கோவிட்
கோவிட்

விழிப்புடன் இருங்கள்… பீதி வேண்டாம்!

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வந்துள்ளதை அடுத்து மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அறிவிக்கப் படவில்லை. ஆனால், கூட்டமான இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யாருக்காவது நோய் தொற்று அறிகுறியிருந்தால் அதன் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் மத்திய அரசு மாநிலங்களிடம் தெரிவித்துள்ளது.

 சீனா உள்ளிட்ட கோவிட் தொற்று பரவல் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.  இல்லையெனில் அவர்களுக்கு ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கவும் அரசு தயங்கக்கூடாது.

கோவிட் தொற்றை காரணம்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் “பாரத ஒற்றுமை யாத்திரை”யை நிறுத்துமாறு கோரி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியது விநோதமாக உள்ளது. அப்படியானால் மீண்டும் கொரோனா அலை வரும் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ள விரும்புகிறாரா? இல்லை இது வெறும் அரசியல் ஸ்டன்டா?

புதிய வகை வைரஸ் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியர்கள் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள். மேலும் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே நாம் பீதியடைய தேவையில்லை.

பி.எஃப்-7 வகை ஒமைக்ரான் தொற்று பரவல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடந்த அக்டோபரிலிருந்து இருந்து வருகிறது அதனால் பெரிய அளவில் பாதிப்போ உயிரிழப்போ இல்லை என்பதை கருத்தில் கொண்டு அரசு உறுதியாக இருக்கிறது. உண்மையில் பி.எஃப்-7 வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவுக்கு புதிது அல்ல. கடந்த அக்டோபர் மாதம் குஜராத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டதுதான். குஜராத் மற்றும் ஒடிஸாவில் ஒன்றிரண்டு பேருக்கு இது பரவியுள்ளது என்றாலும் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

நாட்டில் 90 சதவீத மக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரித்திருக்கும். சமீப நாட்களாக இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 1,200 என்ற அளவில்தான் உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் இந்த எண்ணிக்கை 3.5 மில்லியனாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் மூன்று அலைகளையும் மருத்துவ சமூகம் உலகம் சிறப்பாக கையாண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பற்றிய அடிப்படை அறிவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் சிறப்பாக மேற்கொண்டதாலும் உயிரிழப்பு குறைவான எண்ணிக்கையிலேயே இருந்த்து.

சீனாவில் தொற்று அதிகரித்திருப்பதற்கான காரணங்களை தொடர்பு படுத்தி பார்த்தால் அது நமக்கு பொருந்தாது. கோவிட் தொற்று பூஜ்யநிலைக்கு வரும் வரை காத்திருப்பது என்ற நிலையிலிருந்து விலகி கட்டுப்பாடுகளை தளர்த்தியதே அங்கு மீண்டும் தொற்று அதிகரிக்க காரணமாகும். மேலும் அங்குள்ள மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி தரமானவையா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் உலகத் தரத்துக்கு இணையாக இருந்தன.

ஆனாலும், நாம் அலட்சியாக இருந்துவிடக்கூடாது. கோவிட் தொற்றுப் பரவல் முழுமையாக ஒழிந்துவிடவில்ல. உருமாறிய கொரோனா ஏதோ ஒருவழியில் பரவிவருகிறது. தொற்றுப் பரவலை உடனடியாக கண்டறிவது, தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தி வைப்பது, துரிதமாக பரிசோதனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாடு முழுவதும் முடுக்கிவிடப் படவேண்டும்.

தடுப்பூசி
தடுப்பூசி

கோவிட் தொற்றை ஒழிக்க முற்படுவதைவிட அதனோடு வாழக்கற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதுதான் சிறந்த வழி. முகக்கவசம் அணிவது, அவ்வப்போது கைகளைக் கழுவுவது, கூட்டங்களில் சேராமல் இருப்பது, இடைவெளியை பின்பற்றுவது போன்றவை மூலம் நிச்சயம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முடியும்.

சீனாவில் கோவிட் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அது உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது என்பது தெரிந்த விஷயம்தான். மத்திய அரசு  மீண்டும் பொது முடக்கம் போன்ற செயலில் இறங்காமல் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதுதான் சரியான வழியாகும்.

இவை எல்லாவற்றையும்விட தடுப்பூசிகள் எவ்வளவு காலத்துக்கு பலனளிக்கும் என்பதை நிபுணர்கள் மூலம் கேட்டறிந்து தேவைப்பட்டால் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடர அரசு தயங்கக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com