0,00 INR

No products in the cart.

வீட்டு பட்சணம் போயே போச்சு! கடை பட்சண காலம் வந்தாச்சு!

பட்சணக் கருத்தரங்கு

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

ஓவியங்கள்: பிரபுராம்

நாங்கள் சிறு வயதினராக இருந்தபோது, தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். என் அம்மா நான்கு நாட்களுக்கு முன்னமே, ‘மிக்ஸர்’ பண்ண ஆரம்பித்து விடுவார்கள். ஓமப் பொடி, காராபூந்தி, காராசேவு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அவல், கறிவேப்பிலை என்று ஒவ்வொரு அயிட்டமாப் பண்ணிக் கலந்து, ரெண்டு பெரிய சம்புடங்களில் வைத்து விடுவார்கள். பிறகு மூன்று வகை இனிப்புகள் பண்ணணும். தீபாவளியன்று, அக்கம் பக்கம் உள்ளவர்கள், சொந்த பந்தங்கள் எல்லோர் வீட்டுக்கும் சென்று, வாழ்த்துக்கள் சொல்லி விட்டு, பட்சணங்களும் கொடுத்துவிட்டு வரணும். அவர்கள் வீட்ல பண்ணின இனிப்புகளும் நம் வீட்டுக்கு வரும்.

நான் தீபாவளியன்று ஒரு ஸ்வீட்டும், ஒரு காரமும் பண்ணுவேன். மாமனார், மாமியாருக்கு சர்க்கரை நோய். இனிப்பு தொடவே கூடாது. என் பையன்களுக்கும் இனிப்பை விட, காரம் தான் பிடிக்கும். எதிர் வீட்டில் வசிக்கும் அக்காக்கு மட்டும்தான் பட்சணங்கள் கொடுப்பேன். அதனால் குறைந்த அளவுதான் பண்ணுவேன்.
என் மருமகள் கடையில்தான், கொஞ்சமாக இனிப்பு, காரம் வாங்குகிறாள். மகன், மருமகள் யாரும் எண்ணெய், நெய், வெள்ளைச் சர்க்கரை எல்லாம் சாப்பிட மாட்டார்கள். உடல் எடை கூடிடக் கூடாதாம். ‘டயட்’டுங்க. பிளாட்டில் யாருக்கும் ஸ்வீட் எல்லாம் கொடுக்க வேண்டாம். தீபாவளியன்று நேரில் சந்தித்துக்கொண்டால், ‘வாழ்த்துக்கள்’ சொன்னால் போதும்.

இனிவரும் காலங்களில் என்னென்ன மாற்றங்கள் வருமோ? கம்ப்யூட்டர் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ற மாதிரி, நாமும் மாறத்தான் வேண்டும். இது காலத்தின் கட்டாயம். காலம் மாறினால்… காட்சிகளும் மாறும். நாமும் மாறுவோம்!
– ஜெயா சம்பத், சென்னை

ஓவியங்கள்: பிரபுராம்

கூட்டுக்குடும்பங்களாக இயங்கி, எல்லோரும் ஒன்றுகூடி பட்சணங்கள் செய்து பகிர்ந்து கொண்ட காலம் மலையேறியதற்கு முக்கியக் காரணம், நாம் அனைவரும் பணத்தை நோக்கி பயணிப்பதுதான். அன்று, ஆண்கள்தான் வேலைக்குச் செல்வர்.பெண்கள் வீட்டை கவனித்துக் கொள்வர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. இருவரும் சம்பாதித்தால்தான் சராசரி வாழ்க்கையே வாழ முடியும். வேலைப்பளு அதிகமாவதால் உடலில் எனர்ஜி லெவல் குறைவதால் பட்சணங்களை கடைகளில் வாங்கும் நிலை வந்துவிட்டது. எனினும், கடைகளில் வாங்கும் பழக்கம் சற்று வேதனைக்குரியதுதான். இந்த நிலை மாற வேண்டுமென்றால் நம் மனதும் மாற வேண்டும்.
– நளினி ராமச்சந்திரன், கோயம்புத்தூர்.

‘தீபாவளி எப்போது வரும்? வீட்டில் என்ன பட்சணம் செய்வார்கள்?’ என்று பெரியவர்களும், குழந்தைகளும் ஆவலுடன் எதிர்பார்த்த நாட்கள் மலையேறி விட்டன. இப்போது வீடுகளில் செய்யும் பாரம்பரிய பட்சணங்கள் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்குப் பெரும்பாலும் கடைகளில் வாங்கும் புதிய வகை ஸ்வீட்ஸ் மற்றும் காரங்கள்தான் பிடிக்கிறது. நிறைய பெண்களுக்கு பட்சணங்கள் செய்து பழக்கமும் இல்லாததால், ‘வீட்டில் செய்தால் நன்றாக வர வேண்டுமே’ என்ற கவலை வேறு. தேவையானதை கடையில் வாங்கிக்கொள்ளலாம் என்பதே மேல்!
– ராதிகா ரவீந்திரன், சென்னை.

த்தாண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் அக்ரஹாரம் போன்றிருந்த ஒரு பழைய காலனியில் ஏழு வருடம் குடியிருந்தோம். ஓனர் வீடு உள்பட, பதினைந்து வீடுகள். அனைவருக்குள்ளும் அவ்வளவு ஒற்றுமை. நவராத்திரி, தீபாவளி என்றால் காலனியே கலகலக்கும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு யார் யார் வீட்டில் என்னென்ன ஸ்வீட், காரம் என கலந்து பேசி, லிஸ்ட் போட்டுக்குவோம். தினம் இரண்டு மூன்று ஐட்டம் செய்து தூக்கு, சம்படம் எல்லாம் நிரப்பிடுவோம். செய்த பட்சணங்களை பகிர்ந்தெடுத்து எல்லோர் வீட்டுக்கும் கொடுப்பதே முதல் வேலை. அதேபோல், மற்ற எல்லா வீடுகளிலிருந்தும் நம் வீட்டுக்கும் பட்சண வரவுதான். நாளின் முடிவில் வீட்டில் நிரம்பி வழியும் பட்சணங்களில் அனைத்து வகையும் இருக்கும். “தேவி செய்த கோதுமை அல்வாவை மிஞ்ச ஆளில்லை”, “கலாவின் ரிப்பன் பக்கோடா நாவில் கரையுது”, “லலிதாவின் பாதுஷா செம்ம டேஸ்ட்”, “நளினாவின் முருக்கை சாப்பிட்டவங்க பல்லை செக் பண்ணிக்கணும்…” என்றெல்லாம் கிண்டலடித்தும், புகழாரம் சூட்டியும் பொழுதைப் போக்குவோம். இவ்வாறெல்லாம் கூடிக் குதூகலித்த குடும்பங்கள், காலனி அடுக்குமாடிக் குடியிருப்பாய் மாறியதால், திசைக்கொன்றாய் சிதறியதுதான் பரிதாபம். அவ்வாறே பட்சணம் பண்ணும் கலாச்சாரம் மாறி, ஸ்வீட் ஸ்டாலை முற்றுகையிடும் கூட்டத்தைப் பார்ப்பது இன்னொரு பரிதாபம். என்ன செய்ய…? மாற்றம் ஒன்றுதான் மாறாததாயிற்றே!
– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.

நாம் பூஜையில் நிவேதனம் செய்யும் பிரசாதங்களை கடவுள் சாப்பிடுவதில்லை. நாம்தானே உண்கிறோம். அப்படி இருக்க, நிவேதனம் செய்வானேன்? பால், பழம் போன்ற மனம் உவந்து செய்யும் பொருட்களை கடவுள் ஏற்கும்போது, கடினமான கொழுக்கட்டை பட்சண வகைகளை உடல் நோக செய்து படைப்பானேன்? இதற்கு நல்லதொரு பதிலாகத்தான் நம் முன்னோர்களின் புத்திபூர்வமான மனோதத்துவம் வெளிப்படுகிறது.

இயந்திர வாழ்க்கையினால் மனம் சோர்ந்துவிடும். இது, பலவிதமான மனோவியாதிகளுக்கு வழிவகுக்கிறது. முக்கியமாக, மன அழுத்தம் வராமல் பண்டிகைகள் வழி செய்கிறது. பண்டிகைக்கு பல நாட்கள் முன்பாகவே இதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகி விடும். மனம் பரபரப்பு கொள்கிறது. அதைத் தயாரித்து நைவேத்தியம் செய்து, மற்றவர்கள் ரசித்து உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. வெளியிலிருந்து இவை வந்தால் உடலுக்கென்னவோ ஓய்வுதான்.‌ ஆனால் மனம்…? அதனால் சிறிதளவில் செய்தாலும் உணவு வகைகளை வீட்டில் செய்வது நம் மனதை மேம்படுத்த உதவுகிறது. இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்வதைத் தடுக்கிறது.
– ராஜலட்சுமி கௌரிசங்கர், மதுரை.

ணவனின் பொருளாதார நிலைமையை உயர்த்த தோள் கொடுக்கும் பெண்கள், பண்டிகைக்கு முதல்நாள் வரை அலுவலகப் பணியாற்ற வேண்டியுள்ளதால் பட்சணங்கள் செய்ய தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அக்கம் பக்கத்தினருடன் ஒன்றுகூடி, பலகாரம் செய்து கூட்டுக் குடும்பத்தில் பண்டிகையை மகிழ்ந்து கொண்டாடிய நாட்கள் இனி வராது.
– அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

வேலை, படிப்பு என அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பண்டிகை பட்சணங்கள் செய்ய நேரம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது. நுணுக்கமான வேலைகள் கொண்ட பட்சணங்களை அதில் கைதேர்ந்தவர்களிடம் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்குவதுதான் நல்லது. மேலும், இதனால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழிவகுக்கிறது.
சின்னஞ்சிறு குடும்பத்திற்கு நிறைய பட்சணங்கள் செய்து, சில சரியாக செய்ய வராமல் பொருளையும் பணத்தையும் வீணாக்குவது சரியல்ல. முடிந்ததை செய்துவிட்டு, சுலபமாக வேண்டிய பட்சணங்களை வரவழைத்து, டென்ஷன் இல்லாமல் பண்டிகைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதே சிறந்தது. அதனால், இந்த மாற்றம் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
– வி.ரத்தினா, ஹைதராபாத்.

ந்தக் காலத்தில், பட்சணங்கள் பண்ணிய பிறகு பாத்திரங்களைக் கழுவ பணிப்பெண்கள் ஒத்துழைத்தார்கள். இன்று நிறைய இல்லங்களில் பணிபுரிவதால் உதவிகள் மிஸ்ஸிங். அப்புறம், நான்கு பேர் உள்ள குடும்பமானாலும், ஒருவருக்கு சுகர், இன்னொருத்தருக்கு பிரஷர்னு சொல்றாங்க. ஸ்வீட்டும் நிறைய பண்ண முடியாது. காரமும் குறைச்சுதான் பண்ணனும். பெஸ்ட் பாரம்பரியத்தை விடாமல், ஒரு பட்சணம் மட்டும் வீட்டில் பண்ணி விட்டு, தேவையானதை தேவையான அளவு கடையில் வாங்கி, பண்டிகையை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டாடுவதே சிறந்தது.
– என்.கோமதி, நெல்லை.

1 COMMENT

  1. மனமிருந்தால் மார்க்கமுண்டு. வேலைக்கு சென்றாலும் கொண்டாட வேண்டும் என்று நினைத்தால் தானாகவே நேரம் கிடைக்கும். மனம் எந்த சாக்குப் போக்கும் சொல்லாது. என்னதான் கடையில் வாங்கி சாப்பிட்டாலும் வீட்டில் செய்வது போல் வராது . எங்கள் அம்மா கூறுவார் பத்து விரலால் பாடுபட்டால் ஐந்து விரலால் அள்ளித் திங்கலாம் என்று. செய்ய மனது இருந்தால் நேரம் தானாக கிடைக்கும்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...