0,00 INR

No products in the cart.

‘வனத்துறைப் பணி செய்ய வாருங்கள்!’

பேட்டி : லதானந்த்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கு இணையானது, வனத்துறையின் உயர் பதவிகளுக்கு அளிக்கப்படும் ஐ.எஃப்.எஸ். அந்தஸ்து. அதற்கான பயிற்சிக் காலத்திலேயே சாதித்திருக்கிறார் சுதா ராமன் ஐ.எஃப்.எஸ்.!

சுதா ராமன் ஐ.எஃப்.எஸ்.

பயோ மெட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன் எஞ்சினீரிங் படித்துவிட்டு, தாம் படித்த படிப்பின் அடிப்படையில், தாம் சேர்ந்த வனத்துறைக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத் தமது பயிற்சிக் காலத்திலேயே, Plantation made easy என்ற செயலியை உருவாக்கிச் சாதனை புரிந்திருக்கிறார் இந்த இளம் பெண் உயர் அலுவலர். இந்தச் சாதனையைப் பயிற்சித் தலைவர் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இவரது சேவையை தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாநில அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.

மத்திய அரசின், ‘பிராணி மித்ரா’ விருது, டாக்டர் கலாம் இன்னொவேஷன் கவர்னன்ஸ் விருது, We Magazine அமைப்பினர் வழங்கிய, ‘ப்ரைட் ஆஃப் நம்ம சென்னை’ விருது போன்ற பல விருதுகளைக் குவித்திருக்கிறார் சுதா ராமன்.

இந்திராகாந்தி நேஷனல் ஃபாரஸ்ட் அகாடமியின் ஃபாரஸ்ட்ரி அண்ட் அலைட் சப்ஜக்ட்ஸ் என்ற பிரிவில் ஹானர்ஸ் டிப்ளமா படிப்பு முடித்திருக்கிறார். தற்போது இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் Post Graduate Diploma in Animal Welfare பட்டயப் படிப்பினைத் தொடர்ந்து வருகிறார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இவர் பணியாற்றியபோது, இரு வேறு மாநிலங்களில் இருந்து இரண்டு காண்டாமிருகங்களை சென்னைக்குக் கொண்டுவரும் சவாலான பணியில் மிக முக்கியமான பங்காற்றியிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த சவால்கள் நிரம்பிய வனத்துறையில் சுறுசுறுப்போடு பணியாற்றி, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுதா ராமனோடு பேசினோம்.

“2012ஆம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத முனைந்தபோதுதான் ஐ.எஃப்.எஸ். பற்றியே எனக்குத் தெரியும். சொல்லப்போனால், வனத்துறையில் சேர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் குறிப்பாக எனக்கு அப்போது இல்லை. சிறுவயது முதலே எனக்குச் செடி, கொடிகள், சுற்றுச்சூழல் இதிலெல்லாம் நாட்டம் உண்டு. என் தாயாருக்குச் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருந்தது. தான் போகுமிடங்களில் கிடைக்கும் விதவிதமான செடிகளைக் கொண்டுவந்து எங்கள் தோட்டத்தில் நட்டு வளர்ப்பார். வீட்டில் பெரிய தோட்டம் இருந்தது. என் தாயைப் பார்த்து பார்த்து எனக்கும் செடி, கொடிகளின் மீது மிகவும் ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த அடிப்படையில் வனத்துறைத் தேர்வை எழுதினேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றேன்; நேர்காணலிலும் தேர்வானேன். பயிற்சியின்போதுதான் வனம் சார்ந்த விஷயங்கள் மீது மிகவும் பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பின்னரும் எனது நலம் விரும்பிகள் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதும்படி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், வனத்துறையில் எனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கே நான் ஒதுக்கீடு செய்யப்பட்டதாலும், எனக்கு வனத்தின் மீது இருந்த வசீகரத்தாலும் வனத்துறைப் பணியிலேயே இருந்துவிட்டேன்.

நெய்வேலியில் க்ளூனி என்னும் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் ப்ளஸ் டூ வரை படித்தேன். முதலில் மருத்துவம் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், பெற்றோர் விருப்பப்படி கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோ மெட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன் எஞ்சினீரிங் படிப்பில் சேர்ந்தேன். படிப்பு முடிந்த ஒரு மாதத்துக்குள்ளாக எனக்குத் திருமணம் நிச்சயம் செய்துவிட்டர்கள். எனது கணவர் வீட்டில், மருத்துவப் படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து மிகவும் உற்சாகம் தந்தார்கள். விப்ரோ பணியினை ராஜினாமா செய்துவிட்டு பாண்டிச்சேரி சென்றேன். ஜிப்மர் நுழைவுத் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது நான் கருவுற்றிருந்தேன். பிளஸ் டூ முடித்திருந்த மாணவர்களுடன் நானும் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு வருடம் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காகப் படித்தேன். வீட்டிலும் வேலைகளைச் செய்துகொண்டு, வயிற்றில் பிள்ளையையும் சுமந்துகொண்டு படிப்பது என்பது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. துரதிருஷ்டவசமாக சில காரணங்களால் எனக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. எனக்குக் குழந்தையும் பிறந்திருந்த நேரம் அது. அடுத்த ஆண்டும் பயிற்சிக்கெல்லாம் போனேன். அப்போதும் சீட் கிடைக்கவில்லை. சின்னக் குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வளவு நாள்தான் படிப்பது என அந்த முயற்சியைக் கைவிட்டேன்.

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதிய சில தோழிகள் என்னையும் எழுதத் தூண்டினர். அப்போதுதான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன். சென்னைக்கு வந்தேன். சர்வீஸ் கமிஷன் பணிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றில் சேர்ந்தேன். ஐ.எஃப்.எஸ். தேர்வை எழுதினேன். என்னைப் பார்த்துப் பலரும் பரிகசித்தனர். ‘கை நிறையச் சம்பளம் கிடைக்கும் வேலையை உதறிவிட்டு, மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் படித்து, அங்கேயும் இரண்டு ஆண்டு வீணடித்துவிட்டு, இப்போது சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்காகச் சென்னை வந்திருக்கிறாயே?’ என ஏளனம் செய்தனர். அவர்களுக்கு முன் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற லட்சியம் என்னைத் தொற்றிக்கொண்டது. ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றேன்.

டேராடூன் பயிற்சி எப்படி இருந்தது?
அங்கேதான் வனம் மற்றும் வனத்துறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன். மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் எனக்கு உதவியது. ஆனால், வனவியல் என்பது அறிவியல் பாடங்களையும் தாண்டி நுட்பமானது. அந்தப் பயிற்சியின்போதும், ‘எஞ்சீனியர்கள் எல்லாத் துறையிலும் புகுந்துவிடுகிறீர்கள்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொள்ள வேண்டி வந்தது. பயிற்சியில் மிக உன்னிப்பாக கவனிப்பேன்; நிறைய கேள்விகள் கேட்பேன். இரண்டு ஆண்டுகள் பயிற்சியின்போது, குறைந்தது ஓராண்டு களப் பணிகள் இருக்கும். பல மாநிலங்களுக்கும் சென்று, அங்கிருக்கும் வனங்களைப் பற்றியும் வனம் மற்றும் வன உயிரின மேலாண்மை விவரங்களையும் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பயிற்சியில் இரண்டு பதக்கங்களையும் பெற்றது எனக்கு மகிழ்வளிக்கக்கூடிய விஷயம். ஏற்கெனவே தகவல் தொழில் நுட்பம் பற்றிப் படித்திருந்ததால், வன மேலாண்மையில் அதை எப்படிப் பொருத்தி, ஒன்றிணைத்துச் செயல்படுத்தலாம் என யோசித்தேன். ‘Plantation made easy’ என்ற ஒரு செயலியை உருவாக்கினேன். செல்ஃபோன் மூலம் இயக்கப்படக் கூடியது அது. பயிற்சி இயக்குநர் மற்றும் பல பயிற்றுநர்களால் அந்தச் செயலி மிகவும் பாராட்டப்பட்டது. எனது சக பயிற்சியாளர்களும் அதைக் கொண்டாடினர். பயிற்சி மைய இயக்குநர் அதனைப் பாராட்டி, தமிழ்நாடு வனத்துறைக்கும் கடிதம் அனுப்பினார். இவையெல்லாம் பயிற்சியில் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தன.

2015ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் களப்பணி பயிற்சியில் சேர்ந்தேன். அங்கே வனத்துறை நிர்வாகத்தின் பல நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். வன உயிரினக் காப்பாளர் பதவியில் இருந்த தீபக் பில்கி எனக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். பின்னர் கள்ளக்குறிச்சியில் செராபட் என்னுமிடத்தில் சரகப் பயிற்சியில் சேர்ந்தேன். சுஜாதா ஐ.எஃப்.எஸ். எனக்கு மிக நல்ல பயிற்சியளித்தார். அங்கே கள்ளச் சாராய ஒழிப்புக்காக அடிக்கடி ரெய்ட் செல்வோம். அடிக்கடி ட்ரெக்கிங் செல்வோம். நான்கு மாதம் மிகச் சிறந்த, சவால் நிரம்பிய பயிற்சி அது. பின்னர் உதவி வனப் பாதுகாவலர் பயிற்சியை திருச்சியில் மேற்கொண்டேன். அங்கே சத்தீஷ் ஐ.எஃப்.எஸ். அவர்கள் நிகழ்வுகளை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் பயிற்சியளித்தார். திருவண்ணாமலையில்தான் முதன் முதலாக மாவட்ட வன அலுவலராகப் பதவியேற்றுக் கொண்டேன். அங்கே பல நாற்றங்கால்கள் மற்றும் வனத் தோட்டங்கள் உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டேன். பழங்குடியினர் முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டேன்.

‘தமிழ்நாடு ட்ரீபீடியா’ என்னும் செயலியை உருவாக்கும் வாய்ப்பினை எனக்கு வனத் துறை மூலம் தமிழ்நாடு அரசு கொடுத்தது. அது விவசாயிகள் மற்றும் மரம் நடுவோர்களால் மிகவும் விரும்பப்படும் செயலியாகும். 150 வகையான மர இனங்களின் விதை நேர்த்தி செய்வது, நாற்றங்கால்கள் உருவாக்குவது முதல் அனைத்துப் பராமரிப்பு மற்றும் அறுவடை விவரங்கள் அந்தச் செயலியில் இருக்குமாறு அமைத்திருந்தேன்.

அதன் பின்னர் சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநராகப் பணியேற்றுக்கொண்டேன். அப்போதுதான் வர்தா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன். புயல் சேதத்தில் இருந்து உயிரினப் பூங்காவை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். பல மரங்கள் சாய்ந்திருந்தன. அவற்றை ஈடுகட்டும் வகையில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. அங்கே, ‘ஜூ ஸ்கூல்’ என்று நிறுத்தி வைக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்தோம். அதில் உயிரியல் பூங்கா பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்தோம். பிற ஜூக்களில் இருந்து விலங்குகளைப் பரிமாறும் திட்டங்களைச் செயல்படுத்தினோம். முப்பது ஆண்டுகளாக காண்டாமிருகங்களே இல்லாத தமிழ்நாட்டுக்கு ஹைதராபாத்திலிருந்து ஒன்றையும், பாட்னாவில் இருந்து ஒன்றையும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தோம். உயிரியல் பூங்கா முழுவதையும் டிஜிடைஸ் செய்தோம். மக்களும் பெரும் வரவேற்பளித்தார்கள். தற்போது மகப்பேறு மருத்துவ விடுப்பில் இருக்கிறேன்.

பணியில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்கள்?
திரைப்படங்களிலும், ஜூக்களிலும், சர்க்கஸ்களிலும் மட்டுமே பார்த்திருக்கும் புலியை, அதன் வாழிடமான வனத்தினுள் பார்ப்பது ஒரு பரவச அனுபவம். பல முறை வேட்டையர்களைத் துரத்திப் பிடித்த சம்பவங்கள் மறக்க முடியாதவை. வனக் குற்ற வழக்குகள் தொடர்பாக புலன் விசாரணைகள் மேற்கொண்டதையும், கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடலாம். காட்டில் அனாதையாக விடப்பட்ட பிறந்து ஒரே நாளான புலிக்குட்டி ஒன்றைக் காப்பாற்றி வளர்த்தது மனநிறைவு அளித்த, மறக்க முடியாத அனுபவம்.

செல்ல விரும்பும் இடங்கள்?
வடகிழக்கு மாநிலங்களை முழுமையாகச் சுற்றிப்பார்க்க வேண்டும். அங்கிருக்கும் பழங்குடி மக்களிடம் பழகி, அவர்கள் கலாசாரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

பிடித்த எழுத்தாளர்கள்?
கல்கி மற்றும் ஷெர்லாக்ஹொம்ஸ். தற்போது விரும்பிப் படிப்பது வனவிலங்கு மேலாண்மை தொடர்பான புத்தகங்கள்.

உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் விஷயம்?
என் கண்ணெதிரே நிகழும் அநீதிகள் எனக்குக் கோபத்தை ஏற்படுத்தும்.
வனத்துறைப் பணியாளர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது?
சம்பளத்துக்காக மட்டுமே செய்யக்கூடிய வேலை என்று எண்ணாமல், இதை ஒரு சேவையாக நினைத்துப் பணியாற்ற வேண்டும். சரியான திட்டமிடல் தேவை. ஊதியம் தவிர, இதர எதிர்பார்ப்புக்கள் எதுவும் இருக்கக்கூடாது.
மனச் சோர்வடைந்த தருணம்? அதை வெற்றிகொண்ட விதம்?
இரு ஆண்டுகள் கடுமையாகப் பயிற்சி எடுத்தும் என்னால் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்க முடியாமல் போனது எனக்கு மிகவும் மன அழுத்தத்தைக் கொடுத்தது. அனைத்திந்திய பணிகளுக்கான போட்டிகளுக்குத் தயார் செய்து வென்றதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டேன்.

வாழ்வின் மறக்கவியலா மகிழ்ச்சித் தருணங்கள்?
எனது இரு குழந்தைகள் பிறந்தபோதும், நான் ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற போதும் கிடைத்த மகிழ்ச்சி மிகப் பெரியது.

இளம் பெண்களுக்கான உங்களது ஆலோசனைகள் என்ன?
இயற்கையின் மீதும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் மீதும் பெண்களுக்கு கூடுதலாக அக்கறை இருக்கும். வனத்துறைப் பணிக்கு இந்த உணர்வுகள் முக்கியம். எனவே, பெண்களுக்கு மிகப் பொருத்தமானது வனப்பணி. வனத்தில் பணிகள் செய்வது என்பது சவால்கள் நிரம்பியது என்று பொதுவான கருத்து நிலவுகிறது. எந்தப் பணியில்தான் சவால்கள் இல்லாமல் இருக்கிறது? எனவே, பெண்கள் வனப் பணிகளில் ஈடுபட அதிக அளவில் ஆர்வம் காட்ட வேண்டும்.”
வனத்துறை பணியில் முழுமூச்சுடன் ஈடுபடும் சுதா ராமனுக்கு ஓவியங்கள் வரைதல், வண்ணங்கள் தீட்டுவதில் பெரும் ஆர்வம் இருக்கிறது. தினசரி ஏதாவது வரைவது இவரது வழக்கம். பயிற்சியின்போது பல மாநிலங்களுக்கும் சென்று வந்த அனுபவத்தால் அந்தந்த மாநிலங்களின் சிறப்பு உணவு செய்முறைகளை அறிந்து அவற்றைச் செய்வதும் இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. அயல்நாட்டு உணவு வகைகளையும் கற்றுக்கொண்டு சமைப்பது வழக்கம். “ஆனாலும், எனக்கு தமிழ்நாட்டு உணவு வகைகள்தான் மிகவும் பிடிக்கும்” என்கிறார் சிரித்துக்கொண்டே.
சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத ஆலோசனைகளையும் வழங்கிவரும் சுதா ராமன் ஐ.எஃப்.எஸ். அவர்களின் பணி மேலும் சிறக்க, வாழ்த்தி விடை பெற்றோம்.

1 COMMENT

  1. ஐ எஃப் எஸ் அதிகாரி சுதா ராமன் பற்றி படித்து,வியந்தோம். பெண்கள் நுழைய தயங்கும் துறையை எடுத்ததோடு பல சாதனைகள்,விருதுகள் பெற்ற அவரது பணி பாராட்டுதலுக்குரியது.அவரது பயணம் சிறக்கவும்,அவரையொட்டி பலரும் இத் துறையில் சிறக்க விரும்புகிறோம்.

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...