மனோரமா ஆச்சிக்காக எழுதப்பட்ட நாடகம் இது

மனோரமா ஆச்சிக்காக எழுதப்பட்ட நாடகம் இது
Published on

என் வீடு – என் கணவன் – என் குழந்தை

– பிரியா

எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவின் நாடகப் பள்ளியில் பயின்று, அவர்களுடன் பத்து ஆண்டுகள் பயணித்த கோமல் சுவாமிநாதன்,  1971இல் சில நாடகக் கலைஞர்களுடன் இணைந்து 'ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ்' என்னும் நாடகக் குழுவைத் தொடங்கினார்.

கோமல், 33 நாடகங்களை எழுதி, இயக்கி, அவற்றில் 27 நாடகங்களைத் தனது சொந்த குழுவில் அரங்கேற்றினார். பற்பல நகைச்சுவை நாடகங்களை, பலப்பல குடும்ப நாடகங்களை… சமூகப் பிரச்னைகளை, மையமாக வைத்து எழுதப்பட்ட பல நாடகங்களை மேடையேற்றி வெற்றி கண்ட 'ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ்' குழு இந்த ஆண்டு 2021ல் பொன்விழா காண்கிறது.

ஆரம்பக் காலங்களில் நகைச்சுவை நாடகங்களையும், குடும்ப நாடகங்களையும் மேடையேற்றிய  கோமல், பின்னாட்களில் சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

அப்படிப்பட்ட நாடகங்களில் ஒன்றுதான், 80களில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாடகத் துறையில் ஒரு மைல் கல்லாக விளங்கிய 'தண்ணீர் தண்ணீர்' நாடகம்.

அவரது பல நாடகங்கள் சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகளுக்கான சாமானியர்களின் அவலம், போராட்டம் அகியவற்றைக் கையாள்கின்றன.

1980இல் எழுதப்பட்ட 'தண்ணீர் தண்ணீர்' நாடகம் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

ஒரு முறை கோமலிடம் மனோரமா ஆச்சி,   'தனக்கு மடிசார் கட்டிக் கொண்டு ஒரு பிராமணக் குடும்பத் தலைவியாக மேடையில் நடிக்க வேண்டும்' என்ற தன் ஆவலை வெளியிட்டு, அதற்கான ஒரு நாடகத்தை எழுதித் தருமாறு கேட்க, அப்போது உருவானது தான் 'என் வீடு என் குழந்தை என் குடும்பம்" நாடகம்.

இந்தியா முழுவதும் 300 முறைகளுக்கு மேல் மேடையேறிய இந்நாடகம்  ரசிகர்கள் மனதை வெகுவாகக் கொள்ளைக்கொண்டது.

கோமல், நாடகங்களின் மேல் கொண்டிருந்த தீராப்பற்று அவருடன் முடிந்து போய் விடவில்லை. அவரது மகள் தாரிணி மூலம் இது ஒரு புதிய வடிவத்தை எடுத்தது. தாரிணி கோமல், 'ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ்' குழுவைப் புதுப்பித்து, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் நாடகமாக 'தண்ணீர் தண்ணீர்' ஐ மீண்டும் அரங்கேற்றினார்.

இந்த நாடக ஆளுமைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாரிணி கோமல், 'கோமல் தியேட்டர்' என்ற புதிய நாடகக் குழுவை நிறுவினார். பல நல்ல நாடகங்களை மேடைக்கு காணிக்கையாக்குவது மட்டுமல்லாமல், சில நல்ல இலக்கியங்களையும் நாடகம் மூலமாக இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்வதுதான் கோமல் தியேட்டரின் நோக்கம்.

கோமல் தியேட்டர், முத்திரை பதித்த சில தமிழ் எழுத்தாளுமைகளின் சில நல்ல சிறுகதைகளை நாடகமாக மேடையேற்றியுள்ளது.

இப்போது கோமலின் ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ் குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோமலின் பல கிளாசிக் நாடகங்களை மேடையேற்ற கோமல் தியேட்டர் தயாராக உள்ளது. முதல் நாடகமாக 'என் வீடு என் கணவன் என் குழந்தை' அக்டோபர் ஒன்றாம் தேதி அரங்கேறியது.

ஏற்கெனவே அமோக வெற்றி பெற்ற கிளாசிக் நாடகங்களை மேடையேற்றுவது என்பது மிகுந்த சவாலான விஷயம். அன்று நாடகத்தை கண்டுகளித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய வேண்டும். அந்த நாடித் துடிப்பு நீர்த்துப் போகாமல் கொண்டு சேர்க்க வேண்டும். அதையெல்லாம் மீறி இந்த நாடகத்தில் 'மனோரமா ஆச்சியும், கைத்தேர்ந்த பல நடிகர்களும் அநாயாசமாக நடித்துச் சென்ற  பாத்திரங்களை இன்றைய மேடை நடிகர்கள் செய்ய வேண்டும்' என்பது நடிகர்களுக்கு மிகப்பெரிய சவால். மனோரமா அவர்கள் செய்த பாத்திரத்தை ஏற்று நடிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள திறமையான நடிகை லாவண்யா வேணுகோபால், கடந்த மூன்று மாதங்களாக அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். மற்ற மேடை அனுபவமிக்க பல நடிகர்களும் இந்த சவாலில் உழைத்தவர்கள்.

முதல் இரண்டு மாதங்கள் தொலைபேசியிலும் வீடியோ கால்களிலும் வசன ஒத்திகை நடந்தப் பிறகு, அடுத்த பதினைந்து நாட்கள் பாதுகாப்பாக நேரடி ஒத்திகைகள் நடைபெற்றது.

இந்த நாடகத்தை இயக்கி, தயாரிக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்றிருந்தார்  தாரிணி கோமல்.

அக்டோபர் முதல் தேதி நாடகம் அரங்கேற்றப்பட்டு அடுத்த இரண்டு நாட்களும் தொடர்ந்து மேடையேற்றப்பட்டது.

இரண்டாம் நாள் ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இக்குழுவில் 1971 முதல் நடித்த பல முதுபெரும் நாடக நடிகர்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்கள்.  90வது அகவையைத் தொடும் பழம் பெரும் நடிகர் கம்பர் ஜெயராமன் அவர்கள் மேடைக்கு வந்தபோது ரசிகர்களின் கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆனது.

தொடர்ந்து கோமலின் பல கிளாசிக் நாடகங்களை மேடையேற்ற இருக்கிறது கோமல் தியேட்டர் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com