ஆகஸ்ட் 08 - சர்வதேச பூனைகள் தினம்!

ஆகஸ்ட் 08 - சர்வதேச பூனைகள் தினம்!

"மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி அக்கா மனசு வெல்லக்கட்டி. அழகு கொஞ்சும் தங்கக்கட்டி..." இந்தப் பாட்டில் வரும் பூனை மட்டும்தானா அழகு?

பொசுபொசுவென்ற முடிகளுடன் பச்சை நிறம் கலந்த கண்களுடன் இருக்கும் அழகிய பூனைகளை ரசிக்காமல் போக முடியாது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் முதலிடம் பிடிப்பது பூனைகளே. காரணம் அதன் அழகு மட்டுமல்ல புத்திசாலித்தனமும் கூட.

பொதுவாக பூனைகள் தனிமை விரும்பிகள். தங்கள் வீடு அல்லது தங்கள் இடம் என்று இருந்துவிட்டால் நிம்மதியாக உலவி வரக்கூடிய, அதிக கவனம் ஈர்க்காத, ‘நான் உண்டு என் வேலை உண்டு’ என்று வாழும் செல்லப்பிராணிகள்.

வாழ்க்கையில் ஒரு மனிதன் வீழ்ந்து விடும்போது அவரை தேற்றும் வகையில்...”யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வராமலா போய்விடும்?” என்று கூறுவதுண்டு. யானைகளை விடப் பன்மடங்கு பலத்திலும் உருவத்திலும் குறைந்து இருந்தாலும் வீட்டு விலங்கான பூனையும் தன் புத்திசாலிதனத்தால் ஜெயித்து காட்டும். எனவேதான், வாழ்வியலில் பலம் குறைந்த மனிதர்கள் எனக்கும் ஒரு காலம் வராமலா போகும் என்று நினைக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையை பூனையுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

நம் அன்பைப் பெற்ற பூனைகள் மீதான விழிப்புணர்வை புகட்டி அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்த கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் IFAW (Internaional Fund For Animal Welfare) சர்வதேச விலங்கு நல அமைப்பால் ஆகஸ்ட் 8 ம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக அறிவிக்கப்பட்டு பூனைகள் நேசர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு குட்டிப் புலிகள் போல் இருக்கும் பூனைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊன் உண்ணும் விலங்கு ஆகும். ஒரு பூனையின் சராசரி ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் வரை என்கிறார்கள். பூனைகள் இனப்பெருக்க விகிதம் அதிகம் கொண்டவை. ஒரு பெண் பூனை தன் வாழ்நாளில் அதிக பட்சம் 150 குட்டிகள் வரை ஈனும் திறன் கொண்டதாம். பொதுவாக ஒரு பூனையின் எடை சுமார் இரண்டரை கிலோ முதல் ஏழு கிலோ வரை இருக்கும். தன்னைவிட சிறிய வகை பாலூட்டிகளான எலி உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் கரப்பான் போன்ற பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணும். வளர்க்கும் வீடுகளைப் பொறுத்து சைவம், அசைவம் இரண்டையும் உண்ணும் குணம் கொண்டவை பூனைகள். உறங்குபோது தனிமையான, நிசப்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து உறங்கும்.

நாம்தான் பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம் என்று சொல்கிறோம். ஆனால், 7500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் உயிரினமான பூனைகள் எகிப்து, ரோம், கிரீஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் வித விதமான பெயர்களில் கடவுளாக கொண்டாப்படுகிறது என்பதுதான் உண்மை. பயிர்களை அழிக்க வரும் எலிகளை வேட்டையாடுவதில் பூனைகளின் பங்கே அன்றிலிருந்து இன்றுவரை பிரதானமாக உள்ளது.

பூனை சுத்தத்தை மிகவும் விரும்பும் பிராணி. நன்றாக கவனித்துப் பார்த்தால் தன் மீதுள்ள ரோமங்களை தன் நாக்கால் அடிக்கடி நீவி சுத்தம் செய்துகொள்வது தெரியும். சாப்பிடும் போதும் உணவை ஒரு சிறு சிந்தலும் இல்லாமல் சாப்பிட்டு அந்த இடத்தை தூய்மையாக்கும். தான் கழிக்கும் இயற்கை உபாதைகளை அருகில் உள்ள மண்ணைப் போட்டு மூடிச் செல்லும் பழக்கம் காணலாம். உலகத்தில் நிறத்திலும் உருவத்திலும் மாறுபட்ட பலவகையான பூனை இனங்கள் உள்ளன. பூனை வளர்ப்போர் சங்கத்தின் மூலம் ஆரோக்கியமான பூனைகள் போட்டியும் ஆங்காங்கே நடத்தப்படுவது உண்டு.

இந்த பூனைகள் தினத்தன்று மட்டுமல்லாமல் எப்போதுமே உங்களை நம்பி வந்த வாயில்லா ஜீவன்களான பூனைகளுக்கும் மன ஆரோக்கியம் அவசியம் என்பதை புரிந்து கொண்டு அவற்றோடு குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது விளையாடி உங்கள் அக்கறையை காட்டுங்கள். அவற்றை துன்புறுத்தாதீர்கள் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது சர்வதேச பூனைகள் அமைப்பு. செல்லப் பிராணியான பூனைகளை கொஞ்சி மகிழும் அதே நேரத்தில் ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் இது போன்ற ரோமங்கள் கொண்ட பிராணிகளிடம் சற்றுத் தள்ளி இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com