80 வயதை கடந்து நிற்கும் ஹவுரா பாலம் - சிறப்பு பார்வை!

80 வயதை கடந்து நிற்கும் ஹவுரா பாலம் - சிறப்பு பார்வை!

சென்னை நகருக்கு சென்ட்ரல் ரயில்நிலையம், மும்பைக்கு கேட் வே ஆஃப் இந்தியா போல கொல்கத்தா நகருக்கு ஹவுரா பாலம் அடையாளச் சின்னமாகும். இந்த பாலத்துக்கு இப்போது (பிப். 3 ஆம் தேதி) 80 வயது முடிந்து 81 வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. ஹவுரா மற்றும் கொல்கத்தா நகரங்களை இணைக்கும் இந்த பாலம் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 750 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தினமும் லட்சக்கணக்கான பேர் கடந்து செல்கின்றனர்.

ரவீந்திர சேது என்று அழைக்கப்படும் இந்த பாலத்தில் 24 மணிநேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இரு சக்கர வாகனங்கள், கார், வாடகை டாக்ஸிகள், வேன்கள், பேருந்துகள், இலகுரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. எந்த

நேரத்திலும் இந்த பாலத்தில் நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் செல்லவோ முடியும்.

ஹவுரா பாலத்தின் வரலாறு:

1862 ஆம் ஆண்டில் அப்போது இருந்த பெங்கால் அரசு, கிழக்கிந்திய ரயில்வே நிறுவனத்தின் தலைமை பொறியாளர் ஜார்ஜ் டர்ன்புல் என்பவரிடம் ஹூக்ளி நதியின் குறுக்கில் பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிக்கை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டது. அந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியே பாலம் கட்டுவதற்கான அறிக்கையையும் வடிவமைப்பையும் அவர் தாக்கல் செய்தார். ஆனால், அந்த சமயத்தில் பாலம் கட்டமுடியவில்லை.

முதன்முதலாக 1874 ஆம் ஆண்டில் ஹவுரா பாலம் கட்டப்பட்டது. அது ஒரு மிதவைப் பாலம்தான். பின்னர் 1945 இல், தற்போதுள்ள பாலம் கட்டப்பட்டது. அது ஒரு நெடுங்கை பாலம் (கேன்டீலீவர் பாலம்). பாலத்தின் இரு புறமும் இரும்புதூண்கள் நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இடையில் எந்த ஆதரவும் இருக்காது. இந்த பாலம் கட்டப்பட்டபோது அது மூன்றாவது நீளமான பாலமாக இருந்தது. தற்போது ஹவுரா பாலம்தான் உலகின் 6 வது நீளமான பாலமாகும்.

1906 ஆம் ஆண்டு கொல்கத்தா துறைமுக ஆணையம் கிழக்கிந்திய ரயில்வே தலைமை பொறியாளர் ஆர்.எஸ்.ஹைட் மற்றும் கொல்கத்தா மாநகர தலைமைப் பொறியாளர் டபிள்யூ.பி.மெகாபெ ஆகியோர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அறிக்கையை அடிப்படையாக்க் கொண்டு ஹூக்ளி நதியின் குறுக்கே மிதவைப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பாலத்தை வடிவமைத்து கட்டுவதற்கு 23 நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டன. புதிய ஹவுரா பாலம் அமைப்பதற்கான சட்டம் 1935 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு, அந்த ஆண்டே பாலம் கட்டும் பணி தொடங்கியது.

சில தகவல்கள்:

  • ஹவுரா பாலத்தின் மொத்த நீளம் 750 மீட்டர்.

  • தூண்களின் நீளம் 447 மீட்டர்.

  • தினமும் 1,50,000 பாதசாரிகளும், 1,00,00 வாகனங்களும் பாலத்தை கடந்து செல்கின்றன.

  • தபஸ் சென் என்ற பிரபல கலைவஞர் பாலத்திற்கு ஒளிவிளக்கு அமைத்துக் கொடுத்தார்.

  • இந்த இரும்பு பாலத்தில் நட்டுகளோ அல்லது போல்டுகளோ கிடையாது.

  • 26,500 டன் எடையுள்ள இரும்பு கொண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை டாடா ஸ்டீல் நிறுவனம் சப்ளை செய்துள்ளது.

  • மெஸ்ஸர்ஸ் ரென்டல் பால்மர் அண்ட் டிரிடன் நிறுவனத்தைச் சேர்ந்த வால்டன் என்பவர் பாலத்தை வடிவமைத்துள்ளார்.

  • நோபல் பரிசு வென்ற கவிஞர் ரவீந்தநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1965 ஆம் ஆண்டு இந்த பாலத்துக்கு ரவீந்திர சேது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஹவுரா பாலத்துக்கு எப்படிச் செல்வது?

மேற்கு வங்கத்தின் எந்த பகுதியிலிருந்தும் ரயில் மூலம் ஹவுரா ரயில்நிலயம் செல்லுங்கள். அங்கு கடைசி ரயில்நிலையத்தில் இறங்குங்கள். அங்கிருந்து பார்த்தாலே ஹவுரா பாலம் அதாவது ரவீந்திர சேது பாலத்தை பார்க்க முடியும். கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் இந்த பாலத்தை கடந்துதான் ஹவுரா ரயில்நிலையம் செல்லும். கங்கை நதியில் படகில் சென்றும் ஹவுரா பாலத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். அடுத்த சில ஆண்டுகளில் கொல்கத்தா ஹவுரா மெட்ரோ திட்டப் பணிகள் முடிவடைந்துவிடும். அதன் பின் மெட்ரோ ரயில் மூலம் ரயில்நிலையத்தை அடையலாம். அதன் பின் அங்கிருந்து ஹவுரா பாலத்தின் எழிலை ரசிக்கலாம்.

இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்:

ஹவுரா பாலத்தில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வது தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த வழியாகச் செல்பவர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சுயபடமும் (செல்ஃபி) எடுத்துக் கொள்கின்றனர். ஹவுரா படித்துறையிலிருந்து படகில் பாக்பஸார் நோக்கி சென்றுகொண்டே பாலத்தில் அழகை ரசிக்க முடியும். புகைப்படங்கள் எடுக்கவும் தடையில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவை அம்பன் புயல் தாக்கிய போதிலும் ஹவுரா பாலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கொல்கத்தா துறைமுக கழகம் நிர்வகித்து வரும் ஹவுரா பாலம், கடந்த 2006 ஆம் ஆண்டில் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அப்போது சென்ட்ரல் பாலிடெக்னிக் தலைவராக இருந்த டாக்டர் அனுப் சந்தா எடுத்த முன் முயற்சியின் பேரில், பிரபல ஒளி-ஒலி அமைப்பாளர் தபஸ் சென், பாலத்தை வடிவமைத்து ஒளிவிளக்குகளால் அலங்கரித்தார்.

1958 ஆம் ஆண்டு சக்தி மசந்தா, ஹவுரா பிரிட்ஜ் என்னும் பெயரில் திரைப்படம் எடுத்தார். இதில் மதுபாலாவும், அசோக்குமாரும் நடித்திருந்தனர். நடிகர் ஓம்பிரகாஷ் பாட்டு பாடிக்கொண்டே இந்த பாலத்தை கடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. ஓ.பி.நய்யார் இசையமைப்பில், முகமது ரஃபி இதற்கான பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார்.

இதற்கு பிறகுதான் ஹவுரா பாலம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. ஹவுரா பாலம் படம் தபால் கார்டு அளவில் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டது. விளம்பரங்களும், ஆவணப்படங்களும் வெளிவந்தன.

சத்தியஜித் ராய், ரித்விக் காடக் முதல் ராஜ் கபூர் வரை, விம்ரால், தேவ் ஆனந்த், மணி ரத்னம் என பலரும் தங்கள் படத்தில் ஹவுரா பாலத்தை காட்சிப்படுத்தினர். ஹேமந்த்குமார், கமோஷி படத்தில் ராஜேஷ் கன்னா, வகிதா ரஹ்மான் நடிப்புடன் கிஷோர் குரலில் ஒருபாடலை இங்குதான் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com