பிரபலங்களுக்கு பிரைவசி வேண்டாமா?!

விராட் கோலி
விராட் கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்சேஷனல் நாயகன் இப்போது விராட் கோலிதான்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்  53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் சாதனை படைத்த விராட் கோலி, அந்த மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிக்க முடியாத மாதிரி  இப்போது கொதிநிலையில்!

 பின்னே.. அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையை அவர் அறியாமல் யாரோ வீடியோ எடுத்து வெளியிட, பதற்றமடைந்த கோலி.

 'இதுபோன்ற வெறித்தனமான செயலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  இது என் தனி சுதந்திரத்தில் தலையிடும் விஷயம்.  என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தவேண்டாம்' என்று பதற்றத்துடன் அவர் கூறும் நிலை உருவானது.

 விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும்  'இது மிகவும் மோசமான விஷயம்.  இதுவே உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால்?  இதற்கெல்லாம் ஓர் எல்லைக்கோடு வேண்டாமா?' என்று கேட்டிருக்கிறார்.

ஓட்டல் அறை
ஓட்டல் அறை

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் பிரபல 'கிரவுன் டவர்ஸ்' ஹோட்டலில் ஒரு வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.  அந்த வீடியோவின் தலைப்பு ‘கிங் கோலியின் ஹோட்டல் அறை” என்பதாகும்.  அது விராட் கோலி தங்கிக் கொண்டிருந்த அறையில் அவர் இல்லாதபோது எடுக்கப்பட்ட வீடியோ.

தங்களிடமுள்ள டூப்ளிகேட் திறவுகோலைக் கொண்டு சில ஹோட்டல் ஊழியர்கள் (அல்லது அவர்களின் துணையுடன் சிலர்)  அந்த அறையைத் திறந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள்.  அதில் கோலியின் ​சில ஜோடி ஷூக்கள், திறந்த நிலையில் இருக்கும் அவரது சூட்கேஸ், தொப்பிகள், அவர் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள்  போன்றவை காணப்படுகின்றன> 

 விராட் கோலியின் பதிவுக்குப் பிறகு அந்த ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கி இருக்கிறது ஹோட்டல் நிர்வாகம்.  விராட் கோலியிடம் மன்னிப்பு கோரியிருக்கிறது.  சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடமும்.  

 கோலியின் பதற்றத்தில் நியாயம் இருக்கிறது.  நம் அறையைப் பூட்டிக் கொண்டு செல்லும்போது உள்ளே எதையும் ஒழுங்கமைப்புடன் நாம் வைத்திருக்க மாட்டோம்.  பிறருக்குத் தெரியக்கூடாது என்று நாம் நினைக்கும் விஷயங்களைக் கூட ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்வோம்.  அவை ரகசியங்களாக இருக்க வேண்டுமென்பது கூட இல்லை.  அந்தரங்கம் என்பதே மதிக்கப்பட வேண்டியதுதான். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த ​வீடியோ குறித்து  ‘இது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.  அராஜகமானது’ என்கிறார்.

 இந்திய அணியின் பயிற்சியாளரான ராஹுல் டிராவிட் ‘ஹோட்டல் அறை என்பது விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பாக கருதும் ஒன்று.  அதற்குள் ரகசியமாக ஒருவர் நுழைந்து விட முடியும் என்றால் .. அது நல்லதொரு உணர்வை ஏற்படுத்தாது. இனியாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கட்டும்.    நாம் அந்தரங்கங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.

 விராட் கோலி மட்டுமல்ல.. உலகளவில் பல்வேறு சந்தர்பங்களில் பல பிரபலங்களும் இதுபோன்ற சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள்.

 தனிநபர் உரிமையில்  தலையீடு என்பது எந்த அளவுக்கு விளைவை ஏற்படுத்தலாம் என்பதற்கு பிரிட்டிஷ் இளவரசி டயானா ஓர் எடுத்துக்காட்டு.  அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.  அவர் என்ன சாப்பிடுகிறார், அவர் சாப்பிட்டதை எப்போது வாந்தி எடுக்கிறார்,  வெளியில் யாரை சந்திக்கிறார் என்கிற ஒவ்வொரு தகவலும் (அவை சாரமற்றதாக இருந்தாலும்) கசிந்து கொண்டே இருந்தன. 

பொதுமக்களில் பலரும் டயானாவின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வது தங்களது உரிமை என்பது போலவே நடந்து கொண்டிருந்தார்கள்.  அவர் மட்டுமல்ல.. அவரது குழந்தைகளையும் புகைப்பட கருவிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.  ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தைகள் டயானாவை சந்திப்பதையே நிறுத்தும்படி ஆனது. 

பிரிட்டிஷ் இளவரசி டயானா
பிரிட்டிஷ் இளவரசி டயானா

பின்னர் ஒரு கட்டத்தில் தங்கள் செய்திக்குத்  தீனி போட, டயானா  காரில் சென்று கொண்டிருந்தபோது பின்னாலேயே செய்தியாளர்கள் மற்றொரு காரில் துரத்த அவர்களை தவிர்க்க எண்ணிய டயானாவின் கார் விபத்துக்குள்ளாகி அதில் அவர் இறந்தார்.

 டயானா  இறப்பைத் தொடர்ந்து 1998ல் கலிபோர்னியா மாநிலம் ‘தனிநபர் தலையீடு’ குறித்த சட்டத்தை இயற்றியது.  இதன்படி பிரபலங்களை பொது விழாக்களைத் தவிர வேறெங்கு, அவர்கள் சம்மதமின்றி,  புகைப்படம் எடுத்தாலும் அது குற்றம் என்றானது.

 விராட் கோலி தொடர்பான வீடியோவைப் பார்த்த ஒருவர் இதில் ஒன்றும் சர்ச்சைக்குரியதாக இல்லையே என்று கூறியருக்கிறார் (ஏமாற்றம்?).

 அது பார்த்த பிறகுதானே தெரியவந்தது?  தவிர பரபரப்பு அல்லது சர்ச்சை  என்பது எதிர்பாராத கோணங்களிலும் முளைக்கலாம். தாறுமாறாகத் தன் பொருட்களை ஒரு பிரபலம் தன் அறையில் வைத்திருந்தால் அது குறித்து விமர்சனம் எழலாம். 

ஓர் அழகுப் பொருளின் விளம்பரத்தில் அவர் தோன்றிவிட்டு அதற்கு நேர் எதிரான தயாரிப்பை அவர் பயன்படுத்துவது வீடியோவின் ​மூலம் தெரிய வந்தால்? மனைவியல்லாத ஒரு பெண்ணின் புகைப்படத்தை அவர் வெகு இயல்பாக மேஜையின்மீது  வைத்திருந்து அது வெளிப்பட்டாலும்  கூட கிசுகிசுக்கள் கிளம்பி விளக்கம் தேவைப்படக் கூடும்.  தவிர இப்படி வீடியோ வெளியிடப்பட்டால் அது  சம்பந்தப்பட்டவரின் அடுத்தடுத்த போட்டிகளின் ஆட்டத்தில் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாமே.

 நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் தன் அந்தரங்கம் பறிபோவது பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது. ‘ஒவ்வொரு முறை நான் என் வீட்டு கதவை திறக்கும் போதும் பதற்றமாக இருக்கிறது, எங்கிருந்தாவது கேமராவின் ஒளிவெள்ளம் என் மீது வீசப்படுமோ என்று.  வெளியே செல்லும்போது முகம் தெரியாத 10 பேர் தங்கள் வண்டிகளில் என்னை பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்தாலோ, என்னை ​சூழ்ந்து கொண்டாலோ  என் உடலில் சுரக்கும் அட்ரினலின் மிக மிக அதிகமாகிறது’.

நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ்
நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ்

நம் நாட்டு  உச்ச நீதிமன்றம் 2017 ஆகஸ்ட் 24 அன்று தனது ஒரு தீர்ப்பில் அந்தரங்க​ம் காக்கப்படும் உரிமை என்பதை அடிப்படை உரிமையாகவே அறிவித்திருக்கிறது.

 ‘நோ  என்றால் அது மதிக்கப்பட வேண்டியதுதான்.  அது மனைவியாகவே இருந்தாலும்’ எனப்படும் காலகட்டத்தில் வாழ்கிறோம்.  

 நீங்கள் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தொடர்பில்லாத யாரோ ஒருவர் அதை கேட்டுக்கொண்டிருந்தால்? உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நீங்கள் அறியாமல் ஒரு சிசிடிவி கேமரா இயங்கிக் கொண்டிருந்தால்?  ‘பிக் பாஸ்’ முக​மூடியை வாழ்நாள் முழுவதும் அணிய முடியுமா?

 அந்தரங்க வாழ்வைப் படமெ​டுப்பவர்கள் மட்டுமல்ல, அவற்றை ரசித்துப் பார்க்கும் அனைவரும் யோசிக்க வேண்டிய தருணம் இது.                                             

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com