நீதித்துறையின் மீது மறைமுகப் போர்!

நீதித்துறையின் மீது மறைமுகப் போர்!

அண்மைக்காலமாக மத்திய அரசு நீதித்துறை மீது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. முதலில் மத்திய சட்டத்துறை அமைச்சர், நீதித்துறையில் உயர் பதவிகளில் நியமனம் தொடர்பான (கொலீஜியம்) விவகாரத்தை கையிலெடுத்தார். இப்போது குடியரசு துணைத் தலைவர் நாடாளுமன்றத்துக்கு எதிராக நீதித்துறையின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவோ அல்லது அழிக்கவோ இந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்று 1973 ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியிருந்தது.

இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். அரசியலமைப்பை திருத்தும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யாரேனும் கேள்வி எழுப்பினால் நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்வது கடினமாகிவிடும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்-2014 சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறித்து மீண்டும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் கீழான நீதித்துறையின் செயல்பாடு சுதந்திரத்தை மீறிய செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவைத் தலைவராக இருக்கும் ஜகதீப் தன்கர், சட்டமியற்றும் அதிகாரம் உள்ள நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது. ஜனநாயகம் நிலைப்பெற வேண்டுமானால், நாடாளுமன்ற இறையாண்மையும் சுயாட்சியும் அத்தியாவசிமானது. எனவே நிர்வாகம் மற்றும் நீதித்துறையுடன் சமரசத்துக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்னர் ஜகதீப் தன்கர் ஒரு சிறந்த வழக்குரைஞராக இருந்தவர். அப்படிப்பட்டவருக்கு நாடாளுமன்றமே அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து உருவானதுதான் என்பதும் சட்டங்கள் இயற்றவும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசியலமைப்புதான் அதிகாரம் அளிக்கிறது என்பதும் தெரியால் இருக்க வாய்ப்பு இல்லை.

கொலீஜியம் முறையை மத்திய அரசு விரும்பாத காரணத்தாலேயே உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய

அரசு நிராகரிப்பதாலேயே பல நல்ல வழக்குரைஞர்கள் நீதிபதியாவதிலிருந்து பின்வாங்குகிறார்கள். கொலீஜியம்தான் சிறந்த நடைமுறை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. ஆனால், நாடாளுமன்றம் புதிய சட்டம் கொண்டுவரலாம். இதை யாரும் தடுக்கவில்லை.

நீதித்துறை மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான மோதலின் எதிரொலிதான் தன்கரின் பேச்சு. கொலீஜியம் குறித்து சட்ட அமைச்சர் அடிக்கடி விமர்சனம் செய்துவருவதும் நீதித்துறையின் மாண்பை அவர் சிறுமைப்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்து தவறானது என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குத்தான் அதிக அதிகாரம் என்று தன்கர் கூறுகிறார். ஆனால், உண்மையில் அரசியலமைப்பு சட்டம்தான் அதிக அதிகாரம் படைத்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகள் மீது யாரும் கைவைத்துவிடக்கூடாது என்பதற்காகவே அவை உருவாக்கப்பட்டன.

உதாரணமாக நாடாளுமன்ற முறைமையை குடியரசுத் தலைவர் முறைமையாக மாற்றுவதற்கு நாடாளுமன்றம் பெரும்பான்மையுடன் வாக்களித்ததாக வைத்துக் கொள்வோம் அல்லது அட்டவணை VII இல் உள்ள மாநில பட்டியலை ரத்துச் செய்து, மாநிலங்களின் பிரத்யேக சட்டமியற்றும் அதிகாரங்களைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டால் அத்தகைய திருத்தங்கள் செல்லுபடியாகுமா? என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய நீதித்துறை ஆணையம் ரத்துச் செய்யப்பட்ட பிறகு புதிய மசோதாவை அறிமுகம் செய்வதிலிருந்து யார் தடுக்கிறார்கள்? ஒரு சட்டத்தை ரத்துச் செய்வதை வைத்து அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டில் தவறு உள்ளதாக அர்த்தம் கொள்ள முடியாது என்றும் அவர் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் தான் உயர்ந்த அதிகாரம் படைத்தது என்று தன்கர் கூறுவது தவறானது. அரசியலமைப்புச் சட்டம்தான் உயர்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“1973 இல் வெளியான கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை இதுவரை யாரும் விமர்சித்ததில்லை. பா.ஜ.க.வின் அருண் ஜேட்லி கூட இந்த தீர்ப்பை ஒரு முக்கியமான தீர்ப்பாக வரவேற்றிருந்தார். இப்போது மாநிலங்களவைத் தலைவர் கூறிய கருத்துகள் தவறானது. அவரது பேச்சு நீதிமன்றத்தின் மீதான தாக்குதலாகும்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு கட்டுபாடற்ற அதிகாரங்கள் கிடையாது. நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கே உள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு விதிகளை மீறி சட்டத்திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. அதை எல்லைமீறி நீதித்துறை செயல்படுவதாக கருதமுடியாது.

தற்போதைய தேக்கநிலைக்கு தீர்வுகாண்பதில் உண்மையிலேயே அரசுக்கு அக்கறை இருக்குமானால், நீதித்துறை மீது மறைமுக போர் தொடுக்காமல், உச்சநீதிமன்றம் செயல்படுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com