும் அரைப்படி தயிரும் நுங்கினான்! பிறகுதான் அவன் இலையிலிருந்து எழுந்தான்.

 சாப்பிடும்போதே சில விஷயங்களை அமுதனிடம் கேட்டு தெரிந்துகொண்டான்.

(என்னதான் சுவையில் மனம் மயங்கினாலும், மதி மயங்காமல், சதி பல கடந்து, விதி வென்றதால்தான் பொன்னியின் செல்வன் எனும்  உணர்வு கோலத்தின் உயிர் கோடாய் இருக்கிறான் வந்தியத்தேவன். வாருங்கள் அப்படியே இலங்கை மண்ணில் மற்றுமோர் விருந்து…)

 வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காக பெரிய பெரிய கல்லடுப்புக்களில் ஜூவாலை வீசிய நெருப்பின் பேரில் பிரமாண்டமான தவலைகளில் கூட்டாஞ்சோறு பொங்கிக்கொண்டிருந்தது. சட்டிகளிலும், அண்டாக்களிலும் வெஞ்சனங்கள் வெந்துகொண்டிருந்தன. இவற்றிலிருந்து எழுந்த நறுமணம் அந்த வீரர்கள் நாவில் ஜலம் சுரக்கச் செய்தது . சோறு பொங்கி முடியும் வரையில் பொழுது போவதற்காக அவர்கள் ஆடல் பாடல் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். இச்சமயத்தில் அவர்களுடைய உள்ளங் கவர்ந்த அரசிளங்குமாரரும் வந்துவிடவே, அவ்வீரர்களின் குதூகலம் அளவு கடந்ததாயிற்று. அந்த எல்லைக் காவல் படையின் தளபதி மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்குள்ளே ஒழுங்கை நிலைநாட்டினார். எல்லோரையும் அமைதியுடன் பாதிமதியின் வடிவமான வட்டத்தில் வரிசையாக உட்காரும்படி செய்தார்.

பெரியதொரு ராட்சச மரத்தை வெட்டித் தள்ளி அதன் அடிப்பகுதியை மட்டும் பூமிக்குமேலே சிறிது நீட்டிக்கொண்டிருக்கும்படி விட்டிருந்தார்கள். இளவரசர் வந்து அந்த அடிமரத்து சிம்மாசனத்தின் மீது அமர்ந்தார். இப்போது அவர் யானைப்பாகன் போல் உடை தரித்திருக்கவில்லை. தலையில் பொற் கீரிடமும், புஜங்களில் வாகு வலயங்களும், மார்பில் முத்துமாலைகளும் அணிந்து, அரையில் பட்டுப்பீதாம்பரம் தரித்து அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி எல்லைக்காவல் தளபதியும், வந்தியத்தேவனும் , ஆழ்வார்க்கடியானும் உட்கார்ந்திருந்தார்கள்.

இளவரசரை மகிழ்விப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த ஏலேல சிங்கன் சரித்திரக்கூத்து ஆரம்பமாயிற்று.”

கூத்து முடிவதற்கும் சமையல் ஆவதற்கும் சரியாயிருந்தது. கட்டுக் கட்டாகத் தாமரை இலைகளைக் கொண்டு வந்து அவ்வீரர்களின் முன்னால் போட்டார்கள். பிறகு பொங்கலும் கறியமுதும் கொண்டுவந்து பரிமாறினார்கள்.

வீரர்கள் சாப்பிட தொடங்கிய பிறகு இளவரசர் அவர்களிடையே பந்தி விசாரணை செய்துகொண்டு வலம் வந்தார். அங்கங்கே நின்று அவ்வீரர்களின் உடல்நலத்தைப் பற்றி விசாரித்தார். அப்படி விசாரிக்கப் பட்டவர்கள் ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார்கள். பக்கத்திலிருந்தவர்கள் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைப் பாராட்டினார்கள்.”

(இப்படி விருந்தோம்பல் பண்பு போட்டி போடும் மனங்கள் வாழும் இல்லங்களில் திருமகள் மனமகிழ்ந்து குடியிருப்பாள் என்பதில் சந்தேகம் ஏது!)

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் 

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு  வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

(இப்படி விருந்து சமைத்து  முன் பரிமாறி பின் உண்டு என உயர் பண்புகளுடனான விருந்தோம்பல் வெறும் உணவு பரிமாற்றம் மட்டும் அல்ல. அதனுள் மறைந்திருக்கும் அன்பு பண்பு பாசம் நேசம் அப்பப்பா… இப்படியோர் விருந்து தர தயாராகும் அரண்மனையையும் விருந்தாளிகளின் முக்கியத்துவத்தையும் நம் பொன்னியின் செல்வனில் இருவேறு காட்சிகளாய்…)

ஆதலின் ஒரு வார காலமாக மணிமேகலை ஒரே உற்சாகத்தில் மூழ்கியிருந்ததுடன், பரபரப்புடன் அரண்மனையில் அங்கும் இங்கும் ஓடி விருந்தாளிகளுக்கு வேண்டிய வசதிகளை மேற்பார்வை செய்வதில் ஈடுபட்டிருந்தாள். முக்கியமாகப் பழுவூர் இளையராணிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அரண்மனைப் பகுதியில் சகல வசதிகளும் ஏற்படுத்தி வைப்பதில் அவள் கவனம் செலுத்தினாள். தமையன் வேறு சொல்லியி ருந்தான் அல்லவா? ஆகையால் அரண்மனை பணியாளர்களை வறுத்து எடுத்துவிட்டாள். அவளுடைய தோழிகளையும் வதைத்துவிட்டாள். பழுவூர் ராணி தங்கப் போகும் அறையில் ஒவ்வொரு பொருளையும் முப்பது தடவை பெயர்த்து எடுத்து வெவ்வேறு இடத்தில் வைக்கும்படி வற்புறுத்தினாள்.”

(வாருங்கள் கடற்கரையில் மந்தாகினி தேவி படைக்கும் ஓர் அன்பு விருந்தையும் ருசித்து விடுவோம்)

சற்று நேரத்துக்கெல்லாம் அமுதும் படைத்தாள். பழையாறை அரண்மனையில் அருந்திய ராஜ போகமான விருந்துகளையெல்லாம் காட்டிலும் இம்மூதாட்டி அளித்த வரகரிசிச் சோறும் வள்ளிக்கிழங்கும் சுவை மிகுந்ததாக இளவரசருக்கு தோன்றியது.”

(அம்மாடி போதுமப்பா. இனி ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாது. வயிறும் மனமும் நிறைந்தது. இனி இனியவை கூறல்தான்…)

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...