spot_img
0,00 INR

No products in the cart.

பரபரக்கும் பட்டாசு நகரம்!

சிவகாசி நேரடி விசிட்!

கட்டுரை, படங்கள் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

ரவு நேரம். சரம் சரமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் வண்ண வண்ண மின் விளக்குகளின் ஒளியானது, கண்கள் சிமிட்டியபடி பட்டாசு ரசிகர்களை. ‘வாங்க வாங்க’ என்று வரவேற்றுக் கொண்டிருக்கிறது. ஆம்… அத்தனை வண்ணங்கள். சிவகாசி மாநகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்படியும் மூவாயிரம் விற்பனை நிலையங்கள் இருக்குமெனச் சொல்லப்படுகிறது. இதே பட்டாசு வியாபாரத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவப் பேரிடரான கொரோனா வந்து சீர்குலைத்துப் போட்டு விட்டது. இந்த ஆண்டு தீபாவளி வியாபாரத்தில் சற்றே மேலேறி வந்து விடலாம் என்கிற நம்பிக்கை ஒளி, வண்ணச் சர விளக்குகளின் வெளிச்சத்தில் தெரிகிறது. சரவெடிகள் உற்பத்தி செய்வதற்குத்தான் தடை. இந்த வண்ண மின் சர விளக்குகளுக்கு ஏது தடையென சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றன, சிவகாசி பட்டாசுகளின் விற்பனை நிலையங்கள்.

ஆம். நூறு வாலாவில் தொடங்கி, ஐந்நூறு வாலா, ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா, இருபதாயிரம் வாலா போன்ற சர வெடிகள் தயாரிப்புக்குத் தடை விதித்துள்ளது உச்சநீதி மன்றம். அதனால், சிவகாசியில் மிகப் பிரபல பட்டாசு நிறுவனங்கள் எதுவுமே இந்த ஆண்டு சர வெடிகளை உற்பத்தி செய்யவில்லை.

ஆயினும் பட்டாசு ரசிகர்களே, “சர வெடிகள் இல்லையா? சர வெடிகள் கிடைக்காதா?” என்று கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விடத் தேவையில்லை. மிகப் பிரபல பட்டாசு நிறுவனங்களின் பட்டாசுகளை விற்கும் கடைகள் தவிர, ஏனைய பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வணிகம் செய்யும் விற்பனை நிலையங்களில் சர வெடிகள் கிடைக்கின்றன. “முந்தியே தயாரிச்சுட்டாங்க. அதை எல்லாம் என்னங்க பண்றது?” என்கிற வார்த்தைகள் காதுகளில் விழுகின்றன.

“சிவகாசி பட்டாசுகள் உற்பத்திக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளின் பின்னணியிலும், கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கினை முன்னிட்டும் புகை, மாசு கட்டுப்படுத்தவும் சில குறிப்பிட்ட மணி நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று மிகக் கடுமையாக உத்தரவிட்டது அரசு. யோசித்துப் பார்த்தால் இதனால் புகை, மாசு எவ்விதமும் குறையாது. குறிப்பிட்ட மணி நேரத்தில் எல்லோரும் பட்டாசு வெடிக்கும்போதுதான் மிக மிக அதிகமான பட்டாசுப் புகை ஒரே நேரத்தில் வெளிப்படவும் புகை சூழவும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெடி வெடிக்கும் நேரத்தை அரசு எப்படி அறிவிக்கப்போகிறது எனத் தெரியவில்லை. பொதுவாக, நேரக் கட்டுப்பாடு இல்லாதிருத்தலே நல்லது. அவரவர் விருப்பப்படி, அவரவர் நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கும்போது ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மிகவும் அதிகமான பட்டாசுப் புகைச் சூழ வாய்ப்பில்லை” என்கிறார் நம்மிடம் பேசிய பட்டாசு வணிகர் ஒருவர்.

சிவகாசி மாநகரிலும் சரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சரி இப்போதுதான் பட்டாசு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பட்டாசு ரசிகர்கள் கார்களிலும் வேன்களிலும் வந்து குவிந்துக் கொண்டிருக்கின்றனர். அதன் சுறுசுறுப்பில் சற்றே பரபரப்பு அடையத் தொடங்கியுள்ளது பட்டாசு நகரம்.

கணேசன்

“போன ரெண்டு வருசத்துல பட்டாசு ஏவாரம் ஏதும் சொல்லிக்கிற மாதிரி இல்லே. வருஷம் ஒண்ணுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக இங்கு ஏவாரம் நடக்கும். நடந்துட்டு இருந்திச்சு. கொரோனாவுல ரெண்டு வருசமா மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேலே தாண்டல. சிவகாசில எங்களுக்கு மூணு மாசம் சரியான ஏவாரம். ஆடிப்பெருக்கு வந்துட்டா போதும். அதுலேந்து தொடர்ந்து மூணு மாசம் ஏவாரம் பிச்சிக்கிட்டு போவும். இப்பப் பாருங்க, ஆயுத பூஜைக்கு அப்புறமாத்தான் சிவகாசிக்குள்ளே வந்து எட்டிப் பாக்குறாங்க பட்டாசு வாங்குறவங்க. இந்த வருஷம் தீபாவளிக்கு ஏவாரம் சுமாரா இருக்கும்ங்கற நம்பிக்கை இருக்கு” என்கிறார், மிகப் பிரபல நிறுவனங்களின் பட்டாசுகளுக்கான விற்பனை நிலையத்தினைக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் கணேசன்.

அடுத்து, சிவகாசியில் மிகப் பெரிய பரபரப்பு பட்டாசுகளுக்கான தள்ளுபடி விற்பனை. தடுக்கி விழுந்தால் நாம் அந்தத் தள்ளுபடி விளம்பர போர்டுகளில்தான் முட்டிக்கொள்ள வேண்டும். இந்தத் தள்ளுபடிகளில் இரண்டு மூன்று நிலைகள் உள்ளன. மிகப் பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பத்து சதவீதம் முதல் முப்பது சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது. இது ஓகே. ஆனால், சில விற்பனை நிலையங்களில் மிக மிகக் கூடுதலாகத் தள்ளுபடி தரப்படுகிறது. அதாவது, மிக அதிகப்படியான இரண்டு இலக்க எண்களில் அந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சுப்ரீம் சரவணன்

சிவகாசி பட்டாசுகளுக்குத் தள்ளுபடி தரும் அளவுக்கு, உலகில் வேறு எங்கும் எந்தப் பொருளுக்குமே தள்ளுபடி இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. நீங்கள் சிவகாசிக்கு உள்ளேயும் சரி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சரி அந்தத் தள்ளுபடி விளம்பரப் போர்டுகள் உங்களை, ‘வாங்க வாங்க’ என்று வரவேற்றுக் கொண்டிருக்கும். மிகப் பிரபலமான நிறுவனப் பட்டாசுகளுக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு மொத்தத் தொகை விற்பனைக்கு ஏற்றாற்போல, பத்து முதல் முப்பது சதம் வரை தள்ளுபடி தருகிறார்கள். நிறைய விற்பனை நிலையங்களில், இதர நிறுவனங்களின் தயாரிப்புப் பட்டாசுகளுக்கு நீங்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு தள்ளுபடி தரப்படுகின்றன. ஆமாம். அங்கு முப்பது சதம் முதல் எண்பது சதம் வரையிலானத் தள்ளுபடி மிகத் தாராளமாகவே அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. இன்னும் அவர்கள் நூறு சதத் தள்ளுபடிக்கு வந்து நிற்காததுதான் பாக்கி. போன ஆண்டு தீபாவளி ஆரவாரம் ஏதுமின்றி நம்மைக் கடந்து போனது. இந்த ஆண்டு தீபாவளி அப்படி இல்லை. ஸ்வீட் எடுங்கள் கொண்டாடுங்கள். கூடவே, எல்லோரும் பட்டாசு வெடித்து, மிக ஆனந்தமாகக் கொண்டாடுங்கள்” என்கிறார் சிவகாசி சுப்ரீம் சரவணன்.

—————————————-

 பெட்டிச் செய்தி : 

இந்த ஆண்டு இந்தப் பட்டாசு புதுசு…
இந்தியாவின் பட்டாசு மாநகரம் சிவகாசி. தீபாவளி சீசனுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகப் பட்டாசுகள் தயாரித்து, மார்க்கெட்டில் விறபனைக்கு அனுப்புவது வாடிக்கை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு தாக்கத்தினால், புது ராகங்கள் உற்பத்தி செய்வதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை; வாய்ப்புகளும் இல்லை; நேரமும் இல்லை. அதற்கென அப்படியே விட்டுவிட முடியுமா என்ன? இந்த ஆண்டும் சில பல காரணங்களால் அரசு அனுமதி பெற்ற மிகப்பெரிய பட்டாசு கம்பெனிகள் புதிதாக, புதுப்புது ரகம் ஏதும் அறிமுகப்படுத்தவில்லை.
இந்நிலையில் சிறு குறு உற்பத்தியாளர்கள் புதிதாக மூன்று ரக பட்டாசுகளை தயாரித்துள்ளனர். அவை அனைத்தும் பட்டாசு விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன.

ஹெலிகாப்டர் வெடி – இதில் ஐந்து வெடிகள், இல்லையில்லை ஐந்து ஹெலிகாப்டர்கள் உள்ளன. பற்ற வைத்தால் ஒவ்வொரு வெடியும், அதாவது ஒவ்வொரு ஹெலிகாப்டரும் இருபதடி உயரத்துக்குப் பறந்து சென்று, ‘டமால்’ என்கிற சத்தத்துடன் வெடிக்கும்.

ட்ரோன் கேமிரா வெடி – ஐந்து பீஸ்கள் கொண்டது ஒரு பாக்ஸ். பத்த வைத்தால் போதும், பத்துப் பதினைந்தடி உயரத்துக்குப் பறந்து, மிதந்து மிதந்து பின்னர் வெடிக்கும்.

பம்பரம் வெடி – ஒரு பாக்ஸில் பத்து பம்பர வெடிகள். பத்த வைத்தால் ஒவ்வொரு பம்பரமாகத் தரையில் சுழன்று சுழன்று வெடிக்கும். பம்பர வெடி வெடித்தால், வெற்றி வெடி. வெடிக்கலைனா, வெற்றி வாய்ப்பினை இழந்த வெடி. மதிமுக பம்பரம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம்.

—————————————-

1 COMMENT

  1. பட்டாசு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும் அதை வாழ்வாதாரமாக கொண்டு பலர் இருக்கின்றனர் என்று கட்டுரை படித்ததும் புரிந்தது. பெட்டி செய்தியாக புது வரவு பட்டாசு வகைகளைப் பற்றி படித்ததும் பெரியவர்களுக்கே வெடிக்க ஆசை ஏற்படுகிறது.சிறியவர்கள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்பான பசுமை வெடிகளைவெடித்து பண்டிகையை கொண்டாட வேண்டியது அவசியம்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

காணக் கண்கோடி வேண்டும்!

கோடி தீபத் திருவிழா! - ராஜி ரகுநாதன் புனிதமான கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதைப் போன்ற சுப காரியம் வேறொன்று இல்லை. வெளியில் ஏற்றும் தீபம், நம் உள்ளே உள்ள அறியாமை இருளை நீக்கி,...

கொட்டும் மழையில் கொட்டும் தேள்!

0
-ஜி.எஸ்.எஸ். எகிப்தில் உள்ளது அஸ்வான் என்ற நகரம். அதில் சமீபத்தில் கடும் மழை, புயல். இதில் மூன்று பேர் இறந்ததும், 450 பேர் பாதிக்கப்பட்டதும் தனியாகக் குறிப்பிடப்பட்டன. காரணம், அவர்கள் இறந்ததும் பாதிக்கப்பட்டதும் தேள்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

0
உலக மனித உரிமை தினம் - டிசம்பர் 10 - ராஜ்மோகன் இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் சமமானது. இதனை உணர்ந்து வழிநடத்த வேண்டிய பொறுப்பு மனித குலத்திற்கு இருக்கிறது. இருப்பினும், மனித குலமானது நிறம்,...

வென்னீரும் வாழ்வியலும்!

தொகுப்பு: தனுஜா ஜெயராமன் ஓவியம்: லலிதா இப்போது போல வசதிகள் ஏதுமில்லா காலத்தில் குளிக்க வென்னீர் வைப்பது என்பது சவாலான வேலை. வென்னீர் வைப்பதற்கென்றே புழக்கடையில் (புறக்கடை) பெரிய சைஸ் இரு மண் அடுப்புகள் மண்ணில்...

துனிசியாவில் துணிகரமான திருப்புமுனை!

2
- ஜி.எஸ்.எஸ். ஆப்ரிக்காவின் வடக்கு எல்லைக்குள் இருக்கிறது துனிசியா. அட்லஸ் மலைத்தொடர், சஹாரா பாலைவனம் ஆகியவற்றின் பகுதிகள் இந்த நாட்டிலும் இருக்கின்றன. அறுபத்து மூன்று வயதான நஜிலா பெளடன், துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக...