ஆகஸ்ட் 5 - நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள்!

ஆகஸ்ட் 5 - நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள்!

ன்று, ஆகஸ்ட் 5, விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாகப் பார்க்கப்படுகிறது. மிகச் சிறந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் தான் அது. 1930 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர், அவர் என்று சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தாரோ, அன்று முதலே மனித சாதனைகளின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது. அவருடைய பிறந்தநாளில் விண்வெளி ஆராய்ச்சியில் அவருடைய பங்களிப்பு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். 

அப்பல்லோ 11 என்ற வரலாற்று விண்வெளிப் பயணம்:

நிலவுக்கு முதன்முறை மனிதர்களை அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலத்தின் கமாண்டராக இருந்தவர் இவர்தான். இவருடன் சக விண்வெளி வீரர்களான, 'எட்வின் பஸ் ஆல்ட்ரின்' மற்றும் 'மைக்கேல் காலின்ஸ்' ஆகியோரும் பயணித்தனர். இவர்களின் இலக்கு பூமிக்கு அருகிலுள்ள துணைக்கோளான நிலவை அடைவதாக இருந்தது. 

நிலவை அடைவதற்கான பயணம் பல சவால்கள் நிறைந்தும், இது சாத்தியப்படுமா? சாத்தியப்படாதா? என்ற பல நிச்சயமற்றத் தன்மைகளைக் கொண்டிருந்ததாக இருந்தது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது சக பணியாளர்கள், 'Saturn V' என்ற ராக்கெட்டின் மேல் அமர்ந்திருந்தபோது, அவர்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் பல மணி நேர பயிற்சியினால், இலக்கை நிச்சயம் அடைய முடியும் என நம்பினார்கள். விண்கலம் உயிர் பெற்று கர்ஜனையுடன் நிலவை நோக்கி சீறிப்பாய்ந்தபோது, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் மூச்சைப் பிடித்துக்கொண்டு அதை கவனித்தனர். 

நுணுக்கமான பல தொடர் படிநிலைகளுக்குப் பிறகு, 'ஈகிள்' என்று பெயரிடப்பட்ட சந்திரனை நோக்கி செல்லும் பகுதி, கண்ட்ரோல் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, மைக்கேல் காலின்சால் இயக்கப்பட்டது. ஈகிள் பகுதி வெற்றிகரமாக சந்திரனின் மேற்பரப்பில் இறங்கத் தொடங்கியதும், மிஷன் கண்ட்ரோலில் பூமியிலிருந்து அதை கவனித்து வருபவர்களின் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. நிசப்தத்தின் எல்லையில் அனைவரும் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், ரேடியோ அலைகளில் "கழுகு இறங்கியது" என்ற வார்த்தை ஒலித்ததும் வெற்றிக் கூச்சலில் உலகமே அதிர்ந்தது. ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று நினைத்த ஒரு சாதனையை மனிதர்கள் நிகழ்த்தியதை அறிந்த உலகம், கொண்டாடியது. 

நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற பெயர் உலக விண்வெளி வரலாற்றில் என்றும் அழியாத மையினால் எழுதப்பட்ட நாள் ஜூலை 20, 1969. முதன்முதலாக நிலவின் மேற்பரப்பில் அடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் "That's one small step for man, one giant leap for mankind", என்ற அவருடைய வரலாற்று வார்த்தைகளால் தன் பெயரை அனைவரது மனதிலும் பதியச்செய்தார். அந்த ஒற்றை தருணத்தில் புத்திக் கூர்மை, தைரியம், மற்றும் அயராத உழைப்பின் அடையாளமாக ஆம்ஸ்ட்ராங் மாறினார். 

பின்னர் சந்திரனின் மேற்பரப்பில் குறுகிய காலத்தில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது குழுவினர் சோதனைகளை நடத்தி, மாதிரிகளை சேகரித்து, அறிவியல் கருவிகளை நிலவில் பதித்தனர். சந்திரன் மற்றும் பிரபஞ்சம் சார்ந்த நமது புரிதலை மேலும் விரிவுபடுத்தும் விலை மதிப்பற்ற தரவுகளை அவர்களின் ஆய்வு வழங்கியது. 

நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாளை நாம் கொண்டாடும் வேளையில், சந்திரனில் அந்த சிறப்புமிக்க முதல் அடியை எடுத்து வைத்த மனிதரை மட்டுமில்லாமல், இந்த சாதனையை அடைய திரைக்குப் பின்னாலிருந்து ஒத்துழைத்த எண்ணற்ற நபர்களையும் நினைவு கூர்வோம். இவர்கள் கொடுத்த உத்வேகத்திலிருந்து மேலும் பல ஆய்வுகளை சிறப்பாக செய்வோம் என உறுதியளிப்போம். 

பிறந்தநாள் வாழ்த்துகள், நீல் ஆம்ஸ்ட்ராங்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com