ஃபாஸ்ட் ஃபேஷன் என்னும் மாயை

ஃபாஸ்ட் ஃபேஷன் என்னும் மாயை

துரித உணவு எனப்படும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். நம்மில் பலர் சுவைத்தும் இருப்போம். மிக எளிதான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்படுபவை. அதற்கேற்றாற் போல், அதன் சுவையும்  மிக விரைவில் நம்மை விட்டு சென்றுவிடும். அதில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாதலால், ஆரோக்கியமான உணவும் அல்ல. ஆனால், ஃபாஸ்ட் ஃபுட் போன்று ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ என்று ஒரு உள்ளதே, அது என்ன தெரியுமா?

ஃபாஸ்ட் ஃபேஷன் என்பதும் கிட்டத்தட்ட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ மாதிரியான ஒன்று தான். ஆடைகள் மட்டுமின்றி, காலணிகள், எல்லா வகை நகைகள், தொப்பிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இதர பொருட்களெல்லாம், ஃபேஷன் பொருட்கள் எனப்படுகின்றன.மிகக் குறைவான கால இடைவெளியில், அதிக அளவில், சுலபமான முறையைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் ஃபேஷன் பொருட்கள், ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ என்னும் பிரிவின் கீழ் வருகின்றன. ஃபாஸ்ட் ஃபேஷனில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறைவானதாகவே இருக்கும். காரணம், அப்பொருட்களுக்காக பயன் படுத்தப்படும் மூலப்பொருட்களும் அத்தனை தரம் வாய்ந்ததாக இருக்காது. எந்தவொரு ஃபேஷன் பொருளையும் உற்பத்தி செய்வதற்கான செலவில், 70% மூலப்பொருட்களின் பங்களிப்பு உண்டு, குறிப்பாக ஆடைகளின் உற்பத்தியின் போது. அதனால்தான், இப்படிப்பட்ட தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. தரம் குறைவாக உள்ளதால், அப்பொருட்களின் ஆயுட்காலமும் குறைவாகவே இருக்கும். ஆதலால், மீண்டும் மீண்டும் அவற்றை வாங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதில் ஃபேஷன் துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடம், எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் துறையாகும். ஃபாஸ்ட் ஃபேஷன் என்னும் சுழலில் மக்கள் தீவிரமாக சிக்கிக் கொண்டிருக்கிருப்பதைப் பார்த்தால், இந்தத்துறை விரைவில் முதல் இடத்தை பிடிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. நகைகள், வெறும் துணிமணிகள் இந்த அளவிற்கு சுற்றுச்சூழல் நெருக்கடியை உருவாக்க முடியுமா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக முடியும். அதற்கான காரணங்களும் உண்டு.

பொதுவாக நாம் உடைகள் வாங்கும் போது, அவை எந்த வகை ஃபைபரைக் கொண்டவை என்று கவனிக்கத் தவறுவோம். கடைக்காரர் நாம் தேர்ந்தெடுத்த உடையில் உள்ள ஃபைபரின் வகை மற்றும் அளவை சில சமயம் சொன்னாலும் கூட, பெரும்பாலும் அவை உண்மையான தகவலல்ல.

இந்தயாவில் தயாரிக்கப்படும் அதிகபட்ச  உடைகளில், 100 சதவிகிதம் காட்டனோ, பாலியெஸ்டரோ இருப்பதில்லை. ஒருவேளை இந்த விஷயம் சேலைகளுக்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் மற்ற உடைகள் அவ்வாறல்ல. நாம் 100 சதவிகிதம் காட்டன் சட்டை என்று நம்பி வாங்கினால், அதில் 90 சதவிகிதம் காட்டனும், 10 சதவிகிதம் விஸ்கோஸோ அல்லது 10 சதவிகிதம் பாலியெஸ்டரோ இருக்கும். காரணம், 100 சதவிகிதம் காட்டன், பாலியெஸ்டர் அல்லது எந்த வித ஃபைபரின் மூலமும் துணி உற்பத்தி செய்வது மிகவும் கடினமான செயலாகும். 100 சதவிகிதம் காட்டன் இல்லாத ஆடையொன்றில், 100 சதவிகிதம் காட்டன் இருப்பதாக லேபில் ஒட்டி வியாபாரம் செய்தல், இந்தியாவில் சட்டவிரோத செயலாகக் கருதப்படுவதில்லை. அதனால் தான், இந்த வழிமுறை இந்தியாவில் இன்னும் எந்தவொரு தடையுமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த செயல்முறை தண்டனைக்குரியதாகும்.   

சரி, ஆனால் இந்த ஆடையிலுள்ள ஃபைபர் வகைக்கும், சுற்றுச்சூழல் மாசுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்? உங்களுக்கான பதில் இதோ:

       ஃபாஸ்ட் ஃபேஷன் என்ற வகைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான உடைகளில் உள்ள ஃபைபர் வகை பாலியெஸ்டர், நைலான், அக்ரிலிக், ரேயான் மற்றும் ஸ்பான்டெக்ஸ் போன்ற செயற்கை வகை ஃபைபர்கள் ஆகும். இவையெல்லாம், நெகிழி தயாரிக்கப்படும் முறையில், சில வேறுபாடுகளில், உற்பத்தி செய்யப் படுகின்றன. நெகிழியினால் சுற்றுச்சுழலுக்கு எத்தனை ஆபத்து வரக்கூடுமோ, அத்தனையும் இவைனாலும் வரக்கூடும். எப்படியென்றால், ஃபேஷன் பொருட்களை பயன்படுத்திய பின்பு, அவ்வறை நாம் குப்பையில் எறிகிறோம். ஃபாஸ்ட் ஃபேஷன் பொருட்களை விற்கும் பெரும்பாலான நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. கடைசியில் அவை மற்ற குப்பைகளுடன் கொட்டப்பட்டு, நிலப்பரப்பை [landfill] ஆக்ரமிக்கின்றன.  நெகிழிப் பைகள், பாட்டில்கள் போன்றவைகளுடன், இந்த ஃபாஸ்ட் ஃபேஷன் குப்பைகளும் சேர்ந்து, நிலமகளை வேதனைக்குள்ளாக்கும். ஒருவேளை அவற்றை எரித்தாலும், சுற்றுச்சுழலுக்கு பாதிப்புண்டு.

இதை சரி செய்ய என்ன தான் வழி? ஆங்கிலத்தில், ‘ஃபாஸ்ட்’ என்னும் பதத்திற்கு ‘ஸ்லோ’ என்பது எதிர்பதம் அல்லவா? அதுபோல, ஃபாஸ்ட் ஃபேஷனை வெல்ல ‘ஸ்லோ ஃபேஷனால்’ முடியும். காரணம், ஸ்லோ ஃபேஷனில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும், பொருட்களின் தரத்தை முதன்மையாகக் கொள்பவை. எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தாலும், தயாரிப்பு முறைகளும், மூலப்பொருட்களின் தரமும் மிகவும் உயர்ந்ததாக இருக்கும். தரம் உயர்ந்ததாக இருப்பதால், வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வாங்குவதே போதுமானது. இந்த வகை ஆடைகளில் உள்ள ஃபைபர் வகையும், சுற்றுச்சுழலுக்கு மாசு விளைவிக்காததாக இருக்கும்.  

       ஸ்லோ ஃபேஷனில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் முழுவதும் எக்கோ-பிரெண்ட்லி [eco-friendly] ஃபைபர் வகைகளும் தயாரிப்பு முறைகளையும் கொண்டவை. எக்கோ-பிரெண்ட்லி என்றால் சுற்றுச்சுழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்போ கெடுதலோ விளை விக்காதவை. ஆர்கானிக் காட்டன், லினென், ஜுட் எனப்படும் சணல் போன்ற ஃபைபர் வகைகள் பயன்படுத்தபடுகின்றன. இவையனைத்தும் இயற்கையின் மூலம் கிடைப்பதால், இவற்றின் ஆயுட்காலமும் அதிகம்; அதேசமயம் குப்பைகளுடன் நிலத்தில் சேரும் பொழுதும், பூமிக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை. மறுசுழற்சி செய்யப்பட்ட சிந்தெடிக் ஃபைபர் வகைகளும் இந்த பிரிவில் உள்ளடங்கும். பல முறை ஒரே வித நெகிழியை மறுசுழற்சி செய்யும் பொழுது, அது தன் நச்சுத்தன்மையை இழந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் அதன் நச்சுத்தன்மை முழுவதுமாக மறைந்து விடுவதற்கும் வாய்ப்புண்டு. ஃபாஸ்ட் ஃபேஷனை விட ஸ்லோ ஃபேஷன் பொருட்களை தயாரிப்பதில் நேரம் அதிகம் தேவைப்படும். ஆர்கானிக் காட்டன் போன்ற ஃபைபர் வகைகளை தயாரித்தல், கைத்தறி செயல்முறையை பின்பற்றுதல் [பெரும்பாலானோர் பின்பற்றுவதும் இந்த முறையே], கடைசியில் ஆடைகளுக்கு மீண்டும் இயற்கையான வழியில் ‘பினிஷிங் டச்’ வழங்குதல், என எல்லா செயல்முறைகளும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்பவை. ‘நெறிமுறையான மற்றும் நிலையான அணுகுமுறை’ என்பதே ஸ்லோ ஃபேஷனின் தாரக மந்திரமாகும்.  

ஃபாஸ்ட் ஃபேஷனைத் தவிர்த்து ஸ்லோ ஃபேஷனை பின்பற்றுவதன் மூலம், நம்மால் முடிந்த அளவிற்கு நாம் வசிக்கும் இந்த உலகை மேலும் காயப்படுத்தாமல் தடுக்கலாம். அதற்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ஃபேஷன் பொருட்களை, குறிப்பாக ஆடைகளை, மாதாமாதம் ஒன்று, இரண்டு அல்லது நினைத்தபோதெல்லாம் வாங்குவதை விடுத்து, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்லோ ஃபேஷன் பொருட்களை வாங்கினாலே போதுமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com