கல்கி அன்பர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய நீதிபதி

கல்கி அன்பர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய நீதிபதி
புகைப்படங்கள்: ஸ்ரீஹரி

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பாக, அமரர் கல்கி அவர்களின் நினைவு தினம் நிகழ்வு, 26 ஜனவரி 2023 அன்று, சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில், மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அமரர் கல்கி அவர்களின் தீபாவளி மலர் கதைகள் தொகுக்கப்பட்டு, 'அமரர் கல்கி தீபாவளி மலர் கதைகள்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் வானதி பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ் நூலை வெளியிட, ஹரிகதை வல்லுநர் திருமதி. சிந்துஜா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியினை கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் அறங்காவலரான திருமதி. சீதா ரவி தொகுத்து வழங்கினார்.

கல்கி அவர்கள் தியாக பூமி திரைப்படத்திற்காக எழுதிய 'பாரத புண்ய பூமி' பாடலை செல்வி. சக்தி முரளீதரன் இறைவணக்கப் பாடலாக பாடினார். பின்னர், மூத்த பத்திரிகையாளரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் அறங்காவலருமான சந்திரமௌலி அறிமுக உரை வழங்கினார். கல்கி அவர்கள் ஆனந்த விகடனில் உச்சத்தில் இருந்தபோதும் பதவியைத் துறந்து, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார். தீபாவளி மலர் என்ற விஷயத்திற்கு பிள்ளையார் சுழி முதன் முதலில் ஆனந்தவிகடனில் போட்டவர் கல்கி என்று நினைவு கூர்ந்தார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ் அவர்களையும், நிகழ்ச்சியில் இசை சொற்பொழிவு நிகழ்த்தவிருந்த ஹரிகதை நிபுணர் திருமதி. சிந்துஜா அவர்களையும் அறிமுகம் செய்தார். புத்தகத்தை வெளியிட்ட வானதி பதிப்பகத்தின் தலைவர் திரு. ராமநாதன் அவர்களுக்கும் புத்தகத்தைத் தொகுத்த திரு. சுப்ரபாலன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

திருமதி. சீதா ரவி அவர்கள் பேசும் போது, கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை மாணவ மாணவியரின் கல்விக்கு வருடா வருடம் அளிக்கும் உதவித் தொகையைப் பற்றிக் கூறுகையில், கடந்த வருடம் 10 லட்சம் ரூபாய், கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது என்றார். மேலும், அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் வழங்கிய லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக நன்றி கூறினார். அந்த தொகை, அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு, முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும், இனி வரும் காலங்களில் மாணவ மணிகள் இன்னும் அதிகமாகப் பயன் பெறுவர் என்றும் குறிப்பிட்டார். பின்னர், புத்தக வெளியீடு நடைபெற்றது. புத்தகத் தயாரிப்பில் பங்காற்றிய பல்வேறு நிபுணர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமையுரை வழங்கிய நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் பாரதி, திருவிக அவர்களுக்கு பின்னர் பாமரர்களுக்கு தமிழைக் கொண்டு சென்ற பெருமை கல்கி அவர்களையே சாரும் என்று கூறினார். எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் குறிப்பிட்டது போல், வீட்டிலிருந்த பெண்களை படிக்க வைத்தவர் கல்கி அவர்களே என்றார். பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கியது, சுதந்திர போராட்டத்திற்காக மூன்று முறை சிறை சென்றது, நாவல்கள், கதைகள், கட்டுரைகள், காவியங்கள் படைத்தது, பத்திரிகை நிர்வாகம் செய்தது, பேச்சுத்திறமை போன்ற கல்கி அவர்களின் பன்முகத்தன்மையை நினைவு கூர்ந்தார். கல்கி அவர்களின் படைப்புகளில் ஊடாக இருக்கும் நகைச்சுவை நடையைப் பற்றி, பல்வேறு கட்டுரைகளின் பகுதிகளை மேடைகளில் படித்துக் காட்டி, விளங்கினார். தமிழ்த்தாத்தா உவேசா அவர்களை சுயசரிதை எழுத வைத்ததும், அவர்களுக்கு தமிழ்த்தாத்தா என்ற பட்டம் கொடுத்ததும், கல்கி அவர்களே என்ற தகவலைப் பகிர்ந்துக் கொண்டார்.

கல்கி அவர்களின் முதல் கட்டுரையான 'ஏட்டிக்கு போட்டி' வாசகர்களிடையே ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினை பகிர்ந்துக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகியான கல்கி அவர்களின் நினைவு தின நிகழ்வினை, குடியரசு தினத்தில் நடத்துவதின் பொருத்தத்தை பாராட்டினார்.

கல்கியின் தீபாவளி மலர் சிறுகதைகள் புத்தகத்தில் உள்ள சில கதைகளில் தான் ரசித்த பகுதிகளைப் பகிர்ந்துக் கொண்டார். அந்தக் காலத்தில், தீபாவளியின் பட்டாசு, புதிய ஆடைகள் போல, கல்கியின் தீபாவளி மலரும் மக்களிடம் முக்கிய அங்கம் வகித்தது என்றார். 20ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தினை கல்கிக்கு முன், கல்கிக்கு பின் என்று இரண்டாக பிரிக்கும் அளவிற்கு கல்கி, தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளதை குறிப்பிட்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை கல்கியின் எழுத்துக்களை வருங்கால சந்ததியினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில், திருமதி. சிந்துஜா அவர்களின் 'நந்தனார் சரித்திரம்' என்ற இசைச் சொற்பொழிவு நடைபெற்றது. நந்தனார் அவர்களின் சரித்திரத்திற்கு சேக்கிழார், கோபால கிருஷ்ண பாரதியார் ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்து, நந்தனார் சரித்திரம் எவ்வாறு காலம் காலமாக மக்களிடம் பிரபலமாக இருந்து வந்துள்ளது என்பதை இசை மற்றும் சொற்பொழிவின் ஊடாக பகிர்ந்துக் கொண்டார். நந்தனார் எத்தகைய பக்தர் என்பதை பல்வேறு பாடல்கள் மூலமும், நந்தனார் வாழ்வின் நிகழ்ச்சிகள் மூலம் அருமையாக விளக்கினார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் நினைவு நாள் நிகழ்வு, அவரது இனிய நினைவுகளுடன், அவரது புத்தக வெளியீட்டுடன் இனிதே நடந்தேறியது.

நூல் : அமரர் கல்கி தீபாவளி மலர் கதைகள்

விலை : 450

பிரசுரம் : வானதி பதிப்பகம், சென்னை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com