0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்

‘தீபாவளி’ என்றதும் தங்கள் நினைவுக்கு வருவது புத்தாடையா, பலகாரமா, பட்டாசா?
– ஆர்.வித்யா சதீஷ்குமார், பள்ளிக்கரணை
புத்தாடை, பலகாரம் எந்த பண்டிகைக்கும் பொது! ஆனா, வெடி? பட்டாசு வெடிச்சாதான் தீபாவளி! வண்ணமும் ஒளியும் ஒலியும் சங்கமிக்கும் தீபத் திருநாளின் ஹை-லைட்டே பட்டாசுதான்!
சின்ன வயசுல, ‘தீபாவளி’ வருதுன்னாலே, மனசுக்குள்ள கவுன்ட்-டவுன் ஆரம்பிச்சுடும். புது கேலன்டர் வந்ததும் அவசர அவசரமா புரட்டி, ‘தீபாவளி என்னிக்கு?’ன்னு பார்த்து வெச்சுடுவோம்.
லிஸ்ட் போட்டு, பட்டாசு வாங்கி வந்ததும், ‘நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கலை’ன்னு அண்ணா முகாரி ராகம் பாடுவான்.
சீனி வெடி, ஊசி வெடி, லட்சுமி வெடி, ஆனை வெடி, குருவி வெடி, டபுள் ஷாட், (ஆட்டம்பாம் வெடி மட்டும் அப்பா திரி மூட்டுவார்) ஊதுபத்தியை ஊதி ஊதி சலிக்காமல் நாள் முழுக்க ராவடி செய்ய வேண்டியதுதான்.
இருக்குற ஒரே ஒரு துப்பாக்கியில ரோல் ‘கேப்’ போட்டு, சுட்டுக்கிட்டே ஓடறதுல, ஜேம்ஸ் பாண்ட் 007 எல்லாம் நம்மகிட்ட ட்ரெயினிங் எடுத்துக்கணும். அப்படி ஒரு ஆக்‌ஷன்!
‘கார்த்திகைக்கு’ என அம்மா தனியாக எடுத்து வைப்பதிலும் பீராய்ந்து, பூச்சட்டி, சங்கு சக்கரம், மத்தாப்பு (மல்டி கலர்) கொளுத்தி மகிழ்வது இரவு நேர அட்டகாசம்! கை இடுக்கெல்லாம் ஈய நிறம் மிச்சமிருக்க, அக்கம் பக்கத்து பட்டாசுக் குப்பைகளை எல்லாம் நம் வீட்டு முன் பெருக்கி ஏரியாவிலேயே நாமதான் அதிகம் வெடிச்சதா பொய்க் கணக்குக் காட்டும்போது கிடைக்கிற கெத்தே தனிதான் போங்க!

கனகாம்பரப் பூக்களில் பிடித்த வண்ணம்?
– வாசுதேவன், பெங்களூரு
‘நல்ல கனகாம்பரக் கலர்ல…’ன்னு பெண்கள் சொன்னதும் ஆரஞ்சும் மஞ்சளும் இழைஞ்சு குழைஞ்ச ஒரு ப்ளஸென்ட் கலர்ல டபுள்ஷேட் புடைவையை கடைக்காரர் எடுத்துப் போடுவாரே… அந்த வண்ணம்தாங்க!
சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் தலையில் பூ வைப்பதே ஃபேஷன் இல்லை; அதிலும் கனகாம்பரம் வெச்சா, ‘சரியான நாட்டுப்புறம்’னு முத்திரை விழுந்துடும்னு அஞ்சியோ என்னவோ, இளைஞிகள் கனகாம்பரத்தைச் சீண்டுவதில்லை.
எங்க வீட்டுத் தோட்டத்திலேயே ஆரஞ்ச், சிவப்பு (டெல்லி கனகாம்பரம்), நீலம் மற்றும் மஞ்சள்னு நாலு நிறத்துல செடி வெச்சிருந்தோம். கனகாம்பரச் செடியின் காய்ந்த விதைகளை நாக்கில் வைத்து எச்சில் செய்தால், ‘பட் பட்’ என்று சீற்றத்துடன் வெடித்துச் சிதறும். அது ஒரு சிறு வயது விளையாட்டு எங்களுக்கு!

பெண்களுக்குப் பெண்களே எதிரிகளாகச் சித்திரிக்கப்படும் சின்னத்திரை சீரியல்களைப் பெண்கள் பார்த்து ரசிக்கலாமா?
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
(அப்ப… ஆண்கள் மட்டும் பார்த்து ரசிக்கலாமா?)
கூடாது… கூடாதுதான். ஆனால், பல சமயம் உண்மை நிலைமை அப்படித்தானே இருக்கிறது? நான் மின்சார ரயிலில் மகளிர் பெட்டியில் பயணிக்கும்போது, தானாக பல விஷயங்கள் காதில் வந்து விழும்.
‘என் நாத்தனார் பொல்லாதது!’
‘சூபர்வைஸர் மேடம் இருக்கே… அது ஒரு சைக்கோ!’
‘எங்க மாமியார் போய் தொலையாம உயிரை வாங்குது!’
‘தம்பி பொண்டாட்டியால ஒரே பிரச்னை!’
இப்படி எங்கும் குடும்பம் பற்றிய உள்குத்து புலம்பல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், பொதுப்பெட்டியில் ஏறினால், ஆண்கள் யாரும் மாப்பிள்ளை, சகலை, மச்சான், தம்பி என குடும்பப் பிரச்னைகளைப் பேசி நான் பார்த்ததில்லை. இளைஞர்கள் மட்டும் அலுவலகம், சினிமா, கல்லூரி கலாட்டா என கலகலப்பாக இருப்பார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? குடும்பத்தில் உழலும், நடுத்தர மற்றும் சாமானியப் பெண்களுக்கு யாரிடமாவது தங்கள் மனக்குமுறல்களைக் கொட்டினால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது என்பதே. இத்தகைய பெண்கள், இப்போது வரும்
டீ.வி. சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு வடிவில் தங்களைப் பொருத்திக்கொண்டு, சின்ன வடிகால் தேடித் தேடிக் குமைந்து அப்படியே அடிக்ட் ஆகி விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இது ஓர் மனோதத்துவ உணர்ச்சிப் பெருக்கு! டீ.வி. நாடகங்கள் நம்மையும் அறியாமல், எதிர்மறை எண்ணங்களை நமக்குள் இறக்கி, நம்முடைய நிஜமான சுபாவத்தையும், ஆற்றலையும் சிதைத்து விடக் கூடும்! அப்ப என்னதான் செய்யறது? டீ.வி. நேரத்தைக் குறைத்து வேறு உருப்படியான சமாச்சாரங்களில் ஈடுபட்டால், பெண் மனமும் குணமும் தரமான வார்ப்பாக மிளிரும். செய்வோமா?

புனித் ராஜ்குமார் திடீர் மரணம் குறித்து…?
– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி
செய்தியைக் கேட்டதும், ‘கடவுளே என்ன காரியம் செஞ்சுட்டே!’ என்று பதற வைத்தது என்னவோ நிஜம். புனித் யாரென்றே தெரியாத ஏழு மாதக் குழந்தை ஒன்று மோட்டார் சைக்கிளில் ஒட்டப்பட்டிருக்கும் அவரது ஸ்டிக்கருக்குப் பாய்ந்து பாய்ந்து முத்தம் கொடுப்பதும், 25 லட்சம் பேர் கொட்டும் மழையில் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுவதும் எல்லோருக்கும் வாய்க்கக் கூடியதா? வெறுப்பவர்களோ, எதிர்ப்பவர்களோ இல்லாமல் எல்லோருக்கும் பிடித்தவனாய் வாழ்வது சாத்தியமா? அதனால்தான் ராஜ்குமாரைப் போலவே, புனித்துக்கும் ரசிகர்கள் என்று யாருமில்லை; எல்லோருமே தீவிர பக்தர்கள். புனித்தின் இரண்டு கண்களும், நான்கு பகுதிகளாக்கப்பட்டு, நான்கு நபர்களுக்கு கண்ணொளி தந்திருக்கிறது என்று, ‘நாராயணா நேத்ராலயா’ மருத்துவர் சொல்லும்போது, நம் கடமை என்ன என்றும் புரிகிறது.
நடிகராக தனிப்பட்ட திறமையிருந்தும், கர்நாடக மக்களை பெரிதும் ஈர்த்தது புனித்தின் எளிமை, மனித நேயம், பக்தி, கண்ணியம் போன்றவையே. புனித் குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற படம், ‘பெட்டத ஹூவு!’ (ஆங்கிலத்தில், ‘மவுண்டன் ஃப்ளவர்’) ‘மலைச் சிகரத்தின் உச்சியில் எப்போதாவது அபூர்வமாகப் பூக்கும் பூ’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். விலை மதிக்க முடியாத, ‘பெட்டத ஹூவு’ ஒன்று கடவுளின் மடி சேர்ந்தது. போய் வா சாமி!

2 COMMENTS

 1. சின்னத்திரை சீரியல்களில் பெண்களுக்கு பெண்களே எதிரி போல் காட்டப்படுவது பற்றிய கேள்விக்கு ஆசிரியர் சிறந்த மனோதத்துவ முறையில் அளித்த பதில் ரசிக்கக் கூடியதாக இருந்தது. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அந்த சீரியல்களில் வரும் கேரக்டர்களை நம்மோடு இணைத்து பொருத்தி பார்த்துக் கொள்வதால் தான் சீரியல்கள் பெண்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆசிரியர் கூறுவதைப் போல் சீரியல் பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு மற்ற உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த முற்பட வேண்டும்.

 2. புனித் மறைவு பெரிய இழப்பு.மறைந்த பிறகும் பிறருக்காக கண் தானம் செய்து
  தன்னுடைய நல்ல குணத்தை உலகறியச்
  செ ய்தவர் . இவ்வுலகம் இருக்கும் வரை
  புனித் புகழும் மணம் வீசும்.
  2.சின்னத்திரை சீரியல்களை பெ ரிது
  படுத்தும் பெ ண்களின் மனம் மாற அனுஷா
  மே டத்தின் “டிப்ஸ்” அருமை.
  து.சேரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...