கேப்டன் லட்சுமி சாகலுக்கு சிலை!

Army Training Centre
Army Training Centre

-ராஜ்மோகன் சுப்ரமண்யன்.

ந்தியா சாத்வீகமான முறையில் விடுதலைப் பெற்றாலும்  குறைவில்லா சாகசங்களும்  நிறைந்தது இந்திய விடுதலை  போராட்டம்.  மகாத்மா காந்தி அகிம்சைவழியில் போராடிய அதே நேரத்தில்  போர்முறைதான் ஒரே வழி என்று ஆயுதபோராட்டத்தில் இறங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

நேதாஜியின் இந்திய தேசிய படையில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இணைந்து பெருமை சேர்த்தனர். இவற்றில் பெருமிதமாக அங்கம் வகித்தவர் கேப்டன் லட்சுமி சாகல் என அழைக்கபெற்ற டாக்டர் லட்சுமி சுவாமிநாதன்.

பாலக்காட்டை பூர்விகமாக கொண்ட தமிழரான லட்சுமி சாகல் மருத்துவ பயிற்சியின் போது இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். குறிப்பாக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி ரெஜிமெண்ட் என்ற பெண்கள் படையை உருவாக்கி சுமார் 6000 பெண் வீரர்களுக்கு தலைமையேற்று பிரிட்டிஷாருடன் போர்புரிந்தவர்.

லட்சுமி சாகல் சிலை
லட்சுமி சாகல் சிலை

தொடர்ந்து இந்திய வரும் வழியில் பர்மா காட்டில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கொடுஞ்சிறையையும் அனுபவித்தார். பின்னர் இந்திய விடுதலைக்கு பிறகு கான்பூரில் மருத்துவ தொழில் புரிந்து, பெண்கள் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு வகையில் பாடுபட்டு பெரும் மதிப்புடன் 2012-ம் ஆண்டு கான்பூரில் தனது 97-வது வயதில் மறைந்தார்.

அவரின் சேவையை பாராட்டி இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்திய ராணுவப்பயிற்சிகளின் போது கேப்டன் லட்சுமி சாகலின் சாகசங்கள் எப்பொழுதும் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக போதிக்கப்படுவது வழக்கம்.

 கேப்டன் லட்சுமி சாகலின்  சாதனைகளை போற்றும் வகையில் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளி மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பெண்கள் வீரர்கள் தங்கும் விடுதிக்கு கேப்டன் லட்சுமி சாகலின் பெயரை சூட்டியுள்ளது.

லட்சுமி சாகல்
லட்சுமி சாகல்

1963 ல் தொடங்கப்பட்ட சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் 1992 ஆம் ஆண்டு பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி தர தொடங்கியது. பெண் அதிகாரிகளை உருவாக்குவதில்  முப்பது ஆண்டுகளை கடந்து தற்போது முத்துவிழா கொண்டாடும் பெண்கள் பயிற்சி பிரிவின் பெருமிதத்தை போற்றும் வகையிலும் , கேப்டன் லட்சுமி சாகலுக்கு மரியாதை செய்யும் வகையில் இங்கு அமைந்துள்ள பெண்கள் விடுதிக்கு லட்சுமி சாகல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் திரைப்பட இயக்குனரும் கேப்டன் லட்சுமி சாகலின் பேரனுமான சாகித் அலி சாகல் கலந்துகொண்டு கேப்டன் லட்சுமியின் சிலையை திறந்துவைத்தார்.

பயிற்சிக்கு வரும் புதிய பெண்களுக்கு கேப்டன் லட்சுமி அம்மையாரின் வீரம் ஒரு  உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும்  ராணுவ சாகச வரலாற்றில் கேப்டன் லட்சுமி அவர்களின் வீரம் என்றென்றும் போற்றபடும் என்றும் சென்னை ராணுவ பயிற்சி மையத்தின் கட்டளை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சய் சவுகான் தெரிவித்தார்.

வைரவிழா நோக்கி பயணிக்கும் சென்னை ராணுவ அதிகாரிகள்பயிற்சி மையத்திற்கு கேப்டன் லட்சுமி சாகலின் இந்த நினைவு போற்றும்  முயற்சி மேலும் பெருமிதமூட்டும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com