மனித உயிர் காத்த மகத்தான பணி: காவல்துறை பெண் ஆய்வாளருக்கு முதல்வர் பாராட்டு!

மனித உயிர் காத்த மகத்தான பணி: காவல்துறை பெண் ஆய்வாளருக்கு முதல்வர் பாராட்டு!

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் நேற்று முன்தினம் (நவம்பர் 10) உயிருக்குப் போராடிக் கிடந்த இளைஞர் ஒருவரை சென்னை டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.

இந்நிலையில், காவல்துறை பெண்ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் மு..ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல, பருவமழைக் காலத்துப் பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் மனிதாபிமான செயல்பாடு, தங்களைப் போன்ற மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையிலும், மழைக்காலப் பேரிடர் நேரத்தில் தொடர்ச்சியாகப் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தவன் என்ற முறையிலும் தங்களின் மனிதாபிமானமிக்க உயிர்க் காப்புப் பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பாராட்டுச் சான்றிதழில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com