வேதனை தரும் பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற செயல்பாடுகள்!

வேதனை தரும் பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற செயல்பாடுகள்!

ளும் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை குறை கூறி விமர்சிப்பதாகவும், எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்யும் வகையிலேயும் இருந்தது. இது ஒரு நாட்டின் தலைவர் பேசும் பேச்சாக அல்லாமல், மிகவும் தரம் தாழ்ந்து இருந்தது. வன்முறையால் நிலைகுலைந்து போயிருக்கும் மணிப்பூர் மக்களின் துயர் துடைப்பதற்கு உறுதியான பதில் எதையும் அவர் தனது பேச்சில் தெரிவிக்கவில்லை.

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த முன்னாள் பிரதமர்கள் என்ன செய்தார்கள், பாஜக ஆட்சியில் என்ன செய்யப்பட்டது என்பதைவிட, மணிப்பூரில் வன்முறை ஓய்ந்து அங்கு அமைதி திரும்ப உறுதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு காங்கிரஸின் குறைகளைக் கூறிக்கொண்டிருப்பதால் என்ன லாபம்?

ஒன்பது ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பிறகும், தற்போதுள்ள அரசு ஏன் நேரு காலத்து அரசியலையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்போடுதான் மக்கள் காத்திருக்கின்றனர். அதேபோல, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் திடீரென வெளிநடப்பு செய்ததும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் முழுமையாகப் பேசி முடிக்கும் வரை ஏன் அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இது அவர்களின் நேர்மையற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் கடைசியில் பிரதமர்தான் வென்றுவிட்டார்.

இந்த நிலையில் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பெண் உறுப்பினர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ (பறக்கும் முத்தம்) கொடுத்ததாக புகார் வேறு. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பற்றி இந்த பெண் எம்பிக்களுக்கு கவலையில்லை. ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தது அநாகரிக செயல் என்று கொதித்து எழுந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிதான், பழங்குடியினப் பெண்கள் விவகாரம் வீடியோவாக  வெளிவந்தபோது, ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லையா?’ என்று பேசியிருந்தார். மணிப்பூர் விவகாரத்தை ஆளுங்கட்சியினர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே) சதுர்வேதி, பறக்கும் முத்தம் கொடுத்த விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். ‘பெண்களை அவமதிக்கும் எண்ணம் ராகுல் காந்திக்கு கிடையாது. அன்பை வெளிப்படுத்தும் வகையிலேயே அவர் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். இதை ஏன் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். வெறுப்பை தூண்டுபவர்களால் (பாஜகவினர்) அன்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரம் பற்றி பேசினார். ஆனால், பாஜகவினர் மணிப்பூர் பற்றி பேசுவதை விரும்பவில்லை. ராகுல் காந்தி அவையில் இருப்பதையும் விரும்பவில்லை. அதனால்தான் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர் என்று ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்பி கீதா கோடா தெரிவித்தார்.

‘பறக்கும் முத்தம் குறித்து குரல் எழுப்பும் பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானி, மல்யுத்த வீரர்கள் சங்கத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தபோது எங்கே போயிருந்தார்?’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பினார். இதனிடையே, பாஜக பெண் எம்பிக்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து, ராகுல் அவையில் முறை தவறி நடந்து கொண்டதாகக் கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி புகார் கடிதம் கொடுத்துள்ளனர்.

‘பாரத் ஜடோ’ யாத்திரை மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மீண்டு எழுந்துவந்து, மக்களவையில் பறக்கும் முத்தம் கொடுத்து தம்மை சிறுமைப்படுத்திக் கொண்டுவிட்டார். நாடாளுமன்றம் என்பது  மரியாதைக்குரிய இடம். இங்கு மரபையும் கண்ணியத்தையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு உறுப்பினர்களுக்கு இருக்கிறது. ஏற்கெனவே ஒரு முறை அவையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி, பின்னர் கண்களை சிமிட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவாக இருக்கலாம். ஆனால், அதற்காக ராகுல் காந்தி செய்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வயதானாலும் இன்னமும் அரசியலில் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறார்.

நாட்டில் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், ஆளும் பாஜகவும் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி அதைப் பற்றி விவாதிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். எந்த காரணமும் இன்றி நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பதும், கூச்சல், அமளியில் ஈடுபடுவதும், வெளிநடப்புச் செய்வதும், உளுத்துப்போன பேச்சுக்களாலும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மக்களின் வரிப்பணமும் பொன்னான நேரமும் வீணடிக்கப்படுவது வேதனையைத் தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com