தினம் தினம் தீபாவளி!

தினம் தினம் தீபாவளி!
Published on
கட்டுரை: சேலம் சுபா

விடிந்தால் தீபாவளி. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியை சுற்றிவரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில் வலம் வந்தாலாவது தான் விரும்புபவள் கடைக்கண்ணால் தன்னைப் பார்க்க மாட்டாளா என ஏங்கும் இளைஞர்களும், பட்டாம்பூச்சிகளாய் வண்ண வண்ண உடைகளில் மினுமினுக்கும் புன்னகையுடன் கைகளில் இனிப்புகள் ஏந்தி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் டீன்ஏஜ் பெண்களும், சிறார்களை எச்சரித்தபடி பெரியவர்களும் என தீபாவளியின் பரபரப்பு ஆங்காங்கே தெரிந்தாலும் ஏதோ ஒன்று விடுபட்டிருப்பது போலவே மனதுக்குள் நெருடுகிறது. மனம் புலம்பிய (என்) கவிதையை வாசிக்க வேண்டுகிறேன்…

அன்று…
விடிந்தால் தீபாவளி வீடு நிறைய கூட்டம்
கைகளில் மருதாணியும் கண்களில் குறும்புமாக
அத்தை மகள் மாமன் மகனின்
அன்பான ஸ்பரிச மோதல்கள்
வகை வகையான பலகாரம்
வாழ்த்து சொல்ல வந்த
வஞ்சனை இல்லா மனிதர் கூட்டம்
தாத்தா பாட்டி நடுநாயகம்
அம்மா மட்டும் வியர்வை வழிந்த முகத்துடன்
சமையலறை பின்கட்டில்
வெடி வெடித்து இனிப்பு உண்டு கொண்டாட்டம் ஆரம்பம்
அம்மாவின் கரம் பற்றி புதுசு உடுத்த வைத்து
அப்பாவுடன் சேர்ந்து நின்று ஆசி வழங்க வேண்டினோம்
அந்த நேரம் அம்மா முகத்தில் தெரிந்த நிறைவு… ஆஹா!

இன்று…
தீபாவளி திருநாளில் அலுவலகம் விட்ட விடுமுறையில்
காதல் கணவரின் கரம் பற்றி அலங்காரமாய் வெளியில் சுற்றி
ஒற்றைப் பிள்ளை கேட்டதெல்லாம் வாங்கித் தந்து ஒப்புக்கு வெடி வைத்து
கடையில் வாங்கிய ரெடிமேட் பலகாரங்களுடன்
வீட்டுக்கு வரும் ஒன்றிரண்டு பேரை ஆயாசமாய் வரவேற்று
புது சேலை கசங்காமல் போட்ட மேக்கப் கலையாமல் கொண்டாடினேன்
ஏனோ அம்மாவின் நிறைவு மட்டும் இல்லை என் அகத்திலும் வீட்டிலும்…
என் மனதில் எழுந்த நெருடலுக்கான பதிலை இந்த கவிதை மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். இதுதான் இன்றைய குடும்பத் தலைவிகளின் நிலைமை. வாழ்வில் 'விரக்தி' என்னும் நரகாசுரன் இங்கே ஒளிந்து உள்ளான்.
அடுத்த ஒரு வீட்டில் நடந்த காட்சி, 'என்னோட சுடி டாப்ஸை எடுக்காதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது?'
'அப்படித்தான் எடுப்பேன். எடுத்தா என்ன செய்வாய்?'
'உன் பல்லை உடைப்பேன்.'
'உடைத்துத்தான் பாரேன்.'
'என்னடி திமிரா பேசுற… அக்காங்கற மரியாதை இல்லாம?'
'நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? நேத்து அந்த ரகு கூட சுத்துனதை அம்மாகிட்ட சொன்னா தெரியும்.'
அவ்வளவுதான்… 'ஆ அம்மா…' தலையில் ரத்தம் வழிய தங்கை நிற்க, பத்ரகாளியாய் ஆவேசம் ஆனாள் அக்கா. இச்சம்பவத்தில் கையில் கிடைத்ததை எடுத்து அடித்த அந்த அக்காவின் மனதில், 'கோபம்' என்னும் நரகாசுரனும், அக்காவின் மேல் குறை சொல்லி அவள் கோபத்தைத் தூண்டிய தங்கையின் மனதில், 'வெறுப்பு' என்னும் நரகாசுரனும் ஒளிந்து உள்ளான்.

து ஒரு சின்ன உதாரணம்தான். ஆனால், இந்த அசுரர்கள் நம் வாழ்வில் புகுந்து படுத்தும் பாடு இருக்கிறதே… அவர்களின் பிடியில் சிக்காத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால், இவர்களையெல்லாம் அழித்து, தன்னையே வென்ற மனிதர்கள் மட்டுமே மகான்களாகிறார்கள். நாம் மகான்கள் ஆக வேண்டாம். மனிதர்களாக வாழ முயற்சித்தால் என்ன?

வசரமின்றி, நிதானமாக வாழ்வை அதன் போக்கில் அனுபவிக்கவே நமக்கு இந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது. வசதிகள் மட்டுமே வாழ்க்கை ஆகாது. பிறருக்கு நாம் செய்யும் சிறு உதவியினால் எழும் மன நிறைவுதான் உண்மையான வாழ்வின் அர்த்தம்.

கவே, ஒரு நரகாசுரன் அழிந்ததற்காக வருடத்தில் ஒரு நாள் மகிழ்வுடன் தீபாவளி கொண்டாடும் நாம், நம் மனதில் உள்ள காமம், குரோதம், பகை, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற வாழ்வை சீரழிக்கும் பல நரகாசுரர்களை அழித்து, தினம் தினம் தீபாவளி கொண்டாடி மகிழலாமே!

அனைவருக்கும் ஆண்டு முழுவதும் அன்பில் நனைந்து, அகமகிழ்ந்து கொண்டாடும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com