தூய உணர்வின் பேரின்பம் - சுவாமி சின்மயானந்தா!

நினைவு நாள் – ஆகஸ்ட் 03
தூய உணர்வின் பேரின்பம் - சுவாமி சின்மயானந்தா!

ந்திய தேசம் ஆன்மீகப் பெரியவர்கள் அடங்கிய புண்ணிய பூமி. உலகமெங்கும் புகழ்பெற்ற இந்திய ஆன்மீகவாதிகளுள் ஒருவர்தான் சுவாமி சின்மயானந்தா. சின்மயா மிஷன் எனும் அமைப்பை நிறுவி உலகமெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துகளைப் பரப்பி கவனம் பெற்றவர்.

மே 8 ஆம் தேதி 1916 ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்த இவர், ஆன்மீகத் தலைவராக பணிகளை மேற்கொண்டு தனது 77 வது வயதில் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று   கலிபோர்னியாவில் உள்ள சான் டியேகோ நகரில் மறைந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ணா மேனன் என்பதாகும்.

1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ந் தேதி சிவராத்திரி நாளில் “சுவாமி சிவானந்தரிடம்” தீட்சை பெற்று “தூயஉணர்வின் பேரின்பம்” எனும் பொருள் தரும் “சுவாமி சின்மயானந்தா” என்று அழைக்கப்பட்டார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று ஊடகவியல் துறையில் ஆர்வம் கொண்டு, இந்திய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார். நாட்டுப்பற்றுடன் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்குபெற்று சிறைக்கும் சென்றுள்ளார்.

பின் ரிஷிகேசம் சென்று சுவாமி சிவானந்தரை சந்தித்து அவரின் வழிகாட்டலுடன் இந்து சமய ஆன்மீகத்தில் பெரும் அக்கறை கொண்டார். சுவாமி சிவானந்தர் ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக்கழகம் என்ற ஆசிரமம் துவங்கி ஆன்மீக வேட்கை கொண்ட இளைய சமுதாயத்துக்கு தன் கருத்துகளை சொற்பொழிவுகள் புத்தகங்கள் மூலமாகபரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“வெளியே விழுந்தால் அது வீழ்ச்சி உனக்குள் விழுந்தால் அது எழுச்சி” போன்ற வாழ்வியல் ஆன்மீகத் தத்துவங்களை தமது உரைகளில் பகிர்ந்த சின்மயானந்தா இமயமலையில் சுவாமி தபோவன மகராஜ் என்பவரிடம் சுமார் எட்டு ஆண்டுகள் இந்துமத தத்துவம் பயின்று அவர் ஆசிகளுடன் கற்ற வேதாந்தத்தை உலகமெங்கும் பரப்பினார்.

உபநிடதங்கள், வேதங்கள், பகவத்கீதை குறித்த இவரது தத்துவ விளக்க உரைகள் புகழ்பெற்றவை. இவரின் உரைகளைத் தாங்கி சுமார் 95 நூல்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் தமிழ், மலையாளம், மராத்தி, தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகின்றன.

உலகமெங்கும் பயணப்பட்டு, பல ஆசிரமங்களையும், மையங்களையும்,  பாடசாலைகளையும், மருத்துவ மனைகளையும் துவக்கி ஆன்மீகத்துடன் சமூக சேவையிலும் ஈடுபட்டார். குறிப்பாக வசதியற்ற கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கிராம நலத் திட்டமாக சின்மயாமிஷன் எனும் அமைப்பை நிறுவினார்.

இவர் துவங்கிய சின்மயாமிஷன் உலகமெங்கும் உள்ள அமைப்பாகும். சுமார் 350 மையங்களில் இயங்கும் இந்த அமைப்பின் வழியாக ஆன்மீக வேதாந்தத்துடன் இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரம் ஆகியவற்றையும் பரப்புவதில் சிறந்ததாக விளங்குகிறது. இவர் வழியில் ஏராளமான சீடர்கள் உலகமெங்கும் ஆன்மீகத் தொண்டாற்றி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com