பாரபட்சமற்ற விசாரணை தேவை! பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்!

பாரபட்சமற்ற விசாரணை தேவை! பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்!

லாஷேத்ரா விவகாரம் கடந்த ஃபிப்ரவரி இறுதி முதலே தமிழ்நாட்டில் பரபரப்புக் கிளப்பி வரும் நிலையில் தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலம் குற்றம் சாட்டப்பட்டவரான பேராசியர் ஹரி பத்மன் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனுக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்.

100 க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் கலாஷேத்ரா மாணவிகள் ஒருமித்த குரலில் தங்களது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து அதற்கான நியாயம் பெற போராடி வரும் நிலையில், இவ்விஷயத்தில் திடீரென நடிகை அபிராமி இவரும் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் இயக்குநர் மற்றும் ஹரிபத்மனுக்கு ஆதரவாகப் பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அபிராமி கூறியது இது தான்...

து ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டாக இருக்கிறது. 89 வருடப் பாரம்பரியம் கொண்ட நான் படித்த கல்லூரியில் இதற்கு முன்பு இப்படி ஒரு பிழை எழுந்ததில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பது கலாஷேத்ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி தானே தவிர வேறில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கே புரியவில்லை. எல்லாமே ஒருதலைப்பட்சமாகவே இருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக எப்படி முடிவெடுக்க முடியும்? குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஏன் எந்த விளக்கமும் பெறவில்லை? அவருக்கும் மனைவி இருக்கிறார், ஒரு மகள் இருக்கிறார்... எனும் போது அவர்களையும் இந்த விஷயம் பாதிக்கும் இல்லையா? ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அதை அப்போதே புகாராகப் பதிவு செய்யவேண்டும். என்றைக்கோ நடந்தது, அதைப் பற்றி அப்போது புகார் அளிக்க எனக்குப் பயமாக இருந்தது என்று சொல்ல நாம் ஒன்றும் 80 களில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அப்படி இருக்கும் போது யாரோ சில ஆசிரியைகளின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் இப்படி பாலியல் வன்முறை குற்றத்தைச் சுமத்தி ஒரு பேராசியர் மீது தவறான புகார் அளித்திருக்கக் கூடாது. இது முற்றிலும் பொறாமையின் காரணமாக சில ஆசிரியைகளின் சூழ்ச்சியால் நிகழ்ந்த விஷயம். இதில் நான் கலாஷேத்ரா இயக்குநர், ரேவதி ராமச்சந்திரன் பக்கம் நிற்கிறேன்.

மாணவிகள் இத்தகைய பாலியல் வன்முறை குற்றச் சாட்டுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுப்பி இருப்பதாகக் கூறி இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அப்போது ரேவதி மேம் பொறுப்பில் இல்லை. இப்போது எல்லா வற்றுக்குமே ரேவதி மேமைத்தான் குற்றம் கூறுகிறார்கள். அவர் வருவதற்கு முன்பே நடந்த விஷயங்களுக்கு அவரை எப்படிக் குற்றவாளியாக்க முடியும்? நல்ல விஷயங்களுக்காக போலீஸ் & ரிப்போர்ட்டர்ஸ் திரண்டு கொண்டிருந்த கலாஷேத்ரா முன்பு இப்போது இப்படி ஒரு விஷயத்துக்காக அவர்கள் திரண்டிருக்கிறார்கள் என்று எண்ணும் போது அது நினைத்துப் பார்க்க நன்றாகவே இல்லை.

- என்று அபிராமி கூறி இருக்கிறார்.

அபிராமியின் இந்தக் கருத்துக்களுக்கு  வெகுஜன ரீதியாக பலத்த கண்டனங்களே எழுந்து வரும் நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் மேலும் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன எனப் பொறுத்திருந்து காணலாம்.

கலாஷேத்ரா உள்மட்ட புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து வழக்கறிஞர் அஜிதா விலகல்...

னெனில் இந்த விவகாரத்தில் கல்லூரியின் உள்மட்ட புகார் குழுவில் இடம்பெற்றிருந்த வழக்கறிஞர் அஜிதா, சமீபத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாக அவரே தெரிவித்திருந்தார். காரணமாக அவர் கூறியது, 100 மாணவிகளுக்கும் அதிகமானோர் புகார் அளித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கல்லூரியில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது அதற்கு தார்மீகப் பொறுப்பெடுக்காமல் திடீரென கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து 12 ஆம் தேதி வரை விடுதியைப் பூட்டிய கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீது தனக்கு நம்பிக்கை குறைந்ததால் அவ்வாறு செய்ததாக அவர் கூறி இருந்தார். கிட்டத்தட்ட 95% மாணவிகள் கல்லூரி விடுதியை நம்பி இருக்கும் போது நிர்வாகம் எப்படி எந்த முன்னறிவிப்பும் இன்றி இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கலாம். மாணவிகளின் பாதுகாப்பு என்ன ஆவது? எனவே தான், நான் அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேறி மாணவிகள் பக்கம் நிற்பதாக முடிவு செய்தேன் என அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கறிஞர் அஜிதா பேசியதிலிருந்து, கலாஷேத்ராவில் மாணவிகள் மட்டுமே பாலியல் வன்முறை மற்றும் சீண்டலில் பாதிக்கப்படவில்லை. மாணவர்களும் கூட அங்குள்ள மேலும் மூன்று உதவிப் பேராசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்ற விஷயமும் பதிவாகி இருக்கிறது. அத்துடன் பாலியல் வன்முறை என்பது பிஸிக்கலா நிகழ்வது மட்டுமே இல்லை. அது பார்வையால் கூட நிகழ்த்தப்பட்டிருக்கலாம். பார்வையால் பின் தொடர்வது, கண்களால் துகிலுரிப்பது என்பார்களே இது முன்பே கலாஷேத்ரா மாணவ, மாணவியர் தங்களுக்கு ஆதரவான இணையதளப் பக்கத்தில் தெரிவித்திருந்த செய்திதான்.

இந்நிலையில் பொதுமக்கள் இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், கலாஷேத்ரா தொடங்கப்பட்ட நோக்கத்தை மக்களில் பலர் அறிவார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை கலாஷேத்ரா என்பது கலைகளைப் பயிற்றுவிக்கும் மிகச்சிறந்த கலாச்சார மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுநாள் வரையிலும் அப்படித்தான், இனிமேலும் கூட அவர்கள் அப்படியேதான் கருதுவார்கள். அதில் எந்த ஐயமும் தேவையில்லை.

ஆனால், இதில் நெருடலாக இருப்பது ஒன்றே ஒன்று... மாணவிகள் இத்தனை பேர் ஒன்றாகத் திரண்டு போராடுகிறார்களே? அதில் கொஞ்சமும் உண்மையில்லாமலா இருக்கும்? தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 4 பேரை மட்டுமே எதிர்த்து போலியாக இப்படிப் போராட வேண்டும் என்று அவர்களுக்கு என்ன விதித்திருக்கிறது? அவர்கள் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்கான நியாயங்களை எதிர்பார்க்கிறார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

பாரபட்சமற்ற விசாரணை நடக்கட்டுமே!

நிர்வாகம் அதற்கு ஒத்துழைத்தால் என்ன?

கல்லூரிச் சுவர் தாண்டி வெடித்துக் கொண்டு இந்த விவகாரம் வெளியில் பூதாகரமாக வெளிவரும் வரை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வேண்டும் என்பதே பொதுமக்களின் ஏகோபித்த கருத்து.

தொடர் போராட்டம் நடத்தி தமிழக முதல்வரும், மகளிர் ஆணையத் தலைவியும் ஒரு நம்பிக்கையான வாக்குறுதியைத் தந்த பிறகே  மாணவ, மாணவிகள் போராட்டத்தை விடுத்து அமைதியாக ஓய்ந்திருக் கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிய நடவடிக்கை.

அதை உடனே சாதிக்க முடியாது. குற்றம் நிரூபணமாக வேண்டும். அதற்கான ஆதரங்களும் சமர்பிக்கப் பட்டிருப்பதாக தகவல்.  இனி இதில் இன்னும் விசாரணை மிச்சமிருக்கிறது.

ஹரிபத்மனும் மற்றுமுள்ள மூவரும் விசாரிக்கப்பட வேண்டும்.

அதற்குள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கத் தான் இந்த முயற்சி என்று மாணவிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்வது நியாயமா?

இந்த விஷயத்தில் பிரபல நாட்டியக் கலைஞரான அனிதா ரத்னத்தின் குரலை நாம் புறக்கணித்து விட முடியாது.

அவர், ஆரம்பத்திலிருந்தே, மாணவிகளின் குரலில் உண்மை இருக்கிறது. அவர்களைப் பேச விடுங்கள் என்று தான் கூறிக் கொண்டிருக்கிறார். எல்லாம் தாண்டி ஒரு விஷயம் மிக முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம் சாட்டியவர்கள் இருவரைத் தாண்டி மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு எனில் அது நீதி!

நீதி கிடைக்க வேண்டுமெனில் உண்மை என்னவென்று அறியப்பட்டாக வேண்டும். அதை அறிந்து கொள்ள பாரபட்சமற்ற விசாரணை தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com