0,00 INR

No products in the cart.

பண்டிகையும் பாரம்பர்யமும்

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
-ராதா நரசிம்மன்

ங்க வீட்டில் என் மாமியாரின் மாமியார், என் மாமியார், பிறகு நாங்கள், இன்று எங்க குடும்பத்து மருமகள்கள் பூஜித்த, பூஜிக்கும் மண்ணாலான எழுபது வருட கௌரி அம்மன் முகம் உள்ளது. அந்த கௌரியைதான் வீட்டின் மருமகள்கள் நாங்கள் பூஜிக்கிறோம். கூடவே எங்கள் வெள்ளி கௌரி முகங்களையும் பூஜையில் வைப்போம். எங்கள் மாமனாரின் மூதாதையர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மைசூரில் வாழ்ந்ததால் அங்கு கன்னடர்கள் செய்யும் கௌரி பூஜையை தாங்களும் செய்து பின்பற்றி, அதைப் பாரம்பர்ய விரத பூஜையாக  மாற்றிவிட்டனர். அது இன்று வரை தொடர்கிறது

எங்கள் வீட்டில் நூறு வருட பாரம்பரியமிக்க பெரிய வெண்கலப் பானை உள்ளது. மாமியாரின் மாமியார் அவரின் பாட்டியின் பிறந்த வீட்டில் கொடுத்ததாம், பெண் வாக்கப்பட்டு போகும் இடம்பெரிய கூட்டுக் குடும்பம் என ஜீபூம்பா வெங்கலப் பானை வாங்கி கொடுத்தார்களாம் அவர் பெற்றோர். ஒரு ஆள் அதை தூக்க முடியாது. விரகடுப்பில்தான் அதை வைத்து சமைக்கனும். குக்கரில்லா காலம். அதில்  ஒரு தரம் மூன்று கிலோ அரிசி சமைக்கலாம். அதனுடன் பெரிய கல் சட்டியும், பெரிய்ய்ய ஈயச் சொம்பும் உள்ளது. இருபது பேர்களுக்கு அதில் ரசம் வைக்கலாம்.  வீட்டில் விசேஷமோ அல்லது குடும்பத்தார் ஒன்று கூடும் பாட்டி தாத்தாவின்  திவச சமையல்களுக்கோ, இவை இரண்டும்தான் உபயோகப் படுத்தினார்கள் என் மாமியார் காலத்தில்….இப்போ பரணில் கொர்’ கொர்’!தான்..

பொங்கல் பண்டிகை அன்று பலகாய்கறிகள்  போட்டு கூட்டு செய்வதுதானே வழக்கம். ஆனால், என் வீட்டில் அதே காய்கறிகளைப் போட்டு அவியல்தான் செய்வோம். ஏனெனில் பொங்கலுக்கு ஒரு பத்து நாள் முன்புதான் திருவாதிரை வந்திருக்கும் திருவாதிரை களியும் பதினாறு விதமான காய்கள் போட்டு புளிக் கூட்டும் செய்து சாப்பிட்டிருப்போம். அதனால், பொங்கலுக்கு அவியல் பாரம்பரியம் ஆயிற்று. என் ஸ்வீட்டி மாமியார் ஏற்படுத்தியப் பாரம்பர்ய சமையல்  இன்று வரை பொங்கலன்று அவியலாகத் தொடர்கிறது எங்கள் குடும்பங்களில்.

எங்கள் வீட்டுக்கு யார் விருந்தினராக வந்தாலும் சாப்பாடு போட்டு தாம்பூலத்தில் புடைவை  ரவிக்கை வைத்துக் கொடுக்கும் பழக்கம் இன்று வரை பாரம்பரியமாகத் தொடர்கிறது. பெண்களுக்கு மட்டும் புடவை ரவிக்கை கொடுக்காது, கூட வரும் ஆண்களுக்கும் வேஷ்டியும், ஷர்ட்டும் கொடுப்போம். அல்லது வேஷ்டியும், டவலும்,  தேங்காயுடன்  வைத்துக்கொடுப்போம். இதுவும் எங்கள் வீட்டு பாரம்பரியம்தான்.

குலத்தெய்வ வழிபாடு பாரம்பரியமாகத் தொடர்கிறது. வருடா வருடம் குலத்தெய்வக் கோயிலுக்கு குடும்பமாக, அண்ணன், தம்பி குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து சென்று வழிபடுவோம்.

ங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகளுக்குக் கோயிலில் மொட்டை போடும் பழக்கம் இருந்ததில்லை. என் பெண்ணுக்கு இரண்டு வயதில் உடம்பு சரியில்லாமல் இருந்தபொழுது திருப்பதியில் குழந்தைக்கு முடி காணிக்கை கொடுப்பதாக மாமியார் வேண்டிக்கொண்டதும் உடம்பு சரியானது. அன்று முதல் எங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு முதல் மொட்டை திருப்பதியும், இரண்டாவது மொட்டை சமயபுரம் எனும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார் என் மாமியார். அது பாரம்பரியமாகவே இன்றுவரை தொடர்கிறது.

மகன் அல்லது மகளுக்குத் திருமணத்திற்கு நாள் குறித்தவுடன்,  திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு வீட்டில் சுமங்கலி பிரார்த்தனை பாரம் பரியமான முறையில் செய்வோம். எல்லோர் வீட்டிலும் ஒரு ஒன்பது கஜம் புடவை வாங்கி சுவாமியிடம் வைத்து பூஜித்து அதை வீட்டுப் பெண் களுக்குக் கொடுப்போம், எனக்கு இரண்டு நாத்தனார்கள் இருந்ததால், என் மாமியார்  இரண்டு ஒன்பது கஜ புடவை வாங்கி சுவாமி முன்வைத்து பூஜை செய்து, இரு பெண்களுக்கும் கொடுக்க இன்று வரை எங்கள் குடும்பத்தில் இரண்டு ஒன்பது கெஜம் பாரம்பரியமாகியது.

சில நல்ல பழக்கங்கள், வழக்கமானதால், அதை பாரம்பர்யம் எனச் சொல்லிக் கொடுத்து, கடைப்பிடித்து, அதில் காலத்திற்கேற்றால்போல் சிறு மாற்றமும் செய்து விட்டார் மாமியார். அதனால் மாமியாரின் பாரம்பர்யம் தான் சந்தோஷமாக இன்று வரை தொடர்கிறது.

———————————————————————–

அன்பு வாசகீஸ்,
பண்டிகைகள் வரிசைக் கட்டத் தொடங்கிவிட்டன. ‘பண்டிகைகளும் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் நீங்களும் சுவாரஸ்ய தகவல்களுடன் கூடிய சிறு கட்டுரைகளை (100 வார்த்தைகள்) [email protected] மின்னஞ்சலுக்குத் தட்டி விடலாமே! வரவேற்போம் பண்டிகைகளை!
-ஆசிரியர்

———————————————————————–

வாழைக்கன்று கிடைக்குமா?

வாழைக்கன்று கிடைக்குமா? மாவிலை கிடைக்குமா? வாசனை மலர்கள் கிடைக்குமா?

கிடைக்குமா? கிடைக்குமா? கேள்விகளெல்லாம் ஸ்ரீவரலெக்ஷ்மி அம்மன் நோன்பு பண்டிகைக்காக பத்து நாட்கள் முன்பே இந்தோனேஷியா சென்றிருந்த சமயம் என் மனதில் எழுந்தவைகள்.

மருமகளிடம் கேட்கையில், “எது கிடைக்குமெனத் தெரியாது. இருப்பதை, கிடைத்ததை வைத்து பூஜை பண்ணிவிடலாம்!” என்றாள்.

வரலெட்சுமி அம்மன் என்ன எண்ணியிருக்கிறாளோ? அதுபடிதான் நடக்குமென உள் மனதிற்கு தெரிந்திருந்தாலும், குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்க வழி செய்ய அம்மனை மனதார வேண்டிக்கொண்டேன்.

மகனும், மருமகளும் அந்த இடத்திற்குப் புதிதாகையால், இத்தகைய பொருட்கள் கிடைக்கும் விபரங்கள் சரியாக அறியாத நிலைமை. அடிக்கடி இது குறித்து அவர்களிடம் கேட்க முடியவில்லை.

சில தினங்கள் சென்றபின், அங்கிருக்கும் இந்துக் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்றான். கோயிலினுள் கணபதி, முருகர், வெங்கடாசலபதி, ஐயப்பர், நவக்கிரஹங்கள் ஆகியவைகள் அம்சமாக வீற்றிருக்க, வழிபட்டேன். அங்கே தமிழர்கள் சிலர் பூஜை செய்வதும், பெண்கள் பூக்கட்டுவதும், ஓடியாடி உதவி பண்ணுவதுமாக இருந்தனர்.

தனக்குத் தெரிந்த 4 – 5 நபர்களிடம் மகன் என்னை அறிமுகப்படுத்தினான். தமிழ் பேசுபவர்களைக் கண்டால் பேசாமல் இருக்க முடியுமா? அவர்கள் இந்தியாவிலிருந்து, அதிலும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர் களாதலால் தமிழ் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் குறித்துத் தெரிந்திருந்தது. கலகலவெனப் பேசினார்கள்.

பல வருட காலமாக இந்தோனேஷியாவில் வசித்துவரும் ராஜி வெங்கட் மாமி; மறைந்த ஓவியர் சில்பியின் பேத்தி அகிலா ஈஸ்வர், ரேவதி ஜெயராமன், சுஜயா, கற்பகம், இந்தியா க்ளப் பிரசிடெண்ட் சாந்தி ஆகியோர் வார இறுதியில் கூடும் இடம் இக்கோயில்தான். அவரவர் வீடுகளில் பிரசாதங்களைத் தயாரித்து, கோயிலுக்கு கொண்டு வந்து, பூஜை முடிந்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்டிய பிறகு, அனைவருக்கும் அவற்றை அழகாக தட்டுக்களில் வைத்து விநியோகிக்கிறார்கள்.

சிலரின் மொபைல் எண்களைப் பெற்றுக்கொண்டு மருமகள் நம்பரைக் கொடுக்கையில், “வரலெட்சுமி பூஜைக்கு ஏதாவது தேவைப்பட்டால் சொல்லுங்கள்!” என்றார் ராஜி மாமி. அப்பாடா! மனதிற்கு நிறைவாக இருந்தது.

வீடு திரும்பியதும், மருமகளிடம் விஷயங்களைக் கூறி, அவர்களது மொபைல் எண்களைக் கொடுத்தேன்.

நோன்பிற்கு இரண்டு நாட்கள் இருக்கையில், ராஜி மாமியை பூஜைக்கு வருமாறு போனில் அழைத்தசமயம், வாழைக்கன்று – மாவிலை பற்றி மருமகள் எதேச்சையாகக் கூற,

“அப்படியா? பூஜைக்கு வருகிறேன். வீட்டு அட்ரஸை மெசேஜ் பண்ணுங்கள்!” என்றார்.

வரலெட்சுமிக்கு, வாழைக்கன்று – மாவிலை வருமா? வராதா? அந்த மாமி ஒன்றுமே கூறவில்லையே, இரவெல்லாம் மனது இதுபற்றியே அசை போட, தூக்கம் விலகியது.

மறுநாள் மதியம் அம்மனை அலங்கரிக்க முற்படுகையில், ஸர்ப்ரைஸாக ராஜி மாமி வீட்டுக் கார் ஓட்டுநர் வாழைக்கன்று, மாவிலைகளுடன் வாசனை மலர்களையும் கொண்டு வந்து கொடுக்க, மகிழ்வாக இருந்தது. அம்மனுக்கு மனதார நன்றி தெரிவித்தேன்.

அப்புறமென்ன? வாயிலில் மாக்கோலம், மாவிலைத் தோரணம். வரவேற்பு அறை கோலத்தின் மீது பட்டுத் துணியால் போர்த்தப்பட்ட டீப்பாயின் மேல் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் வைக்கப்பட்ட கலசம், நான்கு புறங்களிலும் ஜம்மென நின்றன வாழைக்கன்றுகள்.

பூஜை நாளன்று, மருமகளும், நானும் மற்ற வேலைகளைக் கவனிக்க, பிரசாதத்திற்கான கொழுக்கட்டைகளை அருமையாக என் மகன் செய்து கொடுத்தான்.

ராஜி மாமி அனுப்பிய வாசனை பூக்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய கமகமவென மணம் வீசியது. மனத் திருப்தியுடன், பூஜை நிறைவாக நடந்தேறியது.  ‘ஓம் ஸ்ரீவரலெக்ஷ்மி நம: ஓம்!’

– ஆர். மீனலதா, மும்பை

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...