2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் ஹைலைட்ஸ்!

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் ஹைலைட்ஸ்!

2023-2024 ஆம் ஆண்டுகான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட்டாகும்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

இந்த ஆண்டும் பட்ஜெட் டிஜிட்டல் முறையிலேயே தாக்கல் செய்யப்பட்டது. தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு கம்பளம் போர்த்திய பெட்டியில் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய மடிக்கணினி எடுத்துவரப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக மரியாதை நிமித்தம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

இந்த நிலையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை வருமாறு:

புதிய வரி நடைமுறைகளின்படி இனி ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படமாட்டாது. இது சென்ற ஆண்டில் ரூ.5 லட்சமாக இருந்தது. இதேபோல வருமான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு 2.5 லட்சமாக இருந்தது.

அதாவது பழைய முறைப்படி ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை ரூ.5%, ரூ.6 லட்சத்துக்கு மேல் ரூ.9 லட்சம் வரை வரி 10%, ரூ.9 லட்சத்துக்கு மேல் ரூ.12 லட்சம் வரை 15%, ரூ.12 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் 6.5 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு 16% வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போன், கேமரா லென்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி விலக்கு தொடரும்.

ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இது 9 மடங்கு அதிகமாகும்.

கர்நாடக மாநிலத்துக்கு வறட்சியை சமாளிக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் சிறப்பு நிதியாக ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்துக்கு ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கவும், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ.20 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் நலனுக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை வளர்ச்சிக்கு 2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு ஏகலைவா திட்டமும் செயல்படுத்தப்படும்.

தேசிய அளவில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

மனிதக்கழிவுகளை அகற்ற தேசிய அளவில் இயந்திரங்கள் வாங்கப்படும்.

பல்வேறு துறைகளுக்கான மூலதனம் ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் சீதாராமன் பேசுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கோவிட் தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார மந்தநிலையினால் தவித்துக் கொண்டு இருந்தபோது இந்திய பொருளதாரம் நிலையான வளர்ச்சியைப் பெற்று உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

கோவிட் தொற்றுகாலத்தில் 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பசியோடு தூங்கக்கூடாது என்பதற்காக இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

அந்தியோதனா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழை மக்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 10 இடத்திலிருந்து 5 வது இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது.

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ளதன் மூலம் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

44.6 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது.

ரூ.7,000 கோடியில் இ-கோர்ட் (இணையதள நீதிமன்றங்கள்) அமைக்கப்படும்.

போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.5 சதவீத வட்டி தரும் வகையில் பெண்களுக்கென புதிய சிறு சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்தவொரு தபால் அலுவலகத்திலும் பெண்கள் கணக்கு ஆரம்பிக்க முடியும். கூடிய விரையில் அனைத்து வங்கிகளிலும் கணக்கு ஆரம்பிக்கும் வசதியும் வர வாய்ப்புண்டு.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு.

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். 

நாடு முழுவதும் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும். 

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும். 

நாம் தனித்துவமான டிஜிட்டல் பொது கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். ஆதார், கோவின், யுபிஐ ஆகியவை இதற்கு உதாரணங்கள்.  

சவாலான காலகட்டத்தில் இந்தியா ஜி20 தலைமையை ஏற்றிருக்கிறது. உலக பொருளாதார வரிசையை மாற்றுவதற்கான வலிமையை இது இந்தியாவுக்கு வழங்கும். உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்திற்கு இணங்க, மக்களை மையப்படுத்திய திட்டங்களை கொண்டு வருவதோடு, சர்வதேச சவால்களை எதிர்கொண்டு, நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியை கட்டமைக்க வேண்டும் எனும் நோக்கோடு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மோடியின் அரசை பொருத்தவரை இது 11-வது பட்ஜெட்டாகும். 2019 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டே ஜூலை மாதம் 5 ஆம் தேதி அவர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்பு காங்கிரஸ் ஆட்சியில் மாலை ஐந்து மணிக்குத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வாஜபேயி பிரதமராக இருந்தபோது முதன் முதலாக அப்போது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா இந்த வழக்கத்தை மாற்றி காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது முதல் அந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com