அடிக்கடி சூடுபடுத்தி உண்டால் உயிருக்கு உலை வைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்!

அடிக்கடி சூடுபடுத்தி உண்டால் உயிருக்கு உலை வைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்!

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? குருமா, பொரியல், வறுவல், சிப்ஸ் ஏன் பாயாஸம் கூடச் செய்கிறார்கள் உருளைக் கிழங்கை வைத்து. வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் தவிர ஏனையோருக்கு மிகப்பிடித்த பண்டமான இந்த உருளைக் கிழங்கை சிலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஒரு தடவை வேக வைத்து எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டு ஒரு வாரம் வரைக்கும் தேவையான போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விதம் விதமாகச் சமைத்துச் சப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது முற்றிலும் தவறான பழக்கம் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். ஏன் தெரியுமா?

சமைத்த உருளைக்கிழங்கானது அறை வெப்பநிலையில் சற்று நேரம் ஆற விட்டு விட்டால் பிறகு அதை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது என்பது அதற்கான உணவு விதிகளில் ஒன்று. உருளைக் கிழங்கில் இருக்கும் க்ளாஸ்ட்ரிடியம் பாட்டுலினம் எனும் பாக்டீரியா பாட்டுலிஸம் எனப்படும் ஒவ்வாமைப் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது. இந்த பாக்டீரியாவுக்கு அறை வெப்பநிலையில் பல்கிப் பெருகும் திறன் உண்டு. எனவே பெரும்பான்மையான நேரங்களில் உருளைக் கிழங்கைச் சமைத்தால் உடனடியாகச் சாப்பிட்டோ அல்லது மீதமிருந்தால் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு கொடுத்தோ உடனடியாகக் காலி செய்து விடுவது நல்லது.

ஒருவேளை உருளைக் கிழங்கில் சாலட் செய்யும் முயற்சியிருப்பின் பொருத்தமான பாதுகாப்பான வழிமுறைகளில் சமைத்த உருளைக் கிழங்கை ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.ஆனால், நம் நாட்டில் அது அனாவசியம் என்கிறார்கள் நியூட்ரிசனிஸ்டுகள்.

பீட்ரூட்டுகள்…

பீட்ரூட்டுகளில் நைட்ரேட் சத்து அதிகம் உண்டு. அவற்றை சமைத்த உடன் உடனடியாகச் சாப்பிட்டு விட்டால் நல்ல பலன் கிடைக்கும். ரத்த சுத்திகரிப்புக்கு மிகவும் அவசியமானது பீட்ரூட் என்கிறார்கள். பீட்ரூட்டை நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சூடு படுத்தி சாப்பிடும் போது அவற்றில் அதிகமாக இருக்கக்கூடிய நைட்ரேட்டுகள் … நைட்ரைட்டுகளாக மாறி விடும் சாத்தியமிருக்கிறது. இந்த நைட்ரைட்டுகள் கார்சினோஜெனிக் ஏஜெண்டுகளாகச் செயல்படக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது கேன்சரை உருவாக்கவல்ல அபாயம் கொண்டவை இந்த நைட்ரைட்டுகள் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள்.

வெறும் சாதம்…

வெறும் சாதத்தை மட்டும் சமைத்து எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் வெரைட்டி ரைஸ், பிரியாணி, முட்டை சாதம் என்று சமைத்துச் சாப்பிட்டு ஒப்பேற்றுகிறவர்கள் இப்போது அதிகமாகி வருகிறார்கள். குறிப்பாக பேச்சிலர்கள் மற்றும் 24/7 வேலையில் இருப்பவர்களுக்கு இது எளிதாக இருக்கிறது.

ஆனால், சமைத்த சாதத்தில் இருக்கக் கூடிய பேஸில்லஸ் சிரியஸ் எனும் பாக்டீரியாவானது அறைவெப்ப நிலையில் பல்கிப் பெருகி ஃபுட் பாய்ஸானிங் ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள் எனவே சாதத்தை ஒரு முறை சமைத்து விட்டால் அதை ஸ்டோர் செய்து வைக்கும் பழக்கத்தை விடுத்து அளவாகச் சமைத்து மீதம் வராமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.

செலரி & டர்னிப், முட்டைக்கோஸ் மற்றும் கீரை வகைகள்..

பீட்ரூட்டுகளைப் போலத்தான் இந்த செலரியும், டர்னிப்பும், கீரை வகைகளும், முட்டைக்கோஸும் கூட, பெரும்பாலும் காய்கறிச் சாதம், சாலடுகளில் அதிகம் பயன்படுத்தும் இந்த செலரியை தயவு செய்து எப்போதுமே இருமுறை சூடுபடுத்திச் சாப்பிட்டு விடாதீர்கள். அதே போல கீரையை ஒரே முறை சமைத்தாலும் கூட இரவுகளில் உண்ணும் பழக்கம் வேண்டாம். ஏனெனில் இவற்றில் இருக்கும் நைட்ரேட்டுகள்… நைட்ரைட்டுகளாக மாறி உயிருக்கே உலை வைத்து விடக்கூடிய அபாயம் உண்டு என்கிறார்கள்.

பதப்படுத்தப் பட்ட இறைச்சி…

பதப்படுத்தப்பட்டு மைக்ரோ வேவ் முறையில் சமைக்கப்படும் இறைச்சிகளில் உள்ள கொழுப்பு அது சமைக்கப்படும் போது இரட்டிப்பாகும் என்பதால் அது அதைச் சாப்பிடுபவரின் இதய ஆரோக்யத்துக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியதாக மாறி விடும். எனவே இறைச்சி உண்ண விரும்புபவர்கள் நேரடியாகக் கடைக்குச் சென்று ஃப்ரெஷ்ஷாக வாங்கிச் சமைத்து அதே நாளில் அதைச் சாப்பிட்டுக் காலி செய்து விட வேண்டும். மீதமிருந்தால் அண்டை அயலாருடன் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது உங்களது செல்லப் பிராணிகளுக்கு உண்ணத் தரலாமே தவிர ஃப்ரிஜ் தான் இருக்கிறதே என மிஞ்சியதை எல்லாம் எடுத்து அடுக்கி வாரம் முழுக்க வைத்துக் கொண்டு சாப்பிட்டால் பிறகு உங்களுக்கு வரக்கூடிய வியாதிகளுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.

இவை மட்டுமல்ல, சமைத்து இரண்டு, மூன்று நாட்கள் வரை எந்த ஒரு உணவையும் சேமித்து வைத்து சாப்பிடும் பழக்கம் கூடாது.

அதே போல காஃபீ அருந்தும் பழக்கம் உள்ள சில வீடுகளில் விநோதமாக காஃபியைக் கூட போட்டு மீதமாகி விட்டால் இரண்டு மணி நேரம் கழித்துக் கூட சூடுபடுத்தி அருந்தும் பழக்கம் வைத்திருக்கிறார்கள்.. இது முற்றிலும் தவறான அணுகுமுறை.

இது காஃபீயின் சுவையைக் காலி செய்வதுடன் உடல் நலனுக்கு மோசமான சில விளைவுகளையும் தரவல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆகவே, எதைச் சமைத்தாலும் சரி அளவு தெரியாமல் சமைத்து வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் வாரக் கணக்காக வைத்துக் கொண்டு சாப்பிட்டு உடல் ஆரோக்யத்தைக் கெடுத்துக் கொள்வதை விட;

இன்று முதல் அளவாகச் சமைத்து அன்றே உண்டு நமது உடல் ஆரோக்யத்தை பாதுகாப்போம் எனும் உறுதிமொழியை நாம் மனதார ஏற்றுச் செயல்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com