மறைந்தும் மறையாத மகா படைப்பாளி நினைவு தினம்!

மறைந்தும் மறையாத மகா படைப்பாளி நினைவு தினம்!

எம்.கோதண்டபாணி

விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், தலைசிறந்த சரித்திரம் மற்றும் சமூக நாவலாசிரியர், பத்திரிக்கையாளர் என பண்முகம் கொண்ட மனித நேயர் அமரர் திரு.கல்கி அவர்கள். மகாத்மா காந்தியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்த தேசியவாதியும் கூட இவர். திரு.வி.. அவர்களின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அவரது பெயரான கல்யாணசுந்தரம் எனும் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களையும் தமது பெயரான கிருஷ்ணமூர்த்தி எனும் பெயரின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து, தனது பெயரை,
'
கல்கி' எனும் புனைப்பெயராகக் கொண்டு, தமிழ் எழுத்துலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர்.

தமிழர்தம் வரலாறு மீது இவர் கொண்டிருந்த அளப்பரிய ஆர்வத்துக்கு உதாரணங்களாகத் திகழ்ந்தன இவரது நாவல்களும் கட்டுரைகளும். தம்மை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்ளும் இவர், ஆரம்ப காலத்தில் தமது கட்டுரைகள் சிலவற்றை, 'விவசாயி' எனும் பெயரிலேயே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வனின் காதலி, தியாக பூமி, சிவகாமியின் சபதம், அலையோசை, பார்த்திபன் கனவு மற்றும் பெரும்புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் போன்ற பிரபல நாவல்களை எழுதிய இவர், 'மீரா' திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், 'காற்றினிலே வரும் கீதம்' உள்ளிட்ட பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத விஷயம்.

அவரது கதைகள் மற்றும் நாவல்களின் தாக்கத்தை இன்றைக்கும் பல திரைப்படங்களில் காண முடிகிறது. அவரின் நாவல்கள் மற்றும் கதைகளில் இடம்பெற்ற கதா பாத்திரங்களின் பெயர்கள் பலவும் கூட திரைப்படங்களாக வெளியாகி உள்ளதை அறிவோம்.

தஞ்சை மாவட்டம், புத்தமங்கலம் என்னும் ஊரில் 1899ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள், பிறந்த அவர், 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாள் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், 1956ஆம் ஆண்டு அவருடைய, 'அலை ஓசை' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது நினைவு நாள் நேற்று (டிசம்பர் 5, 2021) அனுசரிக்கப்பட்டது. மிகச்சிறந்த படைப்பாளியான அவர், இந்த பூமியை விட்டு மறைந்தாலும், அவருடைய படைப்புகள் என்றென்றும் அவரது பெயரை நினைவுப்படுத்திக் கொண்டே நம்முடன் என்றும் நிலைத்திருக்கும் என்பது நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com