இளம்பெண்களுக்கு திருமண பந்தத்தின் மீது ஒவ்வாமை ஏற்படுத்தும் "எமோஷனல் லேபர்" சுமைகள்!

இளம்பெண்களுக்கு திருமண பந்தத்தின் மீது ஒவ்வாமை ஏற்படுத்தும் "எமோஷனல் லேபர்" சுமைகள்!

“எமோஷனல் லேபர்” இந்த வார்த்தைப் பிரயோகமே புதிதாக இருக்கிறது இல்லையா? இதைப் பற்றி நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த வாரம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருமணமே வேண்டாம் என்று எந்தப் புள்ளியியில் ஆண்களும், பெண்களும் முடிவெடுக்கிறார்கள் என்ற கோணத்தில் விவாதம் நடந்தது. இது ஒரு வழக்கமான விவாதம் தான். எத்தனை முறை பேசினாலும், இதற்கான தீர்வுகளை நாம் அடையாளம் காணப் போவதில்லை. காரணம், தீர்வுகள் இவை தான் என்று நமக்கு முன்பே தெரியும். அப்படியும் அதே தவறுகளைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். எவ்வளவு புத்திசாலித்தனமாகப் பேசுபவர்களாக இருந்தாலும் கூட குடும்ப வாழ்க்கை, கணவன், மனைவி என்று வரும் போது யாராவது ஒருவர் மற்றொருவருக்காகவும், குடும்பத்திற்காகவும் விட்டுகொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

இதை எமோஷனலாகவும், செண்டிமெண்ட்டலாகவும் அணுகுவதைக் காட்டிலும் குடும்பம் என்றால் இப்படித்தான் உன் பக்கம் சுமை அதிகமாக இருக்கிறதா? சரி எனக்கு அது புரிகிறது, இரு நானும் ஒரு கை கொடுக்கிறேன். சேர்ந்து சுமப்போம் வா என்று எளிமையான புரிதலுக்குள் அடக்கி விட்டால் போதும் பிரச்சனையின் தீவிரத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு குடும்ப வண்டியை எங்கும் இடித்துக் கொள்ளாமல் மேலே தாராளமாக நகற்றிச் சென்று விட முடியும். நாம் என்ன ரேஸ் காரா ஓட்டப்போகிறோம்?! அதை அணுகுவதற்கு இத்தனை பயம் எதற்கு?! என்று ஒரு பக்கம் தோன்றுகிறது.

ஆனால், மறுபக்கம், இல்லை இந்த தசாப்தத்தில் இது அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளத் தக்க விஷயம் இல்லை. இது பற்றிய தீவிரமான புரிதலை இன்றைய இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், நிகழ்ச்சியில் பேசிய பெண்களில் ஒருவர் முன் வைத்த கருத்து மிக முக்கியமானதாக இருந்தது. அவரது கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்க அல்லது தீர்வைக் கண்டுபிடிக்க ஆண்கள் முன்வந்தாலே போதும் திருமண வாழ்க்கை குறித்த எண்ணற்ற ஒவ்வாமைகளை நம்மால் எளிதில் களைந்து விட முடியும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.

குடும்ப வாழ்க்கையில் அன்றாடம் நாம் கடந்து வரும் விஷயங்களில் டொமஸ்டிக் லேபர், எமோஷனல் லேபர் என்ற இரண்டு அடிப்படை விஷயங்களைப் பற்றிப் பேசினார் அந்தப் பெண்.

வார்த்தைகள் தான் புதுமையே தவிர, எமோஷனல் லேபர் என்பது பெண்களான நமது தினசரி அட்டவணைகளை நிரப்பும்,

நேத்தே வீட்ல புளி தீர்ந்து போச்சு இன்னைக்கு வீட்டுக்குப் போகும் போது மறக்காம வாங்கிட்டுப் போகனும்,

நைட் என்ன சமைக்கலாம்?

ஈவினிங் குழந்தையை ஸ்கூல்ல இருந்து கூட்டீட்டு வரனும்...

நாளைக்கு வேலைக்காரம்மா லீவு,மறக்காம ஆஃபீஸ் போக முன்னாடி துணி தோய்ச்சு காயப் போட்டுடனும்.

வாரக் கடைசில பீச்சுக்குப் போகனும், ஹோட்டல்ல சாப்பிட்டா செலவு கட்டுப்படியாகாது, வீட்ல சமைச்சு எடுத்துட்டுப் போறதுன்னா அந்த ஒரு நாள் லீவும் காலி. சுத்தமா ரெஸ்ட் எடுக்கவே முடியாது.

வீட்ல தண்ணீர் டேங்க் சுத்தம் பண்ணி 6 மாசமாகுது, க்ளீன் பண்ண ஆள் கூப்பிடனும். அது எப்போ பண்ணலாம்?!

தூசி நிறைய வருது வாரம் ஒருமுறையாவது AC ஃபில்ட்டரைக் கழட்டி கழுவித் துடைச்சு செல்ஃப் சர்வீஸ் பண்ணி மாட்டனும்.

இந்த வாரமாவது வண்டிய சர்வீஸ் விட்டு எடுக்கனும்.

எல்லா இ எம் ஐ க்கும் கரெக்ட்டா பணம் போற அளவுக்கு அக்கவுண்ட்ல பணம் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணனும்.

ஃபோன் பில்(இண்டர்நெட் ரீசார்ஜ்), எலக்ட்ரிசிட்டி பில், கேஸ் புக்கிங், பேப்பர் பில், மளிகை பில், அயர்ன் மேன் பில், டியூஷன் ஃபீ, எஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கிளாஸ் ஃபீ இத்யாதி, இத்யாதி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இத்தனை வேலைகளையும் குடும்பத்தலைவி தான் நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. விதிவிலக்காக சில குடும்பங்களில் குடும்பத் தலைவர்களும் சேர்ந்து வீட்டை நிர்வகிக்கலாம். அப்படி “வரவு எட்டணா செலவு பத்தணா” திரைப்படத்தின் நாசர்களாக சம்சாரத் தேரை சேர்ந்து இழுக்க பெருமளவிலான ஆண்கள் முன் வரவில்லை என்பது தான் இன்றைய பெண்களின் அச்சமாக இருக்கிறது.

இதையெல்லாம் ஒரு குடும்ப அமைப்புக்குள் கணவனோ, மனைவியோ யாரோ ஒருவர் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்து தான் ஆக வேண்டும். இதுவரையிலும் அப்படித்தான். இப்போது இந்தத் தலைமுறையில் இது மிகப்பெரிய சுமையாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு அது கடினமானதா? என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி சதா சர்வ காலமும் ப்ரீ ஆக்குபைடாக மூளையை வைத்துக் கொண்டிருப்பது பெண்களுக்கு மிகப்பெரிய மனச்சோர்வை அளிக்கிறது.

இதைத்தான் “எமோஷனல் லேபர்” என்று நிகழ்ச்சியில் அந்த பெண் விவாதித்தார்.

உண்மையில் எமோஷனல் லேபர் என்பதற்கு இன்னும் விரிவான தளங்களில் விரிவான விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அதை எளிதாக நாம் மேற்சொன்னவாறு புரிந்து கொண்டால் அர்த்தப்படுத்திக் கொள்ள எளிதாக இருக்கும்.

முன்பு ஒரு காலகட்டத்தில் ஆண்கள் வெளியில் வேலைக்குப் போனார்கள், சம்பாதிக்கும் பொறுப்பு மட்டுமே அவர்களுக்கு இருந்தது. எனவே வீட்டு நிர்வாகத்தை மனைவிகள், அம்மாக்கள் அல்லது சகோதரிகள் என்று பெண்கள் பார்த்துக் கொண்டார்கள்.

அதற்கடுத்த தலைமுறையில் பெண்களும் வேலைக்குப் போகத் தொடங்கினார்கள்... குடும்பம், அலுவல் என்று இரட்டைக் குதிரைச் சவாரி செய்யப் பெண்களுக்குப் பிடித்திருந்த போதும் அதைச் சரியாகச் செய்ய முடியாத போது இது உன் வேலை தானே? இதைக்கூட நீ சரியாகச் செய்ய மாட்டாயா? பெண்கள் வேலைக்குப்போனால் வீட்டு வேலை செய்யக்கூடாது என்று சட்டமா? என்று இந்தச் சமூகம் அவர்களைக் கேள்வி கேட்கத் தொடங்கியது. பிரச்சனைக்கு உரிய தீர்வை முன் வைக்காமல், மேலும் அவர்கள் மீது பொறுப்புணர்ச்சி எனும் போர்வையில் கடமைகளைத் திணித்து அதைச் செய்ய இயலாத போது அவர்களைக் குற்ற உணர்ச்சி கொள்ளத் தூண்டியது. இந்தச் சமயத்தில் இதை பார்த்துப் பார்த்து வளரக்கூடிய சூழலில் அடுத்த தலைமுறைப் பெண்கள் உருவானார்கள்.

அவர்களுக்கு திருமணம் குறித்த புரிதல்கள் முந்தைய இரண்டு தலைமுறைப் பெண்களை விடக் கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல அனுபவ ரீதியாகவும் மாறுபட்டே இருந்தது.

ஆக அவர்களது மனநிலையில் இருந்து அவர்கள் இப்போது திருமண பந்தத்தையும் அதனால் உண்டாகப் போகும் எதிர்காலச் சுமைகளையும் தீர்க்கதரிசனப் பார்வையில் காணத் தொடங்கி அதற்கான தீர்வுகளைத் தேடத் தொடங்கி விட்டார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட இப்போது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண்களே இல்லாத, இன்னும் சுருங்கச் சொல்வதென்றால் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி தயாரில்லாத அந்த பந்தத்தை விரும்பாத பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும்.

ஆண்கள் அல்ல ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் இது குறித்து யோசிப்பது நல்லது.

இப்போதும் கூட என் மகனுக்கு வெந்நீர் வைக்கக் கூடத் தெரியாது. என்று புளகாங்கிதம் அடையும் அம்மாக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒருமுறை கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் பார்ப்பது நல்லது. படத்துடன் உங்களுக்கு கருத்தியல் ரீதியாக ஒவ்வாமை இருக்கலாம். ஆனால், குடும்ப உறவுமுறைகளில் திருமணம் எனும் ஒரு ஏற்பாட்டில் அத்திரைப்படம் பதிவு செய்து விட்டுப் போன சமூகக் குறைபாடுகள், பாரபட்சங்கள், ஒவ்வாமைகள் அனைத்தும் தீர யோசித்து களையப்பட வேண்டியவையே.

அன்பு வாசகர்களே,
மாறிவரும் சமூக சூழலில் பாலின சமத்துவத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட கட்டுரையில் பெண்கள் குறிப்பிடும் “எமோஷனல் லேபர்” குறித்து உங்களுடைய கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். -ஆசிரியர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com