0,00 INR

No products in the cart.

புதிய ஜாதி!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு
சிறுகதைப் போட்டி – 2021 பரிசுக் கதை – 4

கதை : சக்தி சோலை
ஓவியம் : ரமணன்
செருப்புத் தைக்கும் இடத்தில் வழக்கமானவருக்குப் பதிலாக வேறொருவர் உட்கார்ந்து அருகிலிருந்த பூக்காரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், நடேசனுக்கு அவரை இதுவரை அந்த இடத்தில் பார்த்த ஞாபகமில்லை. ஒருவேளை செருப்புத் தைப்பவரின் உறவுக்காரராக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.
அவன் சில நாட்களாகவே செருப்புத் தைப்பவரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆனால், அவர் வழக்கமாக உட்கார்ந்து செருப்புத் தைக்கும் இடத்தில் பிய்ந்த செருப்புகளும் அதன் உப பொருட்களுமாய் சிதறிக் கிடந்தனவே தவிர, அவரைக் காண முடியவில்லை. ஒருமுறை செருப்புத் தைப்பவர் பற்றி பூக்காரம்மாவிடம் விசாரித்தபோது, “அந்தக் கொடுமைய ஏன் தம்பி கேட்குறீங்க? அவரோட மகனுக்கு கொரோனா பாதிப்பிருக்குன்னு ஆஸ்பத்ரியில சேர்த்துருக்கு. அதனால இவரையும் அவரோட மனைவியையும் வீட்டிலயே தனிமைப்படுத்தியிருக்காங்க. வெளியில எங்கயும் போகக் கூடாதுன்னும் சொல்லிட்டாங்களாம். பாவம் வருமானமில்லாம எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ…” வேதனையுடன் தகவலைப் பகிர்ந்து கொண்டாள்.

சக்தி சோலை

நடேசனுக்கு அய்யோ பாவமே என்றிருந்தது. இப்பொழுதெல்லாம் யாரைப் பற்றியும் விசாரிக்கவே பயமாக இருந்தது. அப்படி விசாரித்தாலே ஒன்று கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அல்லது கொரோனாவினால் இறந்துபோனதாகச் சொல்கிறார்கள். கடவுள், இயற்கை, விதி எல்லாவற்றின் மீதும் கடுமையான கோபம் கிளர்ந்தது நடேசனுக்கு.
செருப்புத் தைப்பவருடன் நடேசனுக்கு கொஞ்சம் பரிச்சயம் இருந்தது. அவர் செய்த வேலைக்கு மிகச் சரியான கூலியை வாங்கிக்கொள்வார். பேரம் எல்லாம் பேச மாட்டார். பேரம் பேசுகிறவர்களையும் அவருக்குப் பிடிக்காது.
ஒருமுறை அவன் வாங்கியிருந்த புத்தம் புதிய செருப்பு பெருவிரலுக்கான பிடிமானத்திற்கு வைத்திருக்கும் பகுதியில் அறுந்துவிட்டது. செருப்பை வாங்கியே பத்து நாட்கள்தான் ஆகி இருந்தது. செருப்புத் தைப்பவரிடம் கொடுத்து தைக்கச் சொன்னதும், “என்ன ஸார் புதூ செருப்பு போலருக்கு. அதுக்குள்ள அறுந்து போயிடுச்சா…?” என்று அவனிடம் கேட்டவர், “இப்பவெல்லாம் எல்லோருக்கும் அவசரம்தான். செய்ற வேலையை திருத்தமாக் கூடச் செய்யாமல் உடனேயே காசு பார்க்கிற அவசரத்தில் அரையும் குறையுமா தச்சு விற்பனைக்குக் கொண்டு வந்துடுறாங்க” என்று தனக்குள் புலம்பியபடி, “இது தைக்கத் தைக்க அறுந்துக்கிட்டேதான் இருக்கும். இப்படியே மேலோட்டமா தைச்சுக் குடுத்தா தையல் நூல் வேற அசிங்கமாத் தெரியும். முப்பது ரூபாய் குடுங்க ஸார்… செருப்போட மேல் பகுதியை முழுக்கப் பிரிச்சு தையலே வெளிய தெரியாமல் சரி பண்ணித் தர்றேன்…” என்றார்.
“ஏங்க பத்து ரூபாய் வேலைக்கு முப்பது ரூபாய் கேட்குறீங்க…?”
“அதான் சொன்னனே ஸார்; பத்து ரூபாய்க்கு தைச்சுக் குடுத்தா தைச்ச நூல் மேல தெரியும். அதுமட்டுமில்லாம, இந்த செருப்பு இன்னும் முழுசா வேலை முடிக்கிறதுக்கு முன்னாலயே வியாபாரத்துக்கு வந்துருச்சு. அதனால இப்ப ஒரு இடத்துல தைச்சுப் போட்டுக்கிட்டுப் போனீங்கன்னா ஒரு வாரம், பத்து நாள்ல வேறொரு இடத்துலயும் அறுந்துக்கிட்டு நிக்கும். உங்களுக்கு அதுவே போதுமுன்னா சொல்லுங்க… எனக்கொன்னும் இல்ல. அறுந்த பகுதியை மட்டும் தைச்சுக் குடுக்கிறேன்…”
சில நிமிஷங்கள் யோசித்தான் நடேசன். அவர் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் பட்டது. வாங்கி பத்தே நாளில் ஒரு செருப்பு அறுந்துபோகிறதென்றால் அது முழுமை பெறாமலேயே வந்துருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.
“இருபது ரூபாய் குடுக்கிறேன். மொத்தத்தையும் பிரிச்சே தச்சுக் குடுப்பா…”
“இந்த செருப்பை ஷோரூம்ல முந்நூறு ரூபாய்க்கு மேல பணம் குடுத்து வாங்கி இருப்பீங்க. ஒத்த வார்த்தை பேரம் பேசி இருக்க மாட்டீங்க. ஆனா, ஒரு தொழிலாளி நியாயமான கூலியைக் கேட்டா, பேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க. பரவாயில்ல… நீங்க ரொம்ப நாளா என்கிட்டதான் செருப்புகளைத் தச்சுக்கிட்டு இருக்கீங்க. அதனால உங்களுக்குக் கண்டிப்பா நியாயம், அநியாயங்கள் புரியும். இங்கயே உட்கார்ந்து செய்ற வேலையைப் பாருங்க. வேலை முடிஞ்சதும் உங்க செருப்பு எப்படி புத்தம் புதுசா பழைய மாதிரியே ஆகுதுன்னு பாருங்க. வேலையோட தரம் பார்த்து நான் கேட்கிற கூலி நியாயமின்னு தோணிச்சின்னா குடுங்க. உங்களுக்குத் திருப்தி இல்லைன்னா நீங்க எதுவுமே தர வேண்டாம். செருப்பைக் கால்ல மாட்டிக்கிட்டுப் போய்க்கிட்டே இருங்க…” என்றவர் நடேசனின் பதிலை எதிர்பார்க்காமல் வேலையைத் தொடங்கி விட்டார்.
செருப்பின் மேல் பகுதிக்குள் அவருடைய கையிலிருந்த கத்தியால் அங்கங்கே கீறினார். மேல் பகுதி தனியாக வந்துவிட்டது. அரை மணி நேரம் போல என்னன்னவோ செய்தார். அங்கங்கே மெல்லிய ஆணிகளை அடித்தார். நூலே வெளியே தெரியாமல் தைத்தார். மேற்பகுதியை ஏதோ பசை போன்று தடவி ஒட்டினார். அவர் சொன்னது போலவே செருப்பு புதுமெருகேறி விட்டது.
“இப்ப போட்டுக்குங்க சார்…” என்று சொல்லி நடேசனிடம் கொடுத்து அவனின் முகம் பார்த்தார். அவன் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுக்கவும், அவர் சில்லரை தேடவும், “இல்ல உங்க வேலைக்கு இதுவே கம்மிதான்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
நான்கு சாலைகள் சந்திக்கும் மூலையில் ஒரு கட்டடத்தின் சுவரை ஒட்டி நான்கு கொம்புகளை ஊன்றி மேற்புறத்தில் கோணி சாக்குகளால் கூரை அமைத்து அதற்குள்தான் செருப்புத் தைப்பவர் உட்கார்ந்து வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். ஒருமுறை நடேசன் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும்போது, “ஸார் ஒரு நிமிஷம்…” என்று அழைத்தார்.
நடேசனும் டூவீலரை அவருடைய கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு, “சொல்லுங்க…” என்றான். அவருடன் உட்கார்ந்திருந்த சிறுவனிடம், தெலுங்கு மாதிரியான ஒரு மொழியில் ஏதோ சொன்னார். சிறுவன் அவனிடமிருந்த பையிலிருந்து ஒரு சான்றிதழை எடுத்துக் கொடுத்தான். அது அவனுடைய எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ். ஐநூறுக்கு நானூற்றி ஆறு மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.
“அருமையான மார்க் வாங்கி இருக்கிறானே…!” என்று நடேசனும் பாராட்டினான்.
“இது என்னோட பேரன் ஸார். எங்க வழியில இதுவரைக்கும் யாருமே படிக்கல. இவன்தான் முதல் தலைமுறையாப் படிக்கிறான். எல்லோரும் நல்ல மார்க் வாங்கி இருக்கான்னு சொல்றாங்க. அதான் ஸார் இவனை இதுக்கு மேல என்ன படிக்க வைக்கலாம்னு உங்கக்கிட்ட ஆலோசனை கேட்கத்தான் கூப்பிட்டேன். ஸார் என்ன அவசரமாப் போறீங்களோ, அதைக் கெடுத்திருந்தா மன்னிக்கணும்…” என்றார்.
“அதெல்லாம் பரவாயில்லை…” என்ற நடேசன், “ப்ளஸ் டூ சேர்ந்து படிக்கட்டும்; அப்புறம் இன்ஜினியரிங், மெடிக்கல்னு கிடைக்கிற கோர்ஸ் படிக்கட்டுமே…” என்றான்.
“எங்களோடது அத்தனை வசதியான குடும்பம் இல்லைங்க ஸார். இவனோட அப்பனும் ஆவடியில உட்கார்ந்து செருப்புத் தச்சுக்கிட்டுத்தான் இருக்கான். அதனால பெருசா செலவளிச்சு எல்லாம் படிக்க வைக்க முடியாது. ஒரு ரெண்டு அல்லது மூணு வருஷத்துல இவன் படிச்சு வேலைக்கு வர்ற மாதிரி படிப்பு ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க ஸார்…”
“அப்படின்னா ஐ.டி. படிக்க வைக்கலாம்…” என்று சொன்ன நடேசன், “அதை விடவும் பாலிடெக்னிக் படிக்க வைச்சிங்கன்னா மூணு வருஷம் படிச்சதும் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு…” என்றான்.
“அந்தப் படிப்புக்கு நெறையா செலவாகுமா ஸார்…?”
“அரசு அல்லது அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கில சேர்த்துவிட்டா பெருசா செலவாகாது…” என்று சொன்ன நடேசன், தனியார் அமைப்புகள் படிப்பு உதவித் தொகையும் தருவதாகச் சொல்லி, அவற்றைப் பெறுகிற வழிமுறைகளையும் விளக்கினான்.
“நானே வந்து அப்ளிகேஷன் வாங்கித் தர உதவட்டுமா…” என்று கேட்டபோது,
“அய்யோ உங்க வேலையைக் கெடுத்துக்கிட்டு அப்படியெல்லாம் வர வேண்டாம் ஸார். வழி காட்டுனீங்கன்னா போதும். நாங்களே முட்டி மோதி ஜெயிச்சுட்டு வந்துடுவோம்…” அத்தனை நம்பிக்கையாய் சொன்னார்.
அவருடைய பேரனுக்கு முருகப்பா பாலிடெக்னிக்கிலேயே படிக்க இடம் கிடைத்தது. தற்பொழுது மூன்றாவது வருஷம் படித்துக்கொண்டிருப்பான் என்று நடேசனுக்குத் தோன்றியது. அதற்குள் கொரோனா வந்து பலரின் வாழ்வை சூறையாடியதைப் போல் செருப்புத் தைப்பவரின் வாழ்வையும் சூறையாடிவிட்டது என்பதை நினைக்கும்போது நடேசனுக்குத் துக்கமாக இருந்தது.
அவருடைய வீடு எங்கிருக்கிறது என்பதைக்கூட நடேசன் அறிந்து வைத்துக் கொண்டிருக்கவில்லை. தெரிந்தால், போய் ஏதாவது உதவி செய்துவிட்டு வரலாம்.
அதுபற்றி பூக்காரம்மாவிடம் விசாரித்தபோது, “இங்க வேலை செய்ற இடத்துல பழகிக்கிட்டதுதான். ஆவடி தாண்டி கோவர்த்தனகிரியிலயோ எங்கயோ வீடு இருக்கிறதா சொன்ன மாதிரி ஞாபகம். பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து எவ்வளவு காலம் வேலை செய்றோம். ஆனால், அவரு வீடு எங்க இருக்குன்னு கூடத் தெரிஞ்சுக்கல. அதுதான் பட்டணத்து வாழ்க்கை போலருக்கு…” என்றார் பூக்காரம்மாவும் சிரித்தபடி.
இன்று செருப்புத் தைக்கும் இடத்தில் புதியவர் ஒருவரைப் பார்க்கவும், நடேசனுக்கு சந்தோஷமாக இருந்தது. பைக்கில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் சேதமடைந்திருந்த செருப்பை எடுத்து அவரிடம் கொடுக்கவும், அவர் நடேசனை முறைத்தபடி, “என்ன…?” என்றார்.
”என்ன ஸார் கேள்வி இது? பிஞ்ச செருப்பை எதுக்குக் கொடுப்பாங்க. தச்சுக் குடுங்க ஸார்…” என்றான் நடேசனும் சிரித்தபடி. அவன் அவருடைய பார்வையில் இருந்த கோபத்தை கவனிக்கவில்லை; அல்லது பொருட்படுத்தவில்லை. “என்னைப் பார்த்தா செருப்புத் தைக்கிறவன் மாதிரி தெரியுதா…?” என்றார் ஆங்காரமாய்.
“இதென்னங்க கேள்வி? செருப்புத் தைக்கிறவங்களுக்குன்னு தனி முகஜாடை இருக்கா என்ன? பொதுவா, இந்த இடத்துல செருப்பு தைக்கிறவர்தான் உட்கார்ந்து தொழில் பண்ணிக் கொண்டிருப்பார்…”
“ உன்னைப் பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்குற! இன்னின்ன ஜாதிக்காரங்க இன்னின்ன வேலை செய்யணும்னு ஒரு கணக்கு இருக்கு. என்னைப் போயி எப்படி நீயி செருப்புத் தைக்கிறவன்னு நெனைக்கலாம்…?”
“ஏங்க பட்டணத்துல அந்தக் கணக்கெல்லாம் இல்லைங்க. எல்லா ஜாதிகளும் எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கிட்டாங்க…”
“நான் யாரு தெரியுமில்ல; எங்களோடது ஆண்ட பரம்பரையில வருகிற ஜாதி. என்னைப் போயி ஒரு தராதாரம் இல்லாம செருப்பு தைக்கச் சொல்லிக் குடுத்து அவமானப்படுத்துற…!” என்று கோபமாய் அவர் எழவும், எங்கே அடித்து விடுவாரோ என்ற பயத்தில் நடேசன் அங்கிருந்து வேகமாய் பைக்கைக் கிளப்பிப் போய்விட்டான்.
கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் நடேசன் அந்த இடத்தைக் கடக்க முற்பட்டபோது, பூக்காரம்மா மட்டும் இருந்தார். “யாருங்க அவரு? இவ்வளவு கோபப்படுறாரே! பெரிய உத்தியோகம் எதுலயும் இருக்கிறாப்புலயா…” என்றான் நடேசன்.
“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா; ஆண்ட ஜாதி, பேண்ட ஜாதின்னு பெருமை பேசிக்கிட்டு எந்த வேலைக்கும் போகாம வீட்டுப் பொம்பளைங்கள வேலைக்கு அனுப்பி, அதுல உட்கார்ந்து சாப்புடுற ஜாதி அவரு; என் புருஷன்தான்…” என்றார் பூக்காரம்மா விரக்தியுடன்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அனுபவம் புதுமை… பெருமை… கொடுமை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! படங்கள்: பிள்ளை பாராட்டு பெற்ற பாதுஷா; சொதப்பி சமாளித்த அதிரசம்! எங்கள் தலை தீபாவளிக்கு அகமதாபாத்தில் இருந்த என் கணவருடைய மாமா வீட்டுக்குத் தான் சென்றோம். 'தீபாவளியா இருக்கே, ஸ்வீட் ஏதாவது பண்ணு. மாமாவுக்கும்...

பட்சணத் திருவிழா!

கட்டுரை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் தீபாவளியன்று பட்சணம் செய்வதே ஒரு இனிமையான அனுபவமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே பட்சண வாசம் காற்றில் கலந்து மணத்தைப் பரப்பும். வீடு...

தித்திக்கும் தீபாவளி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! டபுள் பீன்ஸ் பெரிய காராமணி தேன்குழல் தேவையானவை : டபுள் பீன்ஸ், பெரிய காராமணி - தலா 100 கிராம், அரிசி - 500 கிராம், மிளகாய்த்தூள், வெள்ளை எள் - தலா...

தீபாவளி தகவல்கள்… தெரிந்து கொள்வோம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! தீபாவளி தகவல்கள்... தெரிந்து கொள்வோம்! தீபாவளியன்று காசி கங்கையில் நீராடி, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணியை தரிசிப்பது புண்ணியம் தரும். 64 ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரையில் உள்ளன. அவற்றுள் ஆதிகங்கை என்ற...

வீட்டு பட்சணம் போயே போச்சு! கடை பட்சண காலம் வந்தாச்சு!

1
பட்சணக் கருத்தரங்கு வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ஓவியங்கள்: பிரபுராம் நாங்கள் சிறு வயதினராக இருந்தபோது, தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். என் அம்மா நான்கு நாட்களுக்கு முன்னமே, 'மிக்ஸர்' பண்ண ஆரம்பித்து விடுவார்கள். ஓமப் பொடி, காராபூந்தி, காராசேவு, வேர்க்கடலை,...