0,00 INR

No products in the cart.

“என்னை மன்னிச்சுடு பார்வதி!”

ஜெயஸ்ரீராஜ் நினைவு
சிறுகதைப் போட்டி பரிசுக்கதை – 3

கதை       : இராம. பாலஜோதி
ஓவியம்  : தமிழ்

‘எனது மாமியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்’ என்ற தகவலை என் கணவர் போன் பண்ணி, சொன்னதும் அரை நாள் விடுப்புக் கோரி பிரின்ஸ்பலை சந்தித்தேன். ஏற்கனவே இரண்டு பேராசிரியர்கள் விடுப்பு எடுத்திருந்தார்கள். ‘விடுப்புக் கிடைக்குமா, என்ற சந்தேகம் இருந்தது?’ பிரின்ஸ்பல், ஒரு வகுப்பை மட்டும் எடுத்து விட்டு, வீட்டிற்குச் செல்லுமாறு கூறிவிட்டார். மகிழ்ச்சியோடு, ஸ்டாப் அறைக்குச் சென்று எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டேன். வகுப்பு முடிந்ததும் அப்படியே வீட்டுக்குச் சென்று விடலாம் என்பது என் எண்ணம்.
நான் வகுப்பறைக்குள் நுழைந்து, ஹேண்ட் பேக்கையும் மொபைல் போனையும் டேபிள் மீது வைத்துவிட்டு, மாணவிகளை நோக்கித் திரும்பிய போதுதான் அந்த வாடை என் நாசிக்குள் நுழைந்து முகத்தை சுளிக்க வைத்தது.

இராம. பாலஜோதி

அந்த நெடியுடன் கூடிய வாடை… சந்தேகமேயில்லை மது வாடைதான். ‘மகளிர் கல்லூரி வகுப்பறையில் மது வாடையா?’ நினைத்த போதே அதிர்ந்து போனேன். ‘ச்சே… ச்சே… அப்படி எல்லாம் இருக்காது… எவளாச்சும் ஆல்கஹால் அதிகமுள்ள ஃபெர்ப்யூமை அடித்துக் கொண்டு வந்திருப்பாள்’ என்று முதலில் என் மனம் முடிவு செய்தது. ஆனால், வாசனைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழுக்க முழுக்க மதுவின் நாற்றமே குடலைக் குமட்டியது.
வகுப்பைப் பிறகு நடத்திக் கொள்ளலாம். முதலில் அந்த மாணவியைக் கையும் களவுமாகப் பிடித்து, டி.சி.யைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. வகுப்பு லீடர் பார்வதியை அழைத்தேன்.
“பார்வதி எல்லா ஸ்டூடண்ஸ்களையும் செக் பண்ணி, க்ரவுண்ட்ல நிற்க வை. எல்லாருடைய பேக்கையும் செக் பண்ணனும். ஒருத்தியையும் விடாதே. நான் போய் பிரின்ஸ்பல் மேடத்தை கூட்டிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடந்தேன்.
* * *

சற்று நேரத்திற்குள்ளாக கல்லூரி முதல்வருடன் வகுப்பறையை நெருங்கினேன். மாணவிகள் எல்லோரும் மைதானத்தின் ஓரத்திலிருந்த வேப்பமர நிழலில் நின்றிருந்தார்கள். வகுப்பறை வாசலில் பாதுகாப்பு அரணாக பார்வதி நின்றுக் கொண்டிருந்தாள்.
நானும், முதல்வருமாக வகுப்பறைக்குள் நுழைந்தோம். அடுத்த வினாடியே கல்லூரி முதல்வர் முகம் சுளித்து மூக்கைப் பொத்திக் கொண்டார்.
“ஆமாம் பாரதி, லிக்கர் ஸ்மெல்தான் வருது” அவர் குரலில் பதட்டம் தெரிந்தது. தொடர்ந்து அவரே, “எல்லாருடைய பேக்கையும் செக் பண்ணுங்க” என்று உத்தரவிட்டார்.
நானும், வகுப்பு லீடர் பார்வதியுமாக எல்லா மாணவிகளின் பைகளையும் பரிசோதனை செய்தோம். ஒன்றும் சிக்கவில்லை.
“என்ன பாரதி… ஒன்றும் கிடைக்கலையா?” முதல்வர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
“ஆமாம் மேடம். மதுஷாலினி பேக்ல ஃபெர்ப்யூம் பாட்டில் திறந்துக் கிடக்கு. அதுலேருந்து வந்த வாடைதான் லிக்கர் ஸ்மெல்லுக்கு காரணமோ… என்னமோ…” என்றேன்.
“எனிவே, கெட்ட விஷயம் எதுவும் நடக்கலேல்ல ….. அதுவரைக்கும் சந்தோஷம்” என்றபடியே முதல்வர் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரமாகப் பார்த்து மேஜை மீது இருந்த என் மொபைல் அழைத்தது. என் கணவர்தான் பேசினார். அவருடன் பேசிவிட்டு பதட்டமுடன் கல்லூரி முதல்வரைப் பார்த்தேன். அவர் என்னிடம் “என்னாச்சு பாரதி?” என்று கேட்டார்.

“மேடம், என்னோட மாமியாரை ஆஸ்பிட்டலுக்குக் கொண்டுவந்துட்டாங்களாம்” என்றேன்.
“சரி, நீங்க உடனே கிளம்புங்க. நான் வகுப்பை மேனேஜ் பண்ணிக்கறேன்” என்றார். நான் அவருக்கு மனதார நன்றி கூறிவிட்டு, மேஜையின் மீது இருந்த எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு மிக வேகமாக புறப்பட்டேன்.
“என்னமா பேயறஞ்ச மாதிரி நிக்கறே? …… எல்லாரையும் வகுப்புக்குள்ள வர சொல்லு” என்று கல்லூரி முதல்வர் பார்வதியை பார்த்து அதிகாரமாய் சொன்னது என் காதில் விழுந்தது.
* * *

மாமியாரை தனியார் கிளினிக்கில் காட்டி, சிகிச்சை எடுத்து விட்டு நாங்கள் வீடு திரும்பிய போது, மணி இரவு ஏழு முப்பது. வீட்டிலிருந்த எனது மாமனார், குழந்தைகள் நடாஷாவுக்கும், நவீனுக்கும் இரவு உணவைக் கொடுத்து விட்டு அவர்கள் இருவரையும் தூங்க வைத்திருந்தார்.
மாமியாரைத் தனி அறையில் படுக்க வைத்து விட்டு, ஹாலுக்கு வந்தேன். கல்லூரியிலிருந்து பதட்டமாய் வந்த அவசரத்தில் ஹேண்ட் பேக்கை ஹாலில் உள்ள டி.வி. ஸ்டாண்ட் அருகே போட்டு விட்டு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அதில் மதிய உணவை நான் சாப்பிடாமல் அப்படியே வைத்தது நினைவுக்கு வர, கெட்டுப் போயிருக்கும் அந்த உணவை எடுத்துக் கொட்டலாம் என்று நினைத்து பேக்கை திறந்தேன்.
லஞ்ச் பாக்ஸ் உடன் பாலிதீன் கவர் சுற்றப்பட்ட மற்றொரு பார்சல் ஒன்றும் இருந்தது, இது என்ன பார்சல்? நான் வைக்கவே இல்லையே” என்ற குழப்பத்துடன் பாலிதீன் கவரை பிரித்து உள்ளே உள்ள பொருளை எடுத்துப் பார்த்த நான் அதிர்ந்து போனேன்.
அது ஒரு பிராந்தி பாட்டில்.
* * *

மறுநாள் காலை, கல்லூரி முதல்வர் அறையில் நானும் மேலும் நான்கு பேராசிரியர்களும் கூடி, இது குறித்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம்.
அதன்படி, “இந்தத் தவறை செய்தவள் கண்டிப்பாக இன்று பயத்தில் கல்லூரிக்கு வரமாட்டாள். அதை வைத்து, அவளைத் தீவிரமாகச் கண்காணித்து நடவடிக்கை எடுத்து விடலாம்” என்று கல்லூரி முதல்வர் சொல்ல, அதுவே எங்களுக்கு சரியென்று பட்டது.
வகுப்பு ஆரம்பித்து கொஞ்ச நேரத்துக்குள் வருகைப் பதிவேடு முதல்வர் அறைக்கு கொண்டு வரப்பட்டது. மதுஷாலினியும் வகுப்பு லீடர் பார்வதியும் அன்று ஆப்சென்ட். இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
“ஏன் பாரதி… ஒரு வேளை அவளா இருக்குமோ? நேற்று உன் மாமியார் கீழே விழுந்துட்டாங்கன்னு சொல்லி, நீ உன்னோட ஹேண்ட் பேக்கை எடுத்துட்டு அவசரமா புறப்படும் போது, பார்வதியோட முகம் பேயறஞ்ச மாதிரி இருந்தது” என்று கல்லூரி முதல்வர் கேட்க.
“ச்சே… ச்சே… . அவளா இருக்க வாய்ப்பே இல்ல மேடம். அவளைப் பத்திதான் நம்ம காலேஜுக்கே தெரியுமே மேடம்” என்றேன் நான்.
“உண்மைதான் பாரதி. ஆனா, அவளும் இன்னிக்கு ஏன் லீவ் போடணும்?” என்று அவர் பேசிக் கொண்டிருந்த போதே, டேபிள் மேலிருந்த டெலிபோன் அடித்தது. ரிஸிவரை எடுத்து பேசிய முதல்வரின் முகம் பேயறைந்தது போல் மாறிப் போனது.
“அய்யய்யோ ….. எப்போ? அடப்பாவமே ……” என்று அடுத்தடுத்து அதிர்ச்சி கலந்தக் குரலில் அவர் போனில் பேசியபோதே எனக்கு புரிந்து விட்டது. ஏதோ விவகாரம் என்று. ரிஸிவரை வைத்து விட்டு என்னைப் பார்த்த முதல்வர்.
“நம்ம பார்வதி தற்கொலை பண்ணிகிட்டாளாம் பாரதி” என்று கூற அதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத கடும் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.
அடுத்த சில மணி நேரங்களில் காரியங்கள் மளமளவென நடந்தேறின. கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு கல்லூரி பேருந்துகள் மூலமாக மாணவிகளும், பேராசிரியர்களுமாக பார்வதியின் இறுதிச் சடங்குக்காக அவளது கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றோம். எங்களுடன் கல்லூரி முதல்வரும் இணைந்து கொண்டார். என் நினைவுகள் முழுதும் பார்வதியையேச் சுற்றி வந்தன.
“எங்கள் கல்லூரியே கொண்டாடிய அருமையான மாணவி, பார்வதி. எல்லா பேராசிரியர்களுக்கும் அவளை மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் படிப்பில் மட்டுமல்லாது, தாழ்மை, அடக்கம், கீழ்படிதல் மரியாதைத் தந்து பேசுதல் என்று எல்லாவற்றிலும் அவள் தான் முதல் மாணவி. தனது ஏழ்மை நிலையை எந்தக் காரணம் கொண்டும் முன்னிலைப்படுத்தி, யாரிடமும் எந்த உதவியும், பச்சாதாபமும் பெறாதவள். சி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் அவளது கனவாக இருந்தது. அத்தனையும் அவளது குடிகாரத் தகப்பனால் பாழாய் போனது மட்டுமில்லாமல் இப்போது உயிரையும் பறித்து விட்டது.
* * *

அருகில் உள்ள குக்கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வரும் பார்வதி, திரும்பிச் செல்லும் போது, அவளது அப்பாவுக்கு குவாட்டர் பிராந்தி ஒன்றையும் தினமும் வாங்கிச் செல்வாளாம். வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் கிடக்கும் அவளது அப்பாவுக்கு ஆகாரமே பிராந்திதானாம். கட்டிட வேலைக்கு சென்று வரும் மனைவியின் சம்பளத்தில் பாதி அவனுக்கு மது வாங்கித் தருவதிலேயே போய்விடுமாம். அந்தக் கிராமத்தில் மதுக்கடை இல்லையாம். அதனால் கல்லூரிக்கு வரும் பார்வதிதான் மது வாங்கிச் செல்வாளாம்.
எப்போதும் கல்லூரி முடிந்து ஊருக்குத் திரும்பும் போது கடைக்குச் சென்று மது வாங்கும் பார்வதி, அங்குள்ள குடிமகன்களின் கிண்டல், ஆபாச பேச்சுக்களை சகிக்க முடியாமல், நேற்று கல்லூரிக்கு வரும் போதே மதுவை வாங்கி தனது பேக்கில் வைத்திருக்கிறாள். அந்த பாட்டில் சரியாக சீல் செய்யப்படாததால் கசிந்து, வகுப்பறையை நாறடித்து இருக்கிறது. இந்த பின்னணி எதுவும் தெரியாமல் நான் பரிசோதனையில் ஈடுபடும் நடவடிக்கையில் இறங்க, இதனை பார்வதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் கல்லூரி முதல்வரை அழைத்துவரச் சென்ற நேரத்தில், மாணவிகளையெல்லாம் மைதானத்துக்கு அனுப்பி விட்டு, தனது ஹேண்ட் பேக்கில் இருந்த பிராந்தி பாட்டிலை எனது ஹேண்ட் பேக்கில் ஒளித்து வைத்து விட்டு, வாடைத் தெரியக் கூடாது என்பதற்காக தனது ஹேண்ட் பேக்கில் முகபௌடரை கொட்டி வைத்து இருக்கிறாள். எல்லா களேபரமும் முடிந்து பிறகு என்னிடம் உண்மையைச் சொல்லி, மதுபாட்டிலை வாங்கிக் கொள்வதுதான் அவளது திட்டம். அதற்குள்ளாக எனது கணவரிடமிருந்து போன் வர நான் அந்த ஹேண்ட் பேக்கோடு அவசரமாய் கிளம்ப, இவள் பிராந்தி இல்லாமல் ஊருக்குச் சென்றிருக்கிறாள்.
வெறும் கையுடன் வந்த பார்வதியை, மகள் என்று கூட பார்க்காமல் கீழ்த்தரமான வார்த்தைகளாலும், ஆபாச செய்கைகளாலும் அந்தக் குடிகார தகப்பன் திட்டி தீர்க்க, அவமானம் தாங்காமல் அன்று இரவே தூக்கு மாட்டி இறந்திருக்கிறாள் பார்வதி.
இந்த தகவல்களை எல்லாம் இறப்பதற்கு முன்பாக கடிதமாக எழுதிவைத்துவிட்டு, அந்தக் கோர முடிவை எடுத்து இருக்கிறாள் பார்வதி. இவற்றையெல்லாம் மதுஷாலினிதான் திரட்டி, போன் மூலம் கல்லூரி முதல்வரிடம் சொன்னதோடு மட்டுமில்லாமல், தகவல் அறிந்து முதல் ஆளாய் கிராமத்துக்கும் சென்று விட்டாள். தவிர, பார்வதியின் இறுதிச் சடங்குக்கான எல்லா செலவுகளையும், அதற்கான ஏற்பாடுகளையும் அவள்தான் செய்துக் கொண்டிருக்கிறாள். பார்வதியின் அப்பா இந்த நிலைமையிலும் மது வேண்டும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, குடித்து விட்டு வீட்டின் மூலையில் சுருண்டுக் கிடக்கிறான்.
அவனை நினைத்து ஆத்திரம் ஒரு பக்கம் பொங்கியது. மதுஷாலினியை தவறாக நினைத்து விட்டோமே என்று மறுப்பக்கம் குற்ற உணர்வும் எனக்குள் மேலிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, பார்வதி இறப்புக்கு ஒரு வகையில் மறைமுகக் காரணமாகி விட்டேனே என்ற மன அரிப்பு என்னைப் பாடாய் படுத்தியது.
அதனை நினைத்து கண்கள் கசிய அமர்ந்திருந்த என்னை ஆதரவாய் தொட்டார் கல்லூரி முதல்வர்.
“பாரதி இன்னும் அதையே நினைத்துக் கவலைப்பட்டுகிட்டு இருக்கியா? பார்வதி சாவுக்கு நீ எந்த வகையிலேயும் காரணம் இல்லே. அந்தக் குடிகார தகப்பன்தான் காரணம். அவனால் ஒரு அருமையான மாணவியை நாம இழந்துட்டோம் பாரதி” என்று சொல்லும் போதே அவரின் கண்களும் கலங்கி இருந்தன.
ஆனாலும் என் மனம் ஆறவில்லை மானசீகமாய் பார்வதியிடம் கைகளைக் கூப்பினேன்.
“என்னை மன்னிச்சிடு பார்வதி”

 

1 COMMENT

  1. கதையை வேறு விதமாக படைத்திருக்கலாம்.தற்கொலையை தவிர்க்க பல முயற்சிகள்,பலராலும் எடுக்கப்படும் வேளையில் இப்படிப் பட்ட கதை படிப்பவருக்கு எதிர்மறை சிந்தனை தான் ஏற்படும்.குடிகார தந்தையை மறுவாழ்வு மையத்திற்கு கூட்டிச் செல்லலாம்.,அக்கம்பக்கத்தில் உதவி கேட்கலாம்.பல வழிகள் இருந்தும் கல்லூரிக்கு எடுத்து வருவது,,பயத்தில் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவு சரியில்லை .

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...

ஐக்கியம்! 

2
எழுதியவர்:   அன்னக்கிளி வேலு ஓவியம்: தமிழ் பகுதி - 2 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா போன் பண்ணியிருந்தாள். அவனுக்கு கல்யாணம் பண்ணவேண்டுமாம். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அவன் இளைத்தே போய்விட்டானாம். மதுரையிலிருந்து திருச்சிக்கு போன் பண்ணினால்...

பாசமழை

3
கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு...

தேய்(ப்)பவர்கள்   

2
      “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்துவிடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய...